மன்னிப்பை வலியுறுத்தும் இயேசு மன்னிப்பை வலியுறுத்தும் இயேசு 

தடம் தந்த தகைமை - நாங்கள் மன்னித்துள்ளது போல

மன்னிப்பு எனும் மதிப்பீட்டை அறிவு சார்ந்தப் பார்வையில் அலசினால் உலகில் மனிதரே வாழ முடியாது. எனவே நம் தவறுகளைக் கடவுள் மன்னிப்பதுபோல பிறர் தவறுகளை மன்னிப்போம்

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். (மத் 6:12) எனக் கற்பித்தார் இயேசு.

நிபந்தனையற்ற அன்புள்ள கடவுளிடம் நிபந்தனையோடு கூடிய ஒரு வாக்கியம் இயேசுவின் வேண்டலில் இணைபட்டுள்ளது. இங்கே ஒரு சுயஆய்விற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. மன்னிக்கும் வேலை கடவுளுடையது, எனவே கடவுளால் மட்டுமே மன்னிப்பு வழங்க முடியும் என்ற மனநிலை யூத சமூகத்துள் பரவிக் கிடந்தது. அந்தக் கடவுள் நம்முள் வாழ்கிறார். ஆகவே கடவுளின் மன்னிப்புப் பணியை மனிதரும் செய்ய வேண்டும் என்பதே இயேசுவின் வலியுறுத்தல்.

யாரை மன்னிப்பது, எத்தனை முறை மன்னிப்பது, ஏன் மன்னிக்க வேண்டும் என்பவையெல்லாம் அறிவார்ந்த கேள்விகள். மன்னிப்பு எனும் மதிப்பீட்டை அறிவு சார்ந்தப் பார்வையில் அலசினால் உலகில் மனிதரே வாழ முடியாது. எனவே என் தவறுகளைக் கடவுள் மன்னிப்பதுபோல பிறர் தவறுகளை நான் மன்னிக்க முன்வர வேண்டும். அந்த உணர்வின்றி கடவுளை மன்றாடும் மன்னிப்பு நகைப்பிற்குரியது. மன்னிப்பு தண்டித்தலைவிடச் சிறந்தது. ஏனெனில் மன்னிப்பது தெய்வ குணம், தண்டிப்பது மனித குணம். அன்பு உள்ள காலம்வரை மன்னிப்பு உண்டு.

இறைவா! மன்னிப்பால் என் மனதை அழகாக்கும் வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2024, 13:31