கோவிலில் காணிக்கையிடும் கைம்பெண் கோவிலில் காணிக்கையிடும் கைம்பெண் 

பொதுக் காலம் 32-ஆம் ஞாயிறு : கைம்பெண்களின் கருணை உள்ளம்!

இயேசுவின் கண்கொண்டு நம்மைச் சுற்றியுள்ள கைம்பெண்களை நோக்குவோம். அவர்களின் தியாகத்தைப் போற்றுவதுடன் அவர்களை ஒடுக்கும் அநியாயச் செயல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல்கொடுப்போம்.
  • செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்
  • (வாசகங்கள்   I. 1 அர 17:10-16       II. எபி 9:24-28       III.  மாற் 12:38-44)
ஞாயிறு சிந்தனை 101124

பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு இன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள் கைம்பெண்களின் கனிவு நிறைந்த உள்ளதையும், அவர்களுக்கு எதிரான மறைநூல் அறிஞரின் அடாவடித்தனங்களையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகின்றது. இப்போது ஒரு நிகழ்வுடன் நமது மறையுறைச் சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி சிவகாசி அருகே உள்ள ஊராம்பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற கைம்பெண் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனு ஒன்றில் இவ்வாறு கூறியிருந்தார். "கடந்த 2012-ம் ஆண்டு பட்டாசு ஆலை நடத்திய எனது கணவர் சத்தியமூர்த்தி இறந்து விட்டார். எனக்கு பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் 2 மகள்கள் உள்ளனர். நான் கணவர் இறந்த ஆண்டு முதல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறேன். இந்த நிலையில் நான் எனது கணவரின் தொழிலை தொடர தொழில் கடன் கேட்டு மனு கொடுத்து வருகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அரசு வேலைக்காகவும் மனு கொடுத்துள்ளேன். இந்நாள் வரை எந்தப் பலனும் இல்லை. நான் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளேன். என்னுடைய மனுக்கள் அனைத்தும் பெறப்பட்டு பதில் கடிதம் வந்துள்ளது. ஆனால் எனது வாழ்வாதாரத்திற்கு எந்த வழியும் கிடைக்கவில்லை. எனது வீட்டை ஈடு வைத்து தொழில் கடன் வழங்க அதிகாரிகள் பரிந்துரைத்தும் வங்கி அதிகாரிகள் கடன் வழங்க மறுக்கும் நிலையே உள்ளது. இதனால் எனக்கும், என் மகள்களுக்கும் வாழ்வதற்கான வழி தெரியவில்லை. எனவே எனக்கும், என் மகள்களுக்கும் உயிர் வாழ்வதற்கான தகுதி இல்லை என்ற சான்று வழங்க வேண்டும். இல்லை என்றால் உடனடியாக எனக்கு வாழ்வதற்கான வழி வகை செய்ய வேண்டும். எத்தனை ஆண்டுகள் நான் இப்படியே போராடிக் கொண்டு இருக்க முடியும்? எனவே எனக்கு உடனடியாகப் பதில் வேண்டும். இல்லை என்றால் நானும் எனது மகள்களும் உயிர் வாழ தகுதி இல்லாதவர்கள். என்று சான்றளிக்க வேண்டும். என் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யாத, பெண் என்றும் பாராமல் என்னை அலைக்கழித்த அரசு அதிகாரிகளிடம் வாழ்விற்காகப் போராடி விட்டேன். இதுவே என் இறுதிப் போராட்டம்" இப்படியாக கைம்பெண்களின் துயரம் நாளுக்கு நாள் தொடர்ந்தவண்ணம்தான் இருக்கின்றது.

இந்த 21ம் நூற்றாண்டிலும் கூட கைம்பெண் என்பது பெண்களுக்கு ஒரு சாபக்கேடாகத்தான் இருக்கிறது. காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் மாறி கொண்டு இருந்தாலும், சமூகத்தில் பெண்கள் மீது சுமத்தப்படும் சமூக தீமைகளை நாம் ஒழித்தாலும், கணவனை இழந்த கைம்பெண்களை இந்தச் சமூகம் மனிதாபிமானமற்ற முறையில் தான் நடத்துகிறது. கைம்பெண்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நடைமுறையை அவர்கள் மீது திணிக்கிறார்கள் ஆணாதிக்கச் சிந்தனைக்கொண்டவர்கள். இந்தச் சமூகத் தீமைகள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால், அது அவர்களின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்துக் கொண்டு இருக்கிறது. என்னதான் நாம் பல முன்னேற்றங்களைக் கொண்டாலும், இறுதியில் கைம்பெண்களை ஒதுக்கப்பட்டவர்களாகத் தான் உணர வைக்கிறார்கள். கைம்பெண்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் சொந்த முடிவுகளை எடுக்கும் திறமை குறைவாக இருப்பதாக இந்தச் சமூகம் நினைக்கிறது. அதனால் கணவன் இறந்த உடனே அந்தப் பெண் எப்படி வாழவேண்டும் என்ற முடிவுகளை மற்றவர்கள் எடுக்க தொடங்கி விடுகின்றனர். ‘கைம்பெண் துடுப்பில்லாத மரக்கலம்’ ‘நிலம் மழையில்லாமல் அழும், விதவை கணவனில்லாமல் அழுவாள்’ ‘கைம்பெண் வளர்த்த பிள்ளை மூக்குச் சரடு இல்லாத காளை’ என்ற பழமொழிகளால் கைம்பெண்கள் வர்ணிக்கப்படுகிறார்கள்.

இதன் பின்னணியில் பார்க்கின்றபோது இன்றைய முதல் வாசகத்தில் சாரிபாத்தைச் சேர்ந்த கைம்பெண் இறைவாக்கினர் எலியாவுக்கு எப்படி உதவுகிறார் என்பதைக் காணமுடிகின்றது. சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த கைம்பெண்ணை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்று கூறுகின்றார் இறைவாக்கினர் எலியா.  மேலும் அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்று கேட்டபோது, தனது வறுமை நிலையைக் கூறி அவரைக் கடிந்துகொள்ளவில்லை. மாறாக, “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்” என்று கூறி தனது இயலாமையை எடுத்துரைப்பதைப் பார்க்கின்றோம். மேலும், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள்" என்று கூறியபோது, நமது துயர நிலையைக் கண்டும் இப்படிக் கூறுகிறாரே என்றெண்ணி அங்கலாய்க்காமல் அவர் சொன்னபடியே செய்கிறார் அக்கைம்பெண். அதனால்தான், இறைத்தந்தையின் பேரருளால்  அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர் என்பதையும், எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை என்பதையும் காண்கின்றோம்.

இப்போது நற்செய்திப் பகுதிக்கு வருவோம். மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை என்ற பகுதியை மாற்குவும் லூக்காவும்  ஒரேமாதிரியாகவே கொடுத்துள்ளனர் (காண்க. லூக் 20:45-47) ஆனால் மத்தேயு நற்செய்தியில் இப்பகுதி மிகவும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது (காண்க. மத் 23:1-36;) மேலும், பரிசேயர், மறைநூல் அறிஞர் கண்டிக்கப்படல் என்ற பகுதியில் லூக்கா நற்செய்தியாளர் (காண்க. லூக் 11:37-54) மீண்டும் இதனை விரிவுபடுத்தியுள்ளார் என்பதையும் நாம் பார்க்கமுடிகின்றது. இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை செய்யும் இயேசு அவர்களிடம் விளங்கிய நான்கு வேண்டத்தகாத செயல்களை எடுத்துரைககின்றார்.  "அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள்” என்று கூறும் இயேசு, கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே” என்று மிகவும் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றார். தங்கள் அதிகாரங்களைப் பாதுகாத்துக்கொள்ள மறைநூல் அறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு சுயநலச் செயல்பாடுகளை மேற்கொண்டதை இயேசு இங்கே எடுத்துக்காட்டுகின்றார்.

இங்கே பரிசேயர், வெளிவேடக்காரர்கள், புறவினத்தார், பக்திமான்கள் ஆகியோருடன் மறைநூல் அறிஞர்களையும் சேர்த்துக்கொள்கிறார் இயேசு. மறைநூல் அறிஞர்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் இறைவேண்டலுக்கும் வாழ்விற்கும் துளியும் சம்மந்தம் இல்லாத காரணத்தினாலேயே அவர்களைக் கண்டிக்கிறார் இயேசு. மறைநூல் அறிஞர்கள் இறைவேண்டல் செய்த வேளைகளிலும் விவிலிய விளக்கங்கள் அளித்த வேளைகளிலும் அதிகாரப்பூர்வமாக நீண்ட அங்கிகளை அணிந்திருந்தார்கள். மற்ற வேளைகளில் இத்தகைய ஆடைகளை அவர்கள் அணியத் தேவையில்லை. ஆனால் இவர்களில் ஒருசிலர் மக்கள் தங்களை வணங்கி மேன்மைபடுத்த வேண்டும் என்ற காரணத்தினால் தொங்கல் ஆடைகளை அணிந்துகொண்டு மக்கள் நடமாடும் இடங்களில் சுற்றித் திரிந்து வந்தனர். அதாவது, சமயம் சார்ந்த செயல்களுக்காக மக்கள் தங்களை எப்போதும் வணங்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தனர். இவர்களின் பேராசைக்கு அதிகம் இரையானவர்கள் கைம்பெண்கள்தான். அவர்களுக்கு யாருமே துணையாக இல்லாத காரணத்தினால் சுயநலமிக்க இந்த மறைநூல் அறிஞர்கள் இறைவேண்டல், பக்தி என்ற கவசங்களைப் பயன்படுத்தி போலி வாழ்க்கை வாழ்ந்தனர். இதன் காரணத்தினாலேயே “கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள்” என்று அவர்களின் போலி வாழ்வைத் தோலுரித்துக் காட்டுகின்றார் இயேசு.

கைம்பெண்கள் தங்களின் வாழ்வில் பல்வேறுவிதமான துன்ப துயரங்களை அனுபவித்து வந்த போதிலும் அவர்கள் கடவுளின் காரியத்தில் தாராள மனம் கொண்டவர்கள் என்பதை எல்லோருக்கும் எடுத்துக்காட்டவே, 'ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை' குறித்து தொடர்ந்து கூறுகின்றார் இயேசு. கைம்பெண்கள், அநாதைகள்,  குழந்தைகள் யாவரும் பாலஸ்தீன சமூகத்தில் ஏழைகளின் ஒரு பகுதியினராக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு உணவு உடை  வழங்க யாரும் இல்லாத சூழலில், எருசலேம் கோவிலின் காணிக்கை மற்றும் நல்மனம் கொண்டோரின் உதவியையும் நன்கொடையையும் நாளும் நம்பி வாழ்ந்தனர். இப்படிப்பட்ட நிலையில், தன்னிடம் இருப்பது எல்லாவற்றையும் கடவுளுக்கு வழங்கி இன்பம் காணும் ஓர் ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கையை எடுத்துக்காட்டுகின்றார் இயேசு. இந்தக் காட்சியைக் காணும் இயேசு, தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று கூறி அந்த ஏழைக் கைம்பெண்ணின் தாராள மனம் குறித்து புளங்காகிதம் அடைகிறார். அதுமட்டுமன்றி அந்த யூத சமுதாயத்தில் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட கைம்பெண்களின் கருணைமிகு மனம் குறித்தும் பெருமைமிகு மனதுடன் பேசுகின்றார் இயேசு.

தனது தந்தை யோசேப்பை இழந்த தனது தாய் மரியாவின் நிலைகுறித்தும், கைம்பெண்களின் துயர நிலை குறித்தும் அறிந்திருந்த காரணத்தினாலேயே கைம்பெண்களை அன்பொழுக நோக்குகின்றார். இயேசு கைம்பெண்கள் மீது கரிசனையும் அக்கறையும் கொண்டிருந்தார் என்பதற்கு லூக்கா நற்செய்தியாளர் மூன்று எடுத்துக்காட்டுகளை முன்வைகின்றார். முதலாவது, நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல் நிகழ்வில் இதனைக் காண்கின்றோம். இந்த நிகழ்வின் சிறப்பம்சம் என்னவென்றால், யாரும் சொல்லாமலே, யாரும் அழைக்காமலே தானே குறிப்பறிந்து அவ்வூருக்குச் செல்கின்றார். அக்கைம்பெண்ணின் ஒரே மகனை அவருக்கு உயிர்ப்பித்துக் கொடுகின்றார் (காண்க. லூக் 7:11-17). அத்தாய்க்கு அவர் ஒரே மகன் என்பது இயேசுவின் உள்ளத்தை வெகுவாகத் தொட்டிருக்க வேண்டும். இப்போது முதல் வாசகத்திற்கு வருவோம் எலியாவுக்கு உதவும் சாரிபாத்நகரைச் சேர்ந்த அக்கைம்பெண்ணின் ஒரே மகன் பின்னாளில் இறந்து போனபோது, அவரது மகனை அவர் உயிர்ப்பித்துக் கொடுகின்றார். அப்போது, அந்தப் பெண் எலியாவிடம், “நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்” (காண்க 1 அர 17:24) என்கின்றார். எப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை இப்பெண் வெளிப்படுத்துகின்றார் பாருங்கள். இத்தனைக்கும் இவர் ஒரு யூதப்பெண் அல்ல, புறவினப்பெண். அதேபோன்று நயீன் ஊர்க் கைம்பெண் மகன் உயிர்பெறுதல் நிகழ்விலும் அனைவரும் அச்சமுற்று, “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்" என்று பார்க்கின்றோம். இரண்டாவதாக, நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமையிலும் கைம்பெண்ணின் நிலையை எடுத்துக்காட்டுகிறார் இயேசு (காண்க லூக் 18:1-8). ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று நடுவரிடம் தொடர்ந்து முறையிட்டு வந்த அக்கைம்பெண்ணுக்கு அவர் எவ்வாறு நீதி வழங்குகிறார் என்பதை விளக்குகிறார். இந்த உவமையில் கூட, ஒரு கைம்பெண்ணின் துயர நிலையை வெளிப்படுத்துகின்றார் இயேசு என்பதைப் பார்க்கின்றோம். மூன்றாவதாக, இன்று நாம் காணும் ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை. இந்நிகழ்வை மாற்குவும் லூக்காவும் மட்டுமே எடுத்துக்காட்டுகின்றனர் (காண்க. லூக் லூக் 21:1-4) என்பதையும் நம் நினைவில் கொள்வோம்.

இன்றைய நம் இந்தியாவில் 40 கோடி கைம்பெண்கள் உள்ளதாகவும், இது கொரோனா நோய்த்தொற்றின்போது கிடுகிடுவென உயர்ந்ததாகவும் புள்ளிவிபரம் ஒன்று நமக்குப் புலப்படுத்துகின்றது. நாம் வாழும் இச்சூழலில் நமது கைம்பெண்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள்  மற்றும் துயரங்களை அனுபவிக்கிறார்கள்  என்பதையும் பாலியல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். அதுமட்டுமன்றி தங்களது பிள்ளைகளை வாழ்வின் உயர் நிலைக்கு கொணரவேண்டும் என்பதற்காக எந்தளவுக்குத் தங்கள் வாழ்வையே தியாகம் செய்கிறாரக்ள் என்பதும் கண்கூடு. அதேவேளையில் அவர்களிடம் இழையோடும் கருணை உள்ளத்தையும், தாராள மனதையும் பல்வேறு நிலைகளில் நம்மால் காண முடிகிறது. ஆகவே, இயேசுவின் கண்கொண்டு நம்மைச் சுற்றியுள்ள கைம்பெண்களை நோக்குவோம். அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம். அதேவேளையில் அவர்களை ஒடுக்கும் அநியாயச் செயல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல்கொடுப்போம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2024, 10:05