மக்கள் கூட்டத்தில் இயேசு மக்கள் கூட்டத்தில் இயேசு 

தடம் தந்த தகைமை : மனம் மாறாவிட்டால்

‘மனம் மாறாவிடில்’ என்பது நம் தீய வழிகளினின்று நம்மை மாற்றுவது மட்டுமல்ல, நமக்குள் ‘விழிப்புணர்வு ஏற்படாவிடில்’ எனவும் அர்த்தமேற்க வேண்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என சிலர் உரைக்க, இயேசுவோ, இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரைவிடப் பாவிகள் என நினைக்கிறீர்களா...? மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள் (லூக் 13:1&3) என்றார்.

அந்நாட்களில் எருசலேம் ஆலயத்திற்குள் புகும் உரிமை உரோமைக் காவலர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் தீவிரவாத உணர்வோடு செயல்பட்ட சில கலிலேயப் போராளிகள் ஆலயத்துள் சென்று புரட்சிக்கு முந்தைய பலி செலுத்திக் கொண்டிருந்ததை மோப்பம் பிடித்துப் பிலாத்து அவர்களைத் தம் தளபதிகளை அனுப்பிக் கொன்றான். யூத மரபுப்படி அக்கொலைகள் ஆலயத் தீட்டு, இன அழிப்பு, சட்ட மீறல் என்றாலும் மௌனம் காத்த விதம் நீதிக்குப் புறம்பானது. இனம் அழிந்தாலும் தங்கள் பதவிகளைப் பாதுகாப்பதில் மிகக் கவனமாயிருந்தனர் திருச்சட்ட அறிஞர்கள்.

இக்கொடூரத்தைக் கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்ததோடு, அவர்கள் பாவிகள் என்ற அவதூறைப் பரப்பி மக்களைத் திசை திருப்பினார்கள். இது நீதிக்கான, உரிமைக்கான போராட்டங்களை எதிர்கொள்ளத் துணியாத உரோமை அரசின் கோழைத்தன அத்துமீறல்.

‘மனம் மாறாவிடில்’ என்பது நம் தீய வழிகளினின்று நம்மை மாற்றுவது மட்டுமல்ல, நமக்குள் ‘விழிப்புணர்வு ஏற்படாவிடில்’ எனவும் அர்த்தமேற்க வேண்டும். அநியாயச் செயல்பாடுகள் மீதான விழிப்பு இல்லாவிடில் நாமும் அழிபடுவோம் என்பதே இயேசுவின் எச்சரிக்கை. மனமாற்றம் என்பது பிடிக்காதவற்றை விடுவது மட்டுமல்ல, பிடித்தவற்றை விடுவதும் கூட.

இறைவா! நீதிக்கான போராட்டங்களில் நிலைப்பாடுடன் நான் ஈடுபட்டு உரிமைகளை வெல்லும் பலம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2024, 14:39