தென்சூடான் பகுதி தென்சூடான் பகுதி 

தென்சூடான் நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட.

கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படவில்லை, இந்த ஒப்பந்தங்கள் 2024ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக இருந்த நிலையில் அவை, 2027 பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளனர் தென்சூடான் மற்றும் சூடான் தலத்திருஅவை ஆயர்கள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

தென்சூடானில் ஜனநாயகத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதால் நாட்டில் நிலையான அமைதிக்கான நம்பிக்கை ஏமாற்றம் அடைந்து வருகின்றது என்றும், புதிய அரசியலமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டின் நிலையான அமைதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு பன்னாட்டு சமூகம் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர் தென்சூடான் மற்றும் சூடான் ஆயர்கள்.

நவம்பர் 22 வெள்ளிக்கிழமை எக்குவதோரின் கிட் நகரில் நடைபெற்ற ஆயர்கள் கூட்டத்தின் இறுதியில் ஃபீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனத்திற்குப் பதிலளித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர் தென்சூடான் மற்றும் சூடான் தலத்திருஅவை ஆயர்கள்.

தென்சூடான் அரசுத்தலைவர் சல்வா கீர் மற்றும் துணை அரசுத்தலைவர் ரீக் மச்சார் ஆகியோரை எதிர்த்து 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெறும் உள்நாட்டுப் போரில் இருந்து வெளிவர நாடு போராடி வருகிறது என்றும், 2018 ஆம் ஆண்டில், போரிடும் கட்சிகள் தென்சூடான் குடியரசில் (R-ARCSS) மோதலைத் தீர்ப்பதற்கான புத்துயிர் பெற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்றும் எடுத்துரைத்துள்ளனர் ஆயர்கள்.

கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், இந்த ஒப்பந்தங்கள் 2024ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல்களை நடத்துவதாக இருந்த நிலையில் அவை, 2027 பிப்ரவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்புப் பணியின் முன்னாள் தலைவரை கைது செய்ய முயற்சித்ததைத் தொடர்ந்து தலைநகர் ஜூபாவில் நவம்பர் 21 வியாழனன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, நாட்டில் இயல்புநிலை இல்லை என்பதற்கு சான்று என எடுத்துக்காட்டியுள்ள ஆயர்கள், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் தொடங்கிய உள்நாட்டுப் போரினால் சூடான் நாடு சிதைந்து போயுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

போரினால் ஆயிரக்கணக்கான சூடான் மக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், இலட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என்று எடுத்துரைத்துள்ள ஆயர்கள், புலம்பெயர்ந்துள்ள மக்கள் அண்டை மாநிலங்கள் அல்லது நாடுகளில் அமைதியை நாடி தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குடிமக்கள் மீது நடத்தப்படும் பாதிப்புக்கள் அனைத்தும் மனிதாபிமானமற்ற செயல்கள் என்றும், உறுதியான வலுவான வார்த்தைகளில் அவை கண்டிக்கப்பட வேண்டியவை என்றும் எடுத்துரைத்துள்ள ஆயர்கள், "மோதலில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். (FIDES)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 November 2024, 13:21