அன்னை ஓர் அதிசயம் – கார்மேல் மலை அன்னைமரியா திருத்தலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கார்மேல் மலை அன்னைமரியா திருத்தலம் கார்மேல் துறவு சபையோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. இச்சபையினர் கார்மேல் என்ற பெயரைத் தேர்ந்து கொண்டதற்கும் இம்மலைக்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. கார்மேல் மலை, பாலஸ்தீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. இதற்கு எபிரேயத்தில் “அழகிய தோட்ட நிலம்” என்று பொருள். இப்பெயருக்கேற்ப, அழகிய தோட்ட நிலமாகிய புனித கன்னி மரியா, நம் மீட்பராம் இயேசு கிறிஸ்துவை இவ்வுலகுக்குக் கொணர்ந்தார். கார்மேல் மலையின் வரலாறு, இறைவாக்கினர் எலியா, பாகால் வேற்றுத் தெய்வத்தின் பொய்வாக்கினர்களை வெற்றி கண்ட ஏறக்குறைய கி.மு.860ம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. இதனை அரசர்கள் முதல் புத்தகம் 18:19-40ல் வாசிக்கிறோம். அரசன் ஆகாபு, பாகால் தெய்வத்தை வணங்கி வந்த அரசி ஈசபேலைத் திருமணம் செய்தார். அதன்பின்னர் ஆகாபு இந்தப் பாகால் தெய்வத்துக்கு கோவிலும் கட்டினார். அதை இறைவாக்கினர் எலியா வன்மையாய்க் கண்டித்தார். இதனால் பாகாலின் பொய்வாக்கினர்கள், எலியாவைக் கண்டித்தனர். அப்போது எலியா, உண்மைத் தெய்வம் யார் என்பதை நிரூபிக்குமாறு அவர்களுக்கு ஒரு சவால் விட்டார். அச்சவாலை நிறைவேற்ற அவர் தேர்ந்தெடுத்த இடம் கார்மேல் மலை. பாகாலின் நானூற்றைம்பது பொய்வாக்கினர்களும், அசேராவின் நானூறு பொய்வாக்கினர்களும் எலியாவால் தோற்கடிக்கப்பட்டனர். எலியா உண்மைக் கடவுள் யார் என்று காட்டினார். இதனால் பாகாலின் பொய்வாக்கினர்கள் கொல்லப்பட்டனர். இதைக் கேள்விப்பட்ட ஈசபேல், எலியாவைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டினார். இறைவாக்கினர் எலியா கார்மேல் மலையில் மறைந்து வாழ்ந்தார். பின்னர் இறைவாக்கினர் குழு ஒன்றும் எலியாவோடு சேர்ந்து கொண்டது. அவர்கள் கார்மேல் மலையில் குகைகளில் வாழ்ந்து இறைவனிடம் செபிப்பதில் நாள்களைச் செலவழித்து அமைதியில் வாழ்ந்து வந்தனர்.
கார்மேல் மலையின் அடிவாரத்தில் உள்ள நாசரேத்தில்தான் புனித கன்னிமரியா வாழ்ந்தார். இயேசு தன்னிடம் பிறப்பதற்கு ஆகட்டும் என்று அங்குதான் சொன்னார். இம்மலையில் இறைவாக்கினர் குழுவினர் தொடர்ந்து வாழ்ந்து வந்தனர். இயேசு பிறந்த பின்னர் ஏரோது அவரைக் கொல்லத் தேடியபோது மரியாவும் புனித வளனும் அவரை எகிப்துக்குக் கொண்டு சென்றனர். ஈராண்டுகள் கழித்து அவர்கள் நாசரேத்துக்குத் திரும்பியபோது இந்த கார்மேல் மலைக்குச் சென்று, பின்னர் நாசரேத்து திரும்பியுள்ளனர். இத்திருக்குடும்பத்தைப் பார்த்த அந்த இறைவாக்கினர்கள் இயேசுவை தங்கள் மீட்பராக ஏற்றனர். இவ்விறைவாக்கினர்களைப் பின்பற்றி இந்தக் கார்மேல் மலையில் வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த கிறிஸ்தவத் துறவிகளுக்கும், அன்னைமரியாவுக்கும் தொடர்பு இருந்திருக்கின்றது. அன்னைமரியா மீது இவர்கள் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். அன்னைமரியா இறந்த பிறகு அவர் வாழ்ந்த வீட்டை கார்மேல் மலையில் வாழ்ந்தவர்கள்தான் கண்காணித்து வந்துள்ளனர். 12ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும், 13ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலும் இந்தக் கார்மேல் மலையில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவத் துறவிகளும், தங்களை இறைவாக்கினர் எலியாவின் ஆன்மீக மகன்கள் என்றே அழைத்தனர். இவர்கள் இறைவாக்கினர்கள் எலியா, எலிசா ஆகியோரின் போதனைகளின் வழியில் தியானயோக வாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்கள் அன்னைமரியாமீது கொண்டிருந்த அளவற்ற பக்தியால், தங்களின் துறவு இல்லத்துக்கு மத்தியில் ஓர் ஆலயத்தைக் கட்டி, அதை புனித கன்னி மரியாவுக்கே அர்ப்பணித்தனர். இதன்மூலம், அந்த ஆலயம் கார்மேல் மலை அன்னைமரியா ஆலயம் என்று பெயர் பெற்றது. அத்துறவிகள், தங்களது சபைக்கும், “கார்மேல் அன்னை மரியின் சகோதரர்கள்” என்றே பெயர் சூட்டினர். இவர்கள் பொதுவாக “Carmelites” என்று அழைக்கப்படுகின்றனர். இத்துறவிகளுக்கு கார்மேல் மலை அன்னைமரியாதான் பாதுகாவலர். இத்தாயின் திருவிழா இச்சபையினருக்குப் பெரிய விழாவாகும். ஆண்டுதோறும் ஜூலை 16ம் தேதி கார்மேல் மலை அன்னைமரியா திருவிழா திருஅவையில் சிறப்பிக்கப்படுகிறது.
Saracen இனத்தவர் கார்மேல் மலையை ஆக்ரமித்ததால் இங்கு வாழ்ந்த பல புனிதமான கார்மேல் சபைத் துறவிகள் புனித பூமியைவிட்டு கட்டாயமாக வெளியேற வேண்டியிருந்தது. பிரான்சின் 9ம் லூயி அரசர் அவர்களை பிரான்சில் ஏற்றுக் கொண்டார். அவர்கள் அவ்வாறு புனித பூமியைவிட்டு வெளியேறும்போது சால்வே ரெஜினா-வாழ்க மரியே என்று பாடிக்கொண்டு வந்தனர். வழியில் அன்னைமரியா அவர்களுக்குக் காட்சி கொடுத்து நான் உங்களுக்கு கடலின் விண்மீனாக இருப்பேன் என உறுதி கூறினார். வழியில் சில துறவிகள் சைப்ரசில் தங்கி விட்டனர். சிலர் இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் தங்கி விட்டனர். இன்னும் சிலர் பிரான்சுக்கும், சிலர் இங்கிலாந்துக்கும் சென்றனர். பிரபு Richard de Grey, Kentன் Alyesfordல் இவர்களுக்கு அடைக்கலம் அளித்தார். இங்கிலாந்தில் சீமோன் ஸ்டாக் (Simon Stock) என்பவர் இந்தத் துறவிகளுடன் சேர்ந்தார். இவர் 12 வயதுச் சிறுவனாக இருந்தபோதே, கருவாலி மரத்தின் அடிப்பாகத்தில் குடைந்து அதில் ஒரு துறவிபோல வாழ்ந்தார். ஆதலால் கார்மேல் சபைத் துறவிகள் இங்கிலாந்து வந்தவுடன் அவர்களுடன் சேர்ந்தார். இவர் பின்னர் கார்மேல் சபையின் 6வது தலைவராக நியமிக்கப்பட்டார். கேம்பிரிட்ஜ்(1248), ஆக்ஸ்ஃபோர்டு(1253), பாரிஸ்(1260), பொலோஞ்ஞா(1260) போன்ற முக்கிய நகரங்களில் சபையின் இல்லங்களை நிறுவினார். இவர் காலத்தில் சபை பல நாடுகளில் பரவியது. ஆயினும் அந்தப் புதிய சபை பல பிரச்சனைகளை எதிர்கொண்டது. அவர்களின் மேலாடையைப் பலர் கிண்டல் செய்தனர். ஏற்கனவே இருக்கும் துறவு சபைகள் போதும் என்று சிலர் கூறினர். மேலும், வயதான மற்றும் இளம் துறவிகளுக்கிடையே பிரச்சனை எழுந்தது. 1251ம் ஆண்டில் சீமோன் ஸ்டாக், தனக்கு ஒரே புகலிடமும் நம்பிக்கையும் அன்னைமரியா என்பதை உணர்ந்து, அத்தாயிடம் கண்ணீரோடு செபித்தார். அச்செபத்துக்குப் பலனும் கிடைத்தது. 13ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகளோ வணிகமோ இல்லை. நிலத்தை நம்பித்தான் மக்கள் வாழ்ந்தனர். எனவே கார்மேல் சபைத் துறவியரும் பண்ணையாள்களாக வேலை செய்தனர்.
கார்மேல் மலை அன்னைமரியா பக்தி, கறுத்த ஆரஞ்சு நிற உத்தரிய பக்தியோடு தொடர்பு கொண்டுள்ளது. மத்திய காலத்தில் ஐரோப்பாவில் உத்தரியம் அணிவது புதிது அல்ல. ஆதீன சபைகள் வளர ஆரம்பித்ததிலிருந்து ஏறக்குறைய கி.பி.550ம் ஆண்டில் உத்தரியம் அணிவது பரவலாக இருந்துவந்தது. உத்தரியம் என்பது ஒருவித ஆடை. இரண்டு பிரிவுகளாக உள்ள ஒரு துணியை தலைவழியாக மாட்டி ஒன்று முன்பக்கமும் மற்றது பின்பக்கமும் தொங்கவிடப்படும் ஆடையாகும். எனது நுகம் இனிது, எனது சுமை எளிது (மத்.11,30) என்று இயேசு சொல்லியிருப்பதை நினைவுகூர்ந்து துறவிகள் இந்த உடுப்பை அணிந்தனர். இதன்மூலம், இறைப்பணியின் இனிய சுமை தங்கள்மேல் இருப்பதாக உணர்ந்து நாள் முழுவதையும் இறைவனுக்கு அர்ப்பணித்துப் பணி செய்தனர். பண்ணையாள்கள், முதலாளிகளிடம் தங்களை அர்ப்பணிப்பது போன்று, துறவிகள் தங்களை இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்ந்தனர். எனவே அன்னைமரியாவும், பாரம்பரியமாக மற்றும் பரவலாக நடைமுறையிலிருந்த உத்தரியத்தைத் தேர்ந்தெடுத்தார். சீமோன் ஸ்டாக் செபம் கொண்டிருந்தபோது அவருக்கு அன்னைமரியா தோன்றி அவரிடம் கறுப்பு ஆரஞ்சு வண்ண உத்தரியத்தைக் கொடுத்து உறுதிமொழிகளையும் கொடுத்தார். இக்காட்சி நடந்தது 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியாகும். அக்காட்சியின்போது அன்னைமரியா சீமோன் ஸ்டாக்கிடம்...
“இந்த உத்தரியத்தை எடுத்துக்கொள், இது மீட்பின் அடையாளமாகவும், ஆபத்தில் பாதுகாவலாகவும், அமைதியை அளிப்பதாகவும் இருக்கின்றது. இந்த உத்தரியத்தைப் பக்தியோடு தொடர்ந்து அணிந்து கொள். இது எனது ஆடை. இதை நீ அணிந்திருக்கிறாய் என்றால் எப்போதும் எனது நினைவாக இருக்கின்றாய் என்று பொருள். எனவே நானும் உன்னை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பேன், நீ பேரின்ப பெருவாழ்வு அடைய உனக்கு உதவி செய்வேன். இறக்கும்போது இதை அணிந்துள்ளவர்கள் நித்திய நெருப்பினால் துன்புறமாட்டார்கள்” என அன்னைமரியா உறுதி அளித்தார் என்று பாரம்பரியமாக நம்பப்பட்டு வருகிறது.
உலகில் இந்த உத்தரிய பக்தி 15ம் நூற்றாண்டிலிருந்து பரவ ஆரம்பித்தது. கார்மேல் மலை அன்னைமரியா திருவிழாவை, உத்தரிய விழா என்று பல கத்தோலிக்கர் அழைக்கின்றனர். இந்த உத்தரியத்தின்மீது சிறப்பு பக்தி கொண்டு இதை அணிகின்றவர்களுக்கு அன்னைமரியா சிறப்பு வரங்களை அருளுவார் என்ற நம்பிக்கையும் தொடர்ந்து இருந்து வருகின்றது. புதுநன்மை வாங்கும் நாளில் சிறுபிள்ளைகள் கழுத்தில் இந்த உத்தரியத்தைப் போடும் பழக்கம் இன்றும் திருஅவையில் பரவலாக இருந்து வருகிறது. பல கிறிஸ்தவர்கள் நம்பிக்கையுடன் தங்களது கழுத்தில் இதனை அணியும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
கிறிஸ்தவர்கள் இந்த உத்தரியத்தை கழுத்தில் அணிந்திருந்தால் மட்டும் போதாது. மாறாக கிறிஸ்தவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும். கிறிஸ்தவர்கள் என்பதை வாழ்வில் காட்ட வேண்டும். அவர்களின் செயல்கள் கிறிஸ்துவின் விழுமியங்களைப் பிரதிபலிக்க வேண்டும். வாழ்வில் அன்பு ஆணிவேராக இருக்க வேண்டும். ஏனெனில் இறையன்பும் பிறரன்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்று பிரிக்க முடியாதவை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்