இஸ்ரயேல் அரசன் எசேக்கியா இஸ்ரயேல் அரசன் எசேக்கியா 

தடம் தந்த தகைமை – இஸ்ரயேல் அரசன் எசேக்கியா

இஸ்ரயேல் அரசன் எசேக்கியா தம் தந்தை தாவீதைப் போலவே அனைத்திலும் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார். அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இஸ்ரயேல் அரசன் ஏலாவின் மகன் ஓசேயா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில், ஆகாசின் மகன் எசேக்கியா யூதாவின் அரசனானார். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அவர் எருசலேமில் இருபத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். செக்கரியாவின் மகளாகிய அபி என்பவரே அவருடைய தாய். அவர் தம் தந்தை தாவீதைப் போலவே அனைத்திலும் ஆண்டவர் திருமுன் நேர்மையுடன் நடந்து வந்தார். அவர் தொழுகை மேடுகளை அழித்து, நடுகற்களைத் தகர்த்து அசேராக் கம்பத்தையும் வெட்டி வீழ்த்தினார். மோசேயால் செய்து வைக்கப்பட்ட வெண்கலப் பாம்புச் சிலையையும் உடைத்தெறிந்தார். ஏனெனில், இஸ்ரயேல் மக்கள் அன்று வரை அதற்குத் தூபங்காட்டி வந்தனர்.

அது “நெகுஸ்தான்” என்று அழைக்கப்பட்டு வந்தது. அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவருக்குப் பின்னோ அவருக்கு முன்னோ இருந்த யூதாவின் அரசர் அனைவரிலும், அவரைப்போல் வேறு எவரும் இருந்ததில்லை. அவர் ஆண்டவர் மீது பற்றுக்கொண்டு அவரிடமிருந்து விலகாமல், ஆண்டவர் மோசேக்கு இட்ட கட்டளைகளைப் பின்பற்றினார். ஆதலால், ஆண்டவரும் அவரோடு இருந்தார். அவர் சென்றவிடமெல்லாம் சிறப்புற்றார். மேலும், அவர் அசீரிய மன்னனுக்கு எதிராக எழுந்து அவனுக்குப் பணிய மறுத்தார். அவர் பெலிஸ்தியரைக் காவல்மாடம் முதல் அரண் சூழ் நகரம் வரை, காசாவினின்றும் அதன் எல்லைக்குள்ளிருந்தும் விரட்டியடித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 11:22