கண்ணீருடன் இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர் கண்ணீருடன் இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 61-2, கடவுளே நமது புகலிடம்!

தாவீதைப் போன்று நாமும் கடவுளிடம் முழுமையாக சரணடைந்து நமது வாழ்வை அர்த்தமுடன் வாழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 61-2, கடவுளே நமது புகலிடம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுளுக்குத் தாவீதின் விண்ணப்பம்!’ என்ற தலைப்பில் 61-வது திருப்பாடலில் 1 முதல் 5 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். தாவீதைப் போன்று நாமும் கடவுள்மீது நம்பிக்கை கொண்டு நம்மை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளிடமிருந்து விடுதலைப்பெற வேண்டினோம். இவ்வாரம் அதனைத்  தொடர்ந்து வரும் 6 முதல் 8 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது அவ்வார்த்தைகளை இறை அமைதியில் பக்தியுடன் வாசிக்கக் கேட்போம். "அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்; அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்! கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்! உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்; நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்." (வச. 6-8)

இப்போது சிறியதொரு நிகழ்வுடன் நமது இந்தத் திருப்பாடல் சிந்தனைகளை இன்னும் ஆழப்படுத்துவோம். ஒருநாள் மனிதர் ஒருவர் துறவி ஒருவரிடம் வந்து, “குருவே  எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒருவன் என்னைவிட மிகுதியான செல்வதைக் கொண்டிருக்கிறான். அது அவனுக்கு நிலையாக இருக்கிறது அவனைப்போல என்னால் செல்வம் சேர்க்க முடியவில்லை” என்று கவலையுடன் கூறினான். அதற்கு அந்தத் துறவி, “அவனிடம் எவ்வளவு செல்வம் இருக்கும்?” என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், இலட்சக் கணக்கில் தங்கமும், வெள்ளியும் அவனிடம் இருக்கிறது. அதை யாராலும் எண்ணி சொல்லிவிட முடியாது” என்றான். உடனே துறவி, “அவனிடம் இருக்கும் செல்வங்கள் யாவும் உண்மையானவை அல்ல. காரணம், அவற்றிற்கு நீராலும், நெருப்பாலும், அரசர்களாலும், திருடர்களாலும், எதிரிகளாலும், வேண்டாத சந்ததியினராலும் ஆபத்தும் அழிவும் உண்டு. ஆனால் நம்மிடையே யாராலும் அழிக்க முடியாத ஏழு செல்வங்கள் உண்டு. அவை நல்ல நம்பிக்கை, நல்லொழுக்கம், மனசாட்சி, பழிக்கு அஞ்சுதல், நல்ல கல்வி, பெருந்தன்மை, அறிவு ஆகியவையாகும். இவைதான் கடவுளுக்கு மிகவும் விருப்பமான அழியாத செல்வங்கள்” என்றார்.

இன்றைய உலகில் ஒருசாரார் ஆட்சி, அதிகாரம், செல்வம், பெயர், புகழ் என்று அழியும் செல்வங்கள் பின்னால் ஓடிக்கொண்டிருகின்றனர். ஆனால் மறுசாரார் அன்பு, இரக்கம், உண்மை, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், அமைதி என்று அழியாத செல்வங்கள் பின்னால் ஓடிக்கொண்டிருகின்றனர். நமது தாவீது அரசர் இரண்டாம் வகை மனிதர்களைச் சேர்ந்தவர். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எண்ணி தனது தந்தைக்கு எதிராக வெகுண்டெழுந்த தனது அன்பு மகன் அப்சலோமை ஆயுதங்கள் கொண்டு அழித்தொழிக்க விரும்பவில்ல. அதற்கு மாறாக, தனது அரசப் பதவியைத் துறந்து தனது படைவீரருடன் காட்டிற்குள் சென்று தஞ்சமடைகிறார். ஆனால் தனது மகன் அப்சலோமிற்குப் பயந்துகொண்டு அவர் காட்டிற்குள் தஞ்சமடையவில்லை, மாறாக, இந்த உலக வாழ்வில் கிடைக்கும் இன்பத்தை விட கடவுளிடம் தஞ்சமடைவதால் கிடைக்கும் இன்பமே உயர்ந்தது, மாறாதது, நிலையானது என்று எண்ணி இவ்வாறு அவர் செய்கிறார்.  

இப்போது இன்றைய இறைவார்த்தைகளுக்கு வருவோம். முதலில் "அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்; அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்! கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்! என்று அவர் கூறும் இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இஸ்ரயேல் மக்களுக்கான முதல் அரசராக சவுல் ஏற்படுத்தப்பட்டார். அவர் அனைத்துலகிற்கும் வல்லாவராம் ஆண்டவர்மீது நம்மிக்கை கொள்ளமால் ஆயுதங்கள்மீது நம்பிக்கை கொண்டார். அதனால் வெறுப்படைந்த கடவுள் அவரை அரசப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு தாவிதை அமர்த்தினார்.

ஆகவே, ‘கடவுள் தன்னையும் தனது குடும்பத்தையும் உயர்த்தினார். அவர் எல்லாவற்றையும் பார்த்துகொள்ளவார். நாம் அவரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்கு உகந்த நற்செயல்கள் ஆற்றினால் மட்டுமே போதுமானது’ என்ற எண்ணத்தை தாவீது அரசர் கொண்டிருந்தார். இந்த நம்பிக்கையை தனது வார்த்தைகளில் வெளிப்படுத்துவத்தைப் பார்க்கின்றோம். இப்போது அவரின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம். "ஆண்டவராகிய கடவுளே! உமது ஊழியனைப் பற்றியும் அவனது குடும்பத்தைப் பற்றியும் நீர் தந்த உறுதிமொழியை என்றும் நிலைநாட்டும்! நீர் வாக்குறுதி அளித்தவாறே செய்யும்! உமது பெயர் என்றும் மாட்சி பெறுவதாக! அப்பொழுது மாந்தர் ‘படைகளின் ஆண்டவரே இஸ்ரயேலின் கடவுள்’ என்பர். உமது ஊழியன் தாவீதின் குடும்பமும் உம் திருமுன் நிலைத்திருக்கும். ஏனெனில், படைகளின் ஆண்டவரே! இஸ்ரயேலின் கடவுளே! ‘நான் உனக்கு ஓர் இல்லம் எழுப்புவேன்’ என்று உமது ஊழியனுக்கு வெளிப்படுத்தியவர் நீரே! ஆகவே, இவ்வாறு மன்றாட உம் ஊழியனுக்கு மனத்துணிவு ஏற்பட்டது. தலைவராம் ஆண்டவரே! நீரே கடவுள்! உமது வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியவை! இந்த நல்வாக்கை அடியேனுக்கு அருளியவர் நீரே! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உம் திருமுன் இருக்குமாறு நீர் அருள்கூர்ந்து அதற்கு ஆசி வழங்கும்! தலைவராகிய நீர் உரைத்துள்ளீர்! உம் ஊழியனின் குடும்பம் என்றும் உமது ஆசியைப் பெறுவதாக!’ (காண்க 2 சாமு 7:25-29).

இறுதியாக, "உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்; நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்" என்று கூறி, இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. பொதுவாக, திருப்பாடல்கள் முழுவதிலும் இறைவனைப் புகழ்ந்தேத்தும் தாவீது அரசரின் வார்த்தைகளை நம்மால் அதிகம் காணமுடிகிறது. தான் எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் கடவுளைப் புகழ்வதையும் அவருக்கு நன்றி கூறுவதையும் தனது இரு கண்களாகக் கொண்டிருந்தார் தாவீது. மேலும் கடவுளை தனது அரணாகவும், கேடயமாகவும், ஒப்பற்ற செல்வமாகவும் கொண்டிருந்தார். ஒரு போரில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து மன்னரின் முன்பு நிறுத்தினர். இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும் படியாக அவரிடம் கேட்டுக்கொண்டான். “அதற்கோர் நிபந்தனை இருக்கிறது” என்றார் வெற்றி பெற்ற மன்னர். “விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும். அதனை முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும். கூடவே உருவிய வாள்களோடு எனது வீரர்கள் உன்னருகில் வந்துக்கொண்டு இருப்பார்கள். ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள்கள் உன் தலையைச் சீவிவிடும். மாறாக, இந்தப் போட்டியை வெற்றியோடு முடித்துவிட்டால் உனக்கு விடுதலை” என்று மன்னர் தனது நிபந்தனையை விதித்தார். குறிப்பிட்ட நேரம் வந்தது. இலட்சக்கணக்கான மக்கள் அந்தச் சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர். போர் வீரர்கள் சாலையை ஒழுங்கு செய்து கொடுத்தனர். மன்னர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது. தனது பயணத்தைத் தொடங்கினான் இளவரசன்.

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்சாகப் படுத்தினர். மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் கிண்டலும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர். அதேவேளையில் இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாள்களோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர். பாத்திரத்தை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டான் இளவரசன். அப்போது அங்கே நாற்புறத்திலிருந்தும் எழுந்த கூச்சலும், பரிகாசமும், ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. எனினும் எதையும் பொருட்படுத்தாமல் தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன். உடனே போட்டியில் வெற்றிபெற்ற இளவரசனைப் பாராட்டிய மன்னர், "இளவரசனே உன்னைக் கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம். உன்னை உற்சாகப்படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம். அவர்கள் யாரென்று தெரிந்து  வைத்திருக்கிறாயா" என்று கேட்டார்.? அதற்கு இளவரசன், "மன்னா, என்னை போற்றியவர்களையும் தூற்றியவர்களையும் நான் கவனிக்கவில்லை. காரணம் எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது" என்றான். அப்போது, "இளவரசனே  பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் உடலில் உள்ள உயிர். வாழும் நாட்களிலே கண்ணும் கருத்துமாக இருந்து இறுதிவரை அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். போற்றுவோரைக் கண்டு பெருமை கொள்ளாமல் தூற்றுவோரைக் கண்டு சோர்ந்துப் போகாமமல் வாழ்வில் கவனம் வைத்து முன்னேற வேண்டும்" என்றார்.

நமது தாவீது அரசரும் இப்படித்தான் யார் போற்றினாலும் யார் தூற்றினாலும் அதுகுறித்து கவலைகொள்ளாது தனது முழு கவனத்தையும் கடவுள்மீது பதித்திருந்தார். சிறப்பாக, தான் ஓர் அரசராக இருந்தபோதிலும், தனது ஒப்பற்ற இறைவனாம் கடவுளை மட்டுமே என்றுமுள்ள அரசராகப் போற்றி மகிழ்ந்தார்.  தனது வாழ்நாளில் தனக்குக் கிடைத்த அனைத்தையும் கடவுள் கொடுத்த கொடையாகவே எண்ணினார். அதனால்தான் அவரது இறுதிநாள்களில் கூட கடவுளுக்கு இவ்வாறு நன்றி கூறி தனது உயிரை அவரது கரங்களில் ஒப்புவிக்கின்றார். “எங்கள் மூதாதை இஸ்ரயேலின் ஆண்டவரே, நீர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவீராக! 11ஆண்டவரே, பெருமையும் வலிமையும் மாட்சியும் வெற்றியும் மேன்மையும் உமக்கே உரியன. ஏனெனில், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் இருக்கும் அனைத்தும் உம்முடையவை. ஆண்டவரே, ஆட்சியும் உம்முடையதே. நீர் யாவருக்கும் தலைவராய் உயர்த்தப் பெற்றுள்ளீர். செல்வமும் மாட்சியும் உம்மிடமிருந்தே வருகின்றன. நீரே அனைத்தையும் ஆள்பவர். ஆற்றலும் வலிமையும் உம்கையில் உள்ளன. எவரையும் பெருமைப்படுத்துவதும் வலியவராக்குவதும் உம் கையில் உள்ளன. இப்பொழுது எங்கள் கடவுளே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்தி உம் மாட்சிமிகு பெயரைப் போற்றுகிறோம். (காண்க  1 குறி 29:10-13).

ஆகவே, தாவீதைப் போன்று நாமும் கடவுளிடம் முழுமையாக சரணடைந்து நமது வாழ்வை அர்த்தமுடன் வாழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 November 2024, 13:40