அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ். அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ்.  

நேர்காணல் – எதிர்நோக்கின் திருப்பயணிகள் புத்தக விளக்கம் - பகுதி 1

சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ் அவர்கள்,2017ஆம் ஆண்டு முதல் திருச்சி, புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் விவிலியப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
நேர்காணல் –அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

யூபிலி 2025 ஆம் ஆண்டிற்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாண்டு வெளியிடப்பட்ட எதிர்நோக்கின் திருப்பயணிகள் யூபிலி 2025  என்ற புத்தகம் பற்றிய குறிப்புக்களை இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ். சிவகங்கை மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணி முனைவர் செ. மைக்கில் ராஜ் அவர்கள், இறையியலில் இளங்கலைப் பட்டத்தை திருச்சி, புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் பெற்று 1996ஆம் ஆண்டு குருத்துவ அருள்பொழிவு பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் இளங்கலைப் பட்டமும் ஆங்கிலத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். புதுடெல்லி இந்திராகாந்தி திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் (B.Ed) பெற்றள்ள தந்தை அவர்கள், 2000 - 2008ஆம் ஆண்டு வரை பெல்ஜியத்தில் லுவைன் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும், திருஅவைச் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தூலூஸ் நகரில் உள்ள கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள தந்தை அவர்கள், 1997 முதல் 2000ஆம் ஆண்டு வரை தமிழக ஆயர் பேரவையின் மாபெரும் யூபிலி ஆண்டு 2000 தயாரிப்புக் குழுவில் இணைச் செயலராகப் பணியாற்றினார். 2008 முதல் 2012 வரை இராமேஸ்வரம் பங்குப் பணியாளராகவும், புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராகவும், 2012ஆம் ஆண்டு முதல் 2017 வரை சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் திருச்சி, புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் விவிலியப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ள தந்தை அவர்கள் தற்போது உரோமையில் உருவாக்குநர் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றார்.

சீடராவோம்... சீடராக்குவோம், உடன் உழைப்பாளர்களுக்கு பவுலின் பரிந்துரைகள், திருவிவிலியத்தில் ஆசிமொழிகள், அன்பிரக்கம்: கொரோனா தொற்றும் எழுச்சி பெறும் இறைநம்பிக்கையும், திருவிவிலிய விளக்கம்: எசேக்கியேல், இதயத்தில் இயேசுவாய்... பணியில் பவுலாய்,  சீடத்துவ வாழ்வியல்: சீடத்துவ வாழ்வுக்கு விவிலிய அடித்தளம் என்பன அருள்தந்தையின் பிற நூல்களாகும். தந்தை அவர்களை எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற அவரது புத்தகம் குறித்தக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2024, 11:13