மணிப்பூர் கலவரம் மணிப்பூர் கலவரம்  

கலவரத்தால் மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி முதல் இடம்பெற்ற வரலாறு காணாத வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் : யூக்கான் செய்தி நிறுவனம்

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

இந்தியாவில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் பூர்வகுடி கிறிஸ்தவர்களுக்கும் மெய்தி இன மக்களுக்கும் இடையிலான புதிய வன்முறை, இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளதால் அவர்கள் உதவியற்றவர்களாக  உணர்வதாக தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

நவம்பர் 18, இத்திங்களன்று நிகழ்ந்த,  அரசுத் தலைவர்களுடனான அவசரக் கூட்டத்திற்குப் பிறகு, மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் N Biren Singh  அவர்கள் அமைதியை உறுதியளித்தார் என்றும், மாநிலம் முழுவதும் குழப்பமும் சட்டமின்மையும் அன்றாட நிகழ்வாகிவிட்டதாக மக்கள் கூறுவதாகவும் யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மணிப்பூர் மாநில முதல்வர் N Biren Singh  அவர்கள் மெய்தி இனத்தைச் சார்ந்தவர் என்பதால், குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கிடையான மோதலில் தனது சமூகத்திற்கு முதல்வர் ஆதரவாக இருப்பதாக பூர்வகுடி மக்களால் குற்றம் சாட்டப்படுகிறார் என்றும் அச்செய்தி நிறுவனம் மேலும் உரைக்கிறது.

இதற்கிடையில், மாநில தலைநகர் இம்பால் உள்ளிட்ட  பகுதிகளில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் மூடப்பட்டன என்றும், நவம்பர் 16 அன்று 3   சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு, முதலமைச்சரின் வீடு  தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் இணைய முடக்கத்தை அறிவித்துள்ளது என்றும் செய்தி  நிறுவனம் கூறுகிறது.

மளிகைக் கடைகள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்ட நிலையில்,காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் பற்றாக்குறையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும், இதனால் மணிப்பூர் மக்கள் முற்றிலும் உதவியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக அம்மக்களின் மனநிலையை அச்செய்தி நிறுவனம் எடுத்துரைக்கிறது.

குக்கி சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உட்பட, நடத்தப்பட்ட  வன்முறைகளுக்கு ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கடத்தல், கொலைகள் மற்றும் தீ வைப்பு தொடர்பான விசாரணைகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் (NIA) ஒப்படைக்கப்படும் என்று சிங் கூறியுள்ளார்.

உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்வதை பற்றி தங்களால் சிந்திக்கக் கூட இயலாத நிலையில் இருப்பதாகவும், ஏனெனில் அவ்வாறு உதவுவது, இரு இனத்தவருக்கும் தீமையை விளைவிக்கும் என்றும் மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் உள்ள திருஅவைத் தலைவர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே 3-ஆம் தேதி முதல் நடந்த வரலாறு காணாத வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் என்றும், ஏறத்தாழ 360 வழிபாட்டுத்தலங்கள் எரிக்கப்பட்டுள்ளன என்றும், அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு தலையிட்டு மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்று குக்கி இனத் தலைவர்கள் வலியுறுத்துவதாகவும் அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2024, 15:17