கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ   (AFP or licensors)

கிறிஸ்தவ ஒன்றிப்பே இன்றைய சவால்களுக்கான ஒரே தீர்வு!

தனது அறிக்கையில் கீழை வழிபாட்டின் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் வேரூன்றிய நான்கு திருஅவைகளையும் ஒன்றிப்பை நோக்கிப் பணியாற்ற அழைப்புவிடுத்துள்ளார் கர்தினால் சாக்கோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், கீழை வழிபாட்டுத் திருஅவைகளுக்கிடையில் ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், பிரிவுகளைச் சமாளிக்கவும் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளவும் நடைமுறை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாகவும் Fides செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கர்தினால் சாக்கோ அவர்கள், ஒன்றிப்பு என்பது ஒரு தேவை மட்டுமல்ல, நமது காலத்தின் சவால்களுக்கான ஒரே தீர்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கிறிஸ்தவத் திருஅவைகள் முழுவதும் பகிரப்படும் நீடித்த நம்பிக்கை அறிக்கையான  ‘ஒரே கடவுளை நம்புகிறேன், தூய கத்தோலிக்க மற்றும் திருத்தூதர்கள் வழிவரும்  திருஅவையை நம்புகிறேன்’ என்பதை தனது அறிக்கையில் எடுத்துக்காட்டி தனது கிறிஸ்தவ ஒன்றிப்புக் குறித்த கருத்துக்கு வலுசேர்த்துள்ளார் கர்தினால் சாக்கோ.

பல நூற்றாண்டுகளாக நாம் பிரிந்திருந்தாலும், திருஅவையின் சாரம் ஒன்றுபட்டதாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால், பிளவுகளை 'கிறிஸ்துவின் விருப்பத்திற்கு எதிரானது' என்று விவரித்துள்ளதுடன், கீழை வழிபாட்டுத் திருஅவைகள் நான்கு தனித்துவமான நிறுவனங்களாகத் துண்டு துண்டாக சிதைவதால் ஏற்படும் ஆழமான தீங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஒன்றிப்பு என்பது நாம் முன்னர் இருந்த நிலைக்குத் திரும்புவது அல்ல, மாறாக நாம் என்னவாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது என்று விளக்கியுள்ள கர்தினால் சாக்கோ, பிரிவின் காயங்களைக் குணப்படுத்துவதும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருஅவைகளுக்கிடையில் முழு ஒன்றிப்பை வளர்ப்பதுமே தனது நோக்கம் என்றும் கூறியுள்ளார்.  

மேலும் கீழை வழிபாட்டுத் திருஅவைகளின் புதிய பார்வைக்கான ஆறு நடைமுறை திட்டங்களையும் தனது இந்த அறிக்கையில் கர்தினால் சாக்கோ அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்தேய வழிபாட்டுமுறை திருஅவை, அசிரியன் திருஅவை, பழங்காலத் திருஅவை மற்றும் அசிரியன் நற்செய்தி மைய சீர்திருத்தத் திருஅவை ஆகியவை இதில் அடங்கும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2024, 15:46