லெபனோனில் போர்ச்சூழல் லெபனோனில் போர்ச்சூழல்   (AFP or licensors)

லெபனோனில் உடனடி போர்நிறுத்தத்திற்கான வேண்டுகோள்!

மத்திய கிழக்கில் உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது வேண்டுகோளை மீண்டும் முன்வைத்துள்ளார், லெபனோன் மரோனைட் கத்தோலிக்க திருஅவையின் முதுபெரும் தந்தை Bechara Boutrous Ra’i.

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

மத்திய கிழக்கில்  உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது வேண்டுகோளை மீண்டும் முன்வைத்ததுடன்  இரக்கமற்ற போரில் எல்லாரும் தோற்கடிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களே என்று  லெபனோன் மரோனைட் கத்தோலிக்க  திருஅவையின் முதுபெரும் தந்தை, கர்தினால் Bechara Boutrous Ra’i  கூறினார்.

நவம்பர் 3 ஆம் தேதி ஞாயிறு திருப்பலியில், விண்ணரசின் திறவுகோல்களை உன்னிடம் தருவேன் என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை மையமாகக் கொண்டு மறையுரையை  வழங்கினார் முதுபெரும் தந்தை.

இயேசுவின் வார்த்தைகளின்படி  திருஅவையில் அதிகாரம் என்பது மனிதத்தைச் சார்ந்தது அல்ல, தெய்வீகமானது என்றும், ஆனால் நாடுகளில் மக்களின் விருப்பமே அதன்  சட்டபூர்வத்தன்மைக்கு ஆதாரமாக இருப்பதால், அதிகாரம் என்பது மனிதத்தன்மை வாய்ந்தது என்றும் கூறினார் கர்தினால் Boutrous Ra’i.

இவ்வாறு கூறிய கர்தினால் Boutrous Ra’i   அவர்கள், லெபனோனில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தற்போது நடைபெறும் போர் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும், நவீன ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் இரக்கமின்றி பயன்படுத்தப்படும் மிகுந்த அழிவுக்குரிய போரை நாம் எதிர்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

போரால் வீடுகள், நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள்  போன்றவை அழிக்கப்பட்டதாலும், ஏறக்குறைய 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை இடம்பெயரச் செய்ததாலும் மக்கள் போருக்கு  எதிராக உள்ளனர்  என்றும்  கூறினார் கர்தினால் Boutrous Ra’i.

மத்திய கிழக்கில் உள்ள லெபனோன்  நாடு அமைதியான நாடு என்றும், மக்கள் தொகையில் அதிகமான மக்கள் கிறிஸ்தவர்களே என்றும் கூறிய கர்தினால் Boutrous Ra’i அவர்கள், போரினால் தற்போது மிகுதியான மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் என்றும், இவை லெபனோன் மக்களிடையே சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகளுக்கு ஒரு காரணமாக மாறும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்தார்.

நெருக்கடியான இந்த போர்ச்சூழலில் லெபனோனுக்கு உதவி வழங்கிய வெளிநாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்து தனது மறையுரையை  நிறைவு செய்த முதுபெரும் தந்தை Boutrous Ra’i அவர்கள்,   போர் நிறுத்தத்தை நோக்கி செயல்படுமாறு பன்னாட்டு  அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், இன்னும் எவ்வளவு காலம் இந்த போர்? என்ற கேள்வியுடன் தனது வேதனையையும் வெளிப்படுத்தினார் முதுபெரும் தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2024, 14:07