தடம் தந்த தகைமை - மக்கள் பார்க்க வேண்டுமென்று....
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது (மத் 6:1) என்கிறார் இயேசு.
அறம் - தியாகம் செறிந்த திருச்செயல். அது தன்னைக் கடந்த பிறர் நேயத் தன்மையுடையது. முழுக்க முழுக்க இழப்பு மனதோடு அரங்கேற்றப்பட வேண்டிய அகச் செயல்பாடு. அதனில் தம்பட்டமும், விளம்பரமும், தாரை தப்பட்டையும், தலைக்கனமும் மிஞ்சும்போது அறம் அர்த்தமற்றுப் போகின்றது. இயேசு காண நிகழ்வுற்ற அறச்செயல்கள்
யாவும் செல்வாக்கு மனதின் செருக்குகளாகவே வெளிப்பட்டன. அவை விண்ணகத் தந்தையின் அறமல்ல என்பதே இயேசுவின் போதனை.
நம் நாட்டிலும், சமூகத்திலும் அறப்பணிகள் எவ்வித ஆரவாரமுமின்றி இங்குமங்குமாக அன்றாடம் நிகழ்வுறுவது மிகப் போற்றுதற்குரியது. அதே வேளையில் புகைப்படத்திற்காக, நாளிதழ் - வாரச் செய்திகளுக்காக, தன் சரிந்த செல்வாக்கை நிமிர்த்துவதற்காக ஏழையரை இழிவுபடுத்தி நிகழ்த்தும் அறச் செயல்பாடுகள் கேலிக்குரியவை, கேள்விக்குரியவை.
அறத்திற்கான அடிப்படைத் தேவை அடக்கம். அது தியாகத்தோடு வெளிப்படுகையில் யாகமாகத் தெரியும் தெய்வக் கண்களுக்கு. அறமாக வழங்கும் பொருளைவிட அதை அளிக்கும் முறைதான் மதிப்புமிக்கது.
இறைவா! வெளிவேடமற்ற வாழ்வையும் செயலையும் என் இதயத் துடிப்பாகத் தாரும்
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்