இஸ்பானிய வெள்ளப்பெருக்கால் ஆலயத்தில் அடைக்கலம் தேடிய மக்கள் இஸ்பானிய வெள்ளப்பெருக்கால் ஆலயத்தில் அடைக்கலம் தேடிய மக்கள்  (ANSA)

இஸ்பெயினில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டோருடன் தலத்திருஅவை

வெள்ளப்பெருக்கால் துயருறும் மக்களுக்கு உதவ அனைத்து வழிகளிலும் இஸ்பானிய தலத்திருஅவை முயன்று வருகிறது. திருஅவைக் கட்டிடங்கள் பல திறந்து விடப்பட்டுள்ளன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்பெயின் நாட்டின் வலென்சியா பகுதியின் இயற்கைப் பேரிடர் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட அப்பகுதி பேராயர் Enrique Benavent அவர்கள், அனைத்து பங்குதளங்களும் இத்துயரில் மூழ்கியுள்ள மக்களுக்கு உதவுவதோடு, மீட்புப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார்.

150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கியுள்ள கடும்புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்விண்ணப்பத்தை விடுத்த பேராயர் அவர்கள், வலென்சியா பகுதியே இந்த வெள்ளப்பெருக்கால் பெருமளவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

திடீரென மழை பெய்ததும், அதுவும் எதிர்பாராத அளவு மிகப்பெரிய அளவில் இருந்ததும் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக உரைத்த பேராயர் Benavent அவர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளை தான் சென்று பார்க்க விரும்புவதாகவும், அதற்குரிய சூழல் உருவாகவில்லை என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் திருஅவைக் கட்டிடங்கள் பல திறந்துவிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார் பேராயர் Benavent.

இந்த வெள்ளப்பெருக்கால் துயருறும் மக்களுக்கு உதவ அனைத்து வழிகளிலும் தலத்திருஅவை முயன்று வருவதாகவும், அனைவரும் உடன் பிறந்த உணர்வுடன் வாழ இதை ஒரு நல்ல வாய்ப்பாக நோக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இஸ்பெயினின் வலென்சியா பேராயர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 November 2024, 16:32