தங்கள் உரிமைகளுக்காகப்  போராடும் தலித் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்) தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தலித் கிறிஸ்தவர்கள் (கோப்புப் படம்) 

தலித் கிறிஸ்தவ இட ஒதுக்கீட்டுக்கான இந்தியக் குழுவிற்கு கால நீட்டிப்பு!

கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மதங்கள் சமத்துவம் பற்றியே வலியுறுத்துகின்றன என்று கூறி அவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகளை இந்திய அரசு மறுத்து வருகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சமூக ரீதியாக ஏழை கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நாட்டின் உறுதியான செயல் கொள்கைக்கு தகுதியானவர்களா என்பதை ஆய்வு செய்ய நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குழுவுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதை இந்தியத் தலத்திருஅவை தலைவர் ஒருவர் பாராட்டி வரவேற்றுள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) கிறிஸ்தவ ஒன்றிப்புசார் அலுவலகத்தின் செயலாளர் அருள்பணியாளர் அந்தோணி தும்மா அவர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் அதன் பணியை முடிக்க முடியாமல் போனதால், இக்குழுவிற்கு வழங்கப்பட்ட நீட்டிப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் அலுவலகம், பணியாளர்கள் மற்றும் பிற வசதிகள் கிடைக்காததால் குழு தனது பணியை தாமதமாக தொடங்கியது என்றும், இச்சூழலில் இந்தக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது வரவேற்கத் தக்கது என்றும் கூறியுள்ளார் அருள்பணியாளர் தும்மா.

3 பேர் கொண்ட குழுவின் தலைவராக இருந்த முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணனுக்கு அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் அதன் பணிகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் இந்தக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட தலித் சமூகங்களில் இருந்து வரும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு உறுதியான செயல் கொள்கையின் பலன்களை விரிவுபடுத்தலாமா என்பதை ஆய்வு செய்து பரிந்துரை செய்ய பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு 2022-இல் இந்த ஆணையத்தை நியமித்தது என்றும் கூறுகிறது அச்செய்தி நிறுவனம்.

இந்தக் கொள்கையின் பலன்களில் கல்வி நிறுவனங்களில் இடங்கள், அரசு வேலைகள் மற்றும் தேர்தல் அரசியல் ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்தச் சலுகைகள் தற்போது இந்து, சீக்கியம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

சாதிய பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர முயலும் தலித் கிறிஸ்தவர்களின் மனு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2024, 13:56