மரணதண்டனை தீர்ப்புப் பெற்றவர்களை அடைத்து வைத்திருக்கும் அமெரிக்க சிறைச்சாலை மரணதண்டனை தீர்ப்புப் பெற்றவர்களை அடைத்து வைத்திருக்கும் அமெரிக்க சிறைச்சாலை 

மரண தண்டனையை தடைசெய்ய அமெரிக்க அதிபருக்கு அழைப்பு

மரண தண்டனையை தடைசெய்யவும், மன்னிப்பு, மறுவாழ்வு போன்றவற்றின் ஏற்பாடாக யூபிலி ஆண்டு இருக்க விடுத்த திருத்தந்தையின் அழைப்பு அமெரிக்காவில் வலியுறுத்தப்பட்டுள்ளது

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

தற்போது மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள 40  பேரின் பேரையும் விடுவிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு Catholic Mobilizing Network  கத்தோலிக்க அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களுக்கு  பதவியில் இன்னும் eeRakkuRaiya9 வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில், கத்தோலிக்க போதனைகளைப் பின்பற்றி,மரண தண்டனையில் உள்ள 40 பேரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது என்றும் அமைப்பின் நிர்வாக இயக்குனர் Krisanne Vaillancourt Murphy  தெரிவித்துள்ளார்.

ஒருவர் மிகக் கடுமையான குற்றம் செய்தாலும்  மனித மாண்பின் அடிப்படையில் அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட முடியாது என்று 2018ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் திருஅவையின் எதிர்ப்பை வலியுறுத்தினார்.

நற்செய்தியின் ஒளியில்  மரண தண்டனை ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும், அது தனி நபர் மற்றும் மனித மாண்பின் மீதான தாக்குதல் என்றும், உலகெங்கிலும் அரங்கேற்றப்படும் மரண தண்டனையை ஒழிப்பதற்காக திரு அவை உறுதியுடன் செயல்படும்  என்றும் திரு அவையின் படிப்பினை கற்பிக்கிறது.

ஜூன் 2021இல் பைடன் அவர்கள் மரணதண்டனைகளுக்கு தற்காலிகத் தடை விதித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்க அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Donald Trump  அவர்கள் மரண தண்டனை குறித்த இந்த இடைநிறுத்தத்தை மாற்றியமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார் Murphy.

மேலும், ஜனவரி மாத இறுதியில் பதவியேற்கவுள்ள Trump அவர்கள் மரண தண்டனையை  விரிவுபடுத்துவதற்கும், விரைவுபடுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளார் என்றும் Murphy கூறியுள்ளார்.

பழைய ஏற்பாட்டில் தன் அடிப்படையைக் கொண்ட, கடவுள் மற்றும் பிற மக்களுடன் சரியான உறவை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான ஒரு புனித ஆண்டு, வரவிருக்கும் இந்த நம்பிக்கையின் யூபிலி ஆண்டு என்றும், அமெரிக்க அரசுத்தலைவர் பைடன் அவர்களின் இந்த கடைசி மாதம்  2025ஆம் நம்பிக்கையின் யூபிலி ஆண்டின் தொடக்கத்துடன் பொருத்தமாக அமைகிறது என்றும் CMN அமைப்பின் நிர்வாக இயக்குனர்  தெரிவித்துள்ளார்.

சிறைப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிப்பது, சமுதாயத்தை சமநிலைப் படுத்துவது போன்ற விவிலிய பாரம்பரியத்துடன் பிணைக்கப்பட்டுள்ள   2025   யூபிலி ஆண்டு, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு என்றும் Murphy கூறியுள்ளார்.

கத்தோலிக்க நம்பிக்கைக் கொண்ட  ஜோ பைடன் அவர்களுக்கும் இந்த சிறப்பு பொருந்தும் என்றும் கூறியுள்ள Murphy  அவர்கள், இந்த யூபிலி ஆண்டு நீதி மற்றும் இரக்கத்தை மறுசீரமைக்கவும் வலியுறுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திருஅவையின் மாபெரும் யூபிலி ஆண்டை முன்னிட்டு மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்றும், மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு போன்ற கிறிஸ்தவ விசுவாசத்திற்கு முரணான அனைத்து செயல்பாடுகளையும் அகற்றும் ஓர் ஏற்பாடாக இந்த யூபிலி ஆண்டு இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதையும் எடுத்துரைத்துள்ளார் CMN அமைப்பின் நிர்வாக இயக்குனர்.

மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கையின் உறுதியான அடையாளத்தை உலகிற்கு வழங்க, அமெரிக்காவுக்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பு  என்றும்  Murphy அவர்கள் தெரிவித்துள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவை மேற்கொள்ள பைடன் அவர்களுக்கு யூபிலி ஆண்டு பொருத்தமான நேரம் என்றும் கூறிய Murphy அவர்கள், பைடன் அவர்கள் மரண தண்டனைக்குத் தடைவிதிக்கும் இந்த முடிவினை எடுத்தால் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எதிரொலியை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 November 2024, 15:43