நவ.14. தேசிய குழந்தைகள் தினம் நவ.14. தேசிய குழந்தைகள் தினம்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – நவ.14. தேசிய குழந்தைகள் தினம்

நாட்டின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பவர்களும், நாளைய உலகை ஆளப் போகின்றவர்களும் இன்றைய குழந்தைகள் தான். இவர்களைக் கொண்டாடி மகிழும் நாள்தான் குழந்தைகள் தினம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நவம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம். ‘இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்’ என்று கூறிய அவரின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதிதான்(1889) இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஐ.நா. நிறுவனம் குழந்தைகள் தினத்தை நவம்பர் 20ஆம் தேதி சிறப்பிக்கின்றது. குழந்தைகள் மீது அளவற்ற அன்புகொண்டிருந்த பண்டிட் நேரு 1964ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் நவம்பர் 14ஆம் தேதிக்கு குழந்தைகள் தினம் மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முன்னர், 1956ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 20ஆம் தேதிதான் இந்தியாவில் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டு குழந்தைகள் தினக்கொண்டாட்டத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாம் குறிப்பிடலாம். ஆம், இவ்வாண்டு மே மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் வத்திக்கானில் முதல் உலக குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்பட்டது. பண்பாடு மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையால் நடத்தப்பட்ட இந்த கொண்டாட்ட நிகழ்வுகள், நம் குழந்தைகளுக்கு நாம் எத்தகைய உலகை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற கேள்விக்கு பதிலளிப்பதாக இருந்ததை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

உலகளவில் எடுத்துக்கொண்டோமானால், குழந்தைகளை மையப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பல உலக தினங்கள் உள்ளன. ஜூன் 4ஆம் தேதி, வன்தாக்குதலுக்குப் பலியாகும் அப்பாவி குழந்தைகளுக்கான உலக தினம், அதே மாதம் 12ஆம் தேதி பாலர் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நாள், மாதராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும் என்ற கவிஞரின் வாக்கை நினைவூட்டும்வகையில் அக்டோபர் 11ஆம் தேதி உலக பெண் குழந்தைகள் தினம், நவம்பர் 18ஆம் தேதி குழந்தைகள் பாலியல் முறையில் சுரண்டப்படுவது, அத்துமீறப்படுவது மற்றும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் உலக தினம், இதற்கெல்லாம் மணிமகுடமாக நவம்பர் 20ஆம் தேதி, உலக குழந்தைகள் தினத்தைச் சிறப்பிக்கின்றோம். இந்தியாவிலோ நவம்பர் 14ஆம் தேதி, தேசிய குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

எதிர்கால தேசத்தை ஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும் புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும். நாட்டின் எதிர்கால வளர்ச்சியை தீர்மானிப்பவர்கள் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலத்தில் உலகை ஆளப் போகின்றவர்கள் குழந்தைகளே. இவர்களைக் கொண்டாடி மகிழும் நாள்தான் குழந்தைகள் தினம். “இந்தியாவின் நாளைய எதிர்காலம் சிறுவர்களே” என டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் கூறுவதுண்டு.

அன்பான பெற்றோர், உயர்த்தி விடும் தியாக எண்ணம் கொண்ட ஆசிரியர்கள், மிகச்சிறந்த அரசு, நம்பிக்கை தரும் நண்பர்கள் போன்றவர்களால் கட்டமைக்கப்படும் சூழல், சிறுவர்கள் வாழ்வதற்கேற்ற மிகச்சிறந்த சமுதாயமாக இருக்கும். ஏனெனில், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறார்.

இறைவன் இந்த உலகிற்கு தரும் செய்தியாக வந்து பிறந்திருக்கும் குழந்தைகள் இன்றைய உலகில் அனுபவிக்கும் துன்பங்களைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை திருமணம் ஆகியவை இன்று மிகப்பெரும் பிரச்சனைகளாக உள்ளன. எந்த அரசையும் நாம் குறை சொல்ல வரவில்லை, ஆனால், இன்றைய உண்மை நிலைகள் குறித்து கொஞ்சம் மனச்சான்றைத் தொட்டு பதில் சொல்லுங்கள் தெரியும். மிதிவண்டி கடைகளிலும் வாகன பழுதுபார்க்கும் இடங்களிலும், உணவகங்களிலும், வயல்களிலும் பாலர் தொழிலாளர்களை நாம் பார்த்ததேயில்லையா? அதிகாரிகளின் கண்களில் இவர்கள் படுவதேயில்லையா? குழந்தைகள் எதிர்கொள்ளக்கூடிய ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடு மற்றும் சுரண்டல் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு, இன்றைய மத்திய மாநில அரசுகள் என்ன செய்துள்ளன? அத்தனையும் வாக்கு வங்கிகளை மையம் கொண்ட திட்டங்கள் என்பதால் குழந்தைகளைப் பற்றிய கவலை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

மருத்துவமனையிலோ அல்லது வீட்டிலோ உடல்நோய் மற்றும் துன்பங்களால் போராடுகின்ற குழந்தைகளை, தங்களது குழந்தைப் பருவம் கொடூரமாகப் பறிக்கப்படுகின்ற சூழலில் வாழும் குழந்தைகளை, போர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பசி, தாகத்தை அனுபவித்து, தெருக்களில் வாழும் குழந்தைகளை, ஆயுதம் ஏந்த கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகளை, புலம்பெயர்ந்த குழந்தைகளை, பெற்றோரைப் பிரிந்து அநாதைகளாக வாழும் குழந்தைகளை, பள்ளிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்ட, மற்றும் வாய்ப்பற்ற குழந்தைகளை, தீவிரவாத குழுவினர், போதைப்பொருள், இதர அடிமைத்தனங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு ஆளான குழந்தைகளை நாம் எப்போதாவது எண்ணிப் பார்த்ததுண்டா? இல்லையென்றால், நாம் வருங்காலம் குறித்த அக்கறையுடையவர்கள் என்று நம்மை நாமே கூறிக்கொள்ள முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். நம்மைக் குறித்தே வெட்கம் நமக்குள் வரவேண்டும்.

இன்றைய உலகம் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது? முதியோரின் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறது என்பது மகிழ்ச்சியான விடயம்தான். நல்ல உணவுகள், மருந்துகள் துணைகொண்டு மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்திருப்பது நல்ல செய்திதானே. அதே வேளை உலகில் ஆப்பிரிக்கா தவிர வேறு அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகள் பிறப்பும், கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது குறைந்து வருவது கவலைதரும் ஒரு செய்திதானே. குறைவான மக்கள் தொகை இருந்தால் அனைவருக்கும் தாராளமாக உணவு, நீர் கிடைக்கும். பொது சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்கும் என நம்மில் பெரும்பாலானோர் நினைக்கலாம். ஆனால் நாட்டின் பிறப்பு விகிதம் வேகமாக குறையும் போது அதன் முதல் விளைவு 25 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். தொடர்ச்சியாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கத் தொடங்கும். முதியோர் நிறைந்த சமூகத்தில் அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? வயதானவர்களுக்கான மருத்துவச் செலவுகளை யார் செய்வார்கள்? வேலை செய்ய இளைஞர்கள் குறையும் போது நாட்டின் உற்பத்தி திறன் எவ்வாறு மேம்படும்? நாட்டின் வளர்ச்சிக்காக யார் வரி செலுத்துவார்கள்? இப்படி அடுக்கடுக்கான சிக்கல்கள் எழும்.

இத்தகையப் பிரச்சனைகளை பல நாடுகள் ஏற்கனவே அனுபவித்து வருகின்றன. முதியோரை விட இளையோரின் எண்ணிக்கைக் குறைவாக உள்ளதால், முதியோரின் ஓய்வு பெறும் வயது கூட்டப்பட்டு வருகின்றது. இத்தாலியில் 67 வயதில்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மக்கள் தொகை இயற்கையாகவே வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2017ஆம் ஆண்டு 12.8 கோடியாக இருந்த ஜப்பானின் மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் இறுதியில் 5.3 கோடியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 2063ஆம் ஆண்டு அதிகபட்சமாக 7.5 கோடியாக இருக்கும் மக்கள் தொகை, 2100ல் 7.1 கோடியாக குறையும். மேலும் ஸ்பெயின், சீனா, போர்ச்சுக்கல், தாய்லாந்து, தென்கொரியா உட்பட 23 நாடுகளில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை பாதியாக குறையும். ஆப்பிரிக்கா மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கும் என அண்மை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தின் புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் பார்த்தோமானால், உலக அளவில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண் 5 குழந்தைகளை பெற்றுக் கொண்டார். 2023ல் இது 2.3 குழந்தைகள் ஆக குறைந்துள்ளது. அதாவது 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடுகையில், குழந்தை பிறப்பு விகிதம் பாதியாக குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 2100ஆம் ஆண்டில் இது 1.7 ஆகக் குறையும் என ஓர் ஆய்வு சொல்கிறது. 2064 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 970 கோடியாக உயரும் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதியில் 880 கோடியாக குறையும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1950களில் இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக 5.7 குழந்தைகளை பெற்று வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை 2.1 ஆக குறைந்துள்ளது. ஆனாலும் இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சில ஆண்டுகளுக்கு ஏறுமுகத்தில் தான் இருக்கும். இந்த எண்ணிக்கை 2064ல் உச்சத்தை அடைந்து, அதன் பின்னரே கணிசமான அளவு குறையத் தொடங்கும் என்றும் ஐ.நா சபை கணித்துள்ளது. 2023 முதல் 2050 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகமாகும் என்றும் ஐ.நா சபை மதிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக முதியோர் நலச்சேவை மற்றும் அவர்களுக்கான சமூக காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவது, அரசுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.4 விழுக்காடாக இருந்த தமிழக மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 2041 இல் 22.6 விழுக்காடாக அதிகரிக்கும். இது நாட்டின் சராசரி அளவைவிட அதிகமாகும்.

குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள இந்த உலகம் தயங்குவதேன்? சுயநலமா? பொறுப்பேற்கத் தயக்கமா? காலநிலை மாற்றங்களும் செயற்கை உணவு உற்பத்திகளும் மனிதரின் உடம்பில் இரசாயன மாற்றங்களை உருவாக்கி மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றனவா? உண்மையான காரணம் தெரியவில்லை. ஆனால், இதன் விளைவுகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. குழந்தைப் பிறப்புகள் குறையும்போது, குடும்பங்களில் மழலை மொழிகள் குறைந்து மகிழ்ச்சியும் காணாமல் போகும். குழந்தைகள் குறையும்போது, இளையோர் படையும் குறைவுபட்டு, உலகில் உணவு உற்பத்தியும் அடிப்படைப் பொருட்களின் உற்பத்தியும் குறையும். அதற்கு இன்றைய தலைமுறை பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

இந்த உலகத்திற்கு பிறரால் கொண்டு வரப்பட்ட நாம், பிறரை அன்பு செய்வதிலும், பிறரிடம் இருந்து அன்பைப் பெறுவதிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது உண்மையானால், யாரிடம் நம் அன்பைப் பகிரப்போகின்றோம்?. யாரிடம் அந்த அன்பின் தொடர்ச்சியை விட்டுச் செல்லப்போகின்றோம்?. “தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; (எரே 1:5). என்ற இறைவார்த்தை நம்மோடு முடியவேண்டுமா? இத்தலைமுறையையும் தாண்டி அந்த வாய்ப்பை இறைவனுக்குக் கொடுக்க நாம் தயங்குவதேன்? என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன் (எசாயா 43:4) என இறைவன் நம்மை நோக்கிக் கூறும்போது, அவரின் குழந்தைகளை நாமும் அன்புகூர்வோம். நாளைய எதிர்காலம் நம் குழந்தைகளின் கைகளில். அவர்களை அன்புகூர்ந்து, பாதுகாத்து, இவ்வுலகின் வருங்காலத்தையும் பாதுகாப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 November 2024, 13:31