தடம் தந்த தகைமை – இஸ்ரயேலரோடு கடவுள் செய்த உடன்படிக்கை
மெரினா ராஜ் - வத்திக்கான்
அசீரிய மக்கள் இன்றுவரை தங்கள் முன்னைய வழக்கத்தையே கைக்கொண்டுள்ளனர். ஆண்டவரிடம் அவர்கள் அச்சம் கொள்வதில்லை; மேலும், ஆண்டவரால் ‘இஸ்ரயேல்’ என்று பெயரிடப்பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட நியமங்களையும் விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் கடைப்பிடிப்பதுமில்லை. ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: “வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்; அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்; அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம். ஆனால், உங்களைப் பேராற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த ஆண்டவருக்கு மட்டுமே நீங்கள் அஞ்ச வேண்டும். அவரையே வணங்கி வழிபட வேண்டும். அவருக்கே பலி செலுத்த வேண்டும்.
அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறவாதீர்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்.” ஆயினும், அவ்வேற்றினத்தார் அதற்குச் செவிகொடாமல் அவர்களது முன்னைய வழக்கத்தின்படியே செய்து வந்தனர். அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்தபோதிலும், தங்கள் தெய்வச் சிலைகளையும் வணங்கி வந்தனர். இன்றுவரை அவர்களுடைய பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் அவர்கள் மூதாதையரைப் போலவே செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்