பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள்  (ANSA)

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் மதநிந்தனை வழக்குகள்

வரலாறு காணாத அளவில் அதிகரித்து வரும் மதநிந்தனை வழக்குகள் மற்றும் சிறைத்தண்டனை குறித்து பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், ஹைதராபாத்தின் ஆயருமான Samson Shukardin அவர்கள் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

ஜெர்சிலின் டிக்ரோஸ் வத்திக்கான்

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்குகளின் அதிவேக உயர்வு, சிறைத்தண்டனை ஆகியவை மதத் தலைவர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன என்று யூக்கா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மனித உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் 31 அன்று அரசு சாரா சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கை(NCHR), ஜூலை 25ஆம் தேதி வரை நாடு முழுவதும் 767 பேர் தெய்வ நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மற்றும் சிறைத்தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 2023இல் 213 ஆகவும், 2022இல் 64 ஆகவும், 2021இல் 9 ஆகவும், 2020இல் 11 ஆகவும் இருந்தது என்றும் NCHR அறிக்கை கூறுகிறது .

பாகிஸ்தானில் 594 பேர் பஞ்சாபிலும்,120 பேர் சிந்துவிலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தானின் அரசு சாரா சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

பாகிஸ்தான் நாட்டில் தெய்வ நிந்தனை கண்காணிப்பு கும்பல் ஒன்று இருக்கிறது என்றும், இது நாட்டின் தெய்வ நிந்தனை அடக்கு முறைச் சட்டத்தைப் பயன்படுத்தி பிறரை மிரட்டி   பணம் பறிப்பதற்காக பலரை சிக்கவைப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத அளவில் அதிகரித்து வரும் மத நிந்தனை வழக்குகள் மற்றும் சிறைத்தண்டனை குறித்து பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவரும், ஹைதராபாத்தின் ஆயருமான Samson Shukardin அவர்கள் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இளைஞர்கள் மற்றும் அப்பாவி மக்கள் வலைத்தளங்களில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றும்,  கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இருவரும் மிகவும் கவலையடைந்துள்ளனர் என்றும் யூக்கா  செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் ஆயர்.

இச்சூழ்நிலையில் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அரசியல் சச்சரவுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறையில் மூழ்கியுள்ளது என்றும் மத நிந்தனை வழக்குகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இஸ்லாமியத் தலைவர் Muhammad Asim Makhdoom அவர்கள்   வலியுறுத்தியுள்ளார்.

பல மத நிந்தனை வழக்குகள் போலியாக உருவாக்கப்படுகின்றன என்றும், அவ்வாறு செய்பவர்கள் பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு நாட்டை இழிவுபடுத்துகிறார்கள் என்றும் கூறிய Muhammad  அவர்கள்  இந்த தவறான பயன்பாட்டை தடுக்க வேண்டியது அரசின் கடமை  என்றும்   கூறினார்.

இஸ்லாமியருக்கும், நபிகள் நாயகத்திற்கும் எதிராக நிந்தனை செய்வது பாகிஸ்தான் சட்டங்களின் கீழ் மரண தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்றும், நூற்றுக்கணக்கான மக்கள்  தெய்வ நிந்தனை குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதேயொழிய, இதுவரை யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும் பாகிஸ்தானின் அரசு சாரா சுதந்திர அமைப்பு வெளியிட்ட  ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த அறிக்கை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விரிவான மதிப்பாய்வினை மேற்கொள்ள  அழைப்பு விடுத்ததுடன், வருந்தத்தக்க சிறை நிலைமைகளையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2024, 16:46