தூய பவுல் தூய பவுல்  (© - Ruddi Hansen 2015)

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – யூபிலி ஆணை மடல் பகுதி 4 - பொறுமை

பொறுமையும், தூய ஆவியின் கனியும், எதிர்நோக்கை உயிர்ப்புடன் வைத்து, அதை ஒரு நல்லொழுக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் ஒருங்கிணைக்கிறது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருத்தூதர் புனித பவுல் மிகவும் யதார்த்தமானவர். வாழ்க்கை இன்பமும் துக்கமும் கொண்டது என்பதை நன்கு அறிந்தவர். துன்பங்கள் அதிகரிக்கும் போதும், நம்பிக்கை சிதைக்கப்படும்போதும் அன்பு சோதிக்கப்படுகிறது என்பதை அறிந்தவர். எனவே தான் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம் என எழுதுகின்றார். இக்கட்டுகளும் துன்பங்களும் நற்செய்தி அறிவிப்பவர்களுக்கு ஏற்படும் சவால்கள் என்பதை உணர்ந்தவர் அவர். அத்தகைய இருள் நிறைந்த துன்பச் சூழ்நிலைகளில், இருளின் வழியாக ஒருவர் கிறிஸ்துவின் ஒளியைப் பார்க்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலில் இருந்து பாயும் வலிமையினால் நற்செய்தியை நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதாகக் கண்டறிகின்றார். நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு நல்லொழுக்கத்தின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கிறது. பொறுமை. அவசரமாக மாறிவிட்ட உலகில், இப்போது எல்லாவற்றையும், விரைவாக அடைவதற்கு நாம் பழகிவிட்டோம். இனி ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கோ, குடும்பங்களில் கூடி நிதானமாக பேசுவதற்கோ நேரமில்லாது கடினமாகிவிடுகின்றது. நமதுஅவசர குணத்தால் பொறுமையை விரட்டியடித்து, மக்களுக்குப் பெரும் தீங்கு செய்கிந்றோம். உண்மையில், பொறுமையின்மை, பதட்டம் தேவையற்ற வன்முறை ஆகியவை அதிருப்தியையும் மூடிய மனநிலையையும் நம்மில் உருவாக்குகின்றன.

இணைய யுகத்தில் பொறுமை என்பது நமது இல்லங்களில் இல்லாமல் போகின்றது. படைக்கப்பட்ட இவ்வுலகை ஆச்சரியத்துடன் நம்மால் பார்க்க முடிந்தால், பொறுமை எவ்வளவு உறுதியானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். புனித பிரான்சிஸ் அசிசி படைப்பை ஒரு குடும்பமாக உணர்ந்து சூரியனையும் சந்திரனையும் சகோதர சகோதரி என்று அழைத்தார்.  கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக என்று தனது மடல்களில் அடிக்கடி மனஉறுதியையும் ஊக்கத்தையும் வலியுறுத்துகின்றார் புனித பவுல். பொறுமையும், தூய ஆவியின் கனியும், எதிர்நோக்கை நம்மில் உயிர்ப்புடன் வைத்து, அதை ஒரு நல்லொழுக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் ஒருங்கிணைக்கிறது. எனவே, எதிர்நோக்கின் குழந்தையாகும் அருளையும், அதைத் தாங்கி நிற்கும் பொறுமையின் அருளையும் அடிக்கடி இறைவனிடம் கேட்கக் கற்றுக் கொள்வோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2024, 09:45