கர்தினால் Pierbattista Pizzaballa கர்தினால் Pierbattista Pizzaballa  (Vatican Media)

புனித பூமியில் அமைதி நிலவ வேண்டுகோள்

கடவுளுடனான நெருங்கிய வாழ்வுக்கு சான்று பகரவும், கடவுளின் அன்பினால் பிறருக்கு வாழ்வளிக்கவும் புனித பூமியில் உள்ள மக்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கர்தினால் Pizzaballa எடுத்துரைத்தார்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

புனித பூமியில் அமைதி ஏற்பட ஜெபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் எருசலேம் நகரின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Pierbattista Pizzaballa.

புனித பூமியில் வாழும் மக்களிடையே காணப்படும் உறவுகள், கடவுளின் பிரசன்னத்தையும், அவருடனான நெருக்கத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று போலந்து நாட்டில் Lublin நகரில்  இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘எருசலேம் அமைதிக்காக ஜெபியுங்கள்’ (திபா 122: 6)   என்ற உலகளாவிய மாநாட்டிற்கு எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை தனது செய்தியை அனுப்பியுள்ளார்.

எருசலேமில் அமைதி நிலவ ஜெபிப்பது உண்மையில் உலகம் முழுவதும் அமைதியில் நிலைப்பதற்கான ஓர் அழைப்பு என்று கூறியுள்ளதுடன், புனித பூமியின் சிக்கலான மற்றும் சவாலான சூழலில் எருசலேமில் அமைதிக்கான    விவிலிய வார்த்தைகளையும் தனது செய்தியில் நினைவு கூர்ந்துள்ளார் கர்தினால்.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு, அமைதி என்பது திருஅவையின் வாழ்வுக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, மாறாக, அமைதி மற்றும் அமைதியை தேடுவது என்பது திருஅவையின் அடையாளம் மற்றும் திருஅவை மேற்கொள்ளும் பணிகளுக்கு மிகவும் இன்றியமையாதது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக அமைதியின் முகமே கடவுளின் முகம் என்றும், திரு அவையின் பணி இறைவனை அறிவிப்பதே என்றும் கூறியுள்ளார் கர்தினால் Pizzaballa.

புனித பூமியில் திருஅவையின்  பணியைப் பற்றி எடுத்துரைத்த முதுபெரும் தந்தை Pizzaballa அவர்கள், விவிலியத்தின் திருவெளிப்பாட்டு நூலிலிருந்து கூடாரம், மணமகள் ஆகிய இரண்டு உருவகங்களை குறிப்பிட்டு, கூடாரம் எருசலேமின் அடையாளம் என்றும், விண்ணகத்திலிருந்து இறங்கும் எருசலேம் என்பது இறைவனின் பிரசன்னத்திற்கு ஒரு சான்று என்பதை அடையாளப்படுத்துகிறது  என்றும் கூறியுள்ளார்.

மேலும், மணவாட்டியாக சித்தரிக்கப்படும் உருவகம், படைத்தவருடன் நெருக்கமான உறவில் உள்ள நகரம் எருசலேம் என்பதை  அடையாளப்படுத்துகிறது என்றும்  கர்தினால்  வலியுறுத்தியுள்ளார்.

இந்த அடையாளங்கள் எருசலேமின் வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும் என்று கூறுவதுடன், எருசலேம் நகரம் மற்றும் எருசலேம் திருஅவை இறைவனின் பிரசன்னம் குடிகொண்டிருக்கும் இடமாக இருக்கவேண்டுமெனவும், நமது செயல்களே கடவுளுடனான நெருக்கமான உறவிற்கு சான்று என்றும் கர்தினால்  Pizzaballa அவர்கள் கூறியுள்ளார்.

எருசலேமில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஜெபம் என்பது உலகின் எல்லா நாடுகளும் அமைதியில் நிலைப்பதற்கான ஜெபம் என்றும்,  ஏனெனில் எல்லா நாடுகளின் இதய துடிப்பும் எருசலேமில் உள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால்  Pizzaballa.

கடவுளுடனான நெருங்கிய வாழ்வுக்கு சான்று பகரவும், கடவுளின் அன்பினால் பிறருக்கு வாழ்வளிக்கவும் புனித பூமியில் உள்ள மக்கள் அழைக்கப்பட்டுள்ளதாக  கர்தினால்  Pizzaballa அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2024, 15:50