அகிலத்தின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அகிலத்தின் ஆண்டவர் இயேசு கிறிஸ்து  (©paracchini - stock.adobe.com)

தடம் தந்த தகைமை : என்னிடம் ஒப்படைக்கும் எவரையும்

தம் மக்கள் எல்லாரும் அழியா நிலைவாழ்வு பெற வேண்டும் என்பது தந்தைக் கடவுளின் மேலான விருப்பம். அவ்விருப்பத்தை அகமுணர்ந்து செயல்படத் துணிந்தவர் இயேசு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழியவிடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு

பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம் (யோவா 6:39,40) என்றார் இயேசு.

இயேசு ஓர் உண்மையான ஊழியர். மிகுந்த நம்பிக்கைக்குரியவர். தன் உயிரை இழந்தேனும் உறவுகளைக் காக்கும் நன்மனம் கொண்டவர். அதனையே இங்கு அறிக்கையாகத் தருகிறார். தம் மக்கள் எல்லாரும் அழியா நிலைவாழ்வு பெற வேண்டும் என்பது தந்தைக் கடவுளின் மேலான விருப்பம். அவ்விருப்பத்தை அகமுணர்ந்து செயல்படத் துணிந்தார். எல்லாரின் உயர்வாழ்வே தம் உயிர் வாழ்வாகக் கொண்டு உழைத்தார்.

குடும்பத்தில் பெற்றோரிடம் பிள்ளைகள் ஒப்படைக்கப்படுகின்றனர். அவ்வாறே, ஆசிரியர்களிடத்தில் மாணாக்கரும், மருத்துவர்களிடத்தில் நலம் நாடுவோரும், ஓட்டுநர்களிடம் பயணிகளும், நீதிபதிகளிடம் நீதிமன்றமும், காவல்துறையினரிடம் சட்ட ஒழுங்குகளும் எனப் பல்துறைசார் அமைப்புகளிடம் இச்சமூகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்களை அழியவிடாமல் காக்கும் பணியை நம்மில் எத்தனை பேர் இயேசுவின் மனநிலையோடு தொடர்கின்றோம்!

தங்களது விருப்பத்தைக் கடவுளின் விருப்பத்தில் தொலைத்தவர்களுக்கு வாழ்வில் ஏமாற்றம் என ஏதுமில்லை.

இறைவா! பிறரின் நல்வாழ்விற்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் கடமையும் எனதென உணர்ந்து தினம் வாழ வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 December 2024, 09:16