மறைந்த கர்தினால் ஆயுசோ பெயரில் புத்த ஆலயத்தில் வழிபாடு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மதங்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் அண்மையில் இறைபதம் சேர்ந்ததையொட்டி, அவர் நினைவை சிறப்பிக்கும் விதமாக தாய்லாந்தின் புத்த துறவிகளும் கத்தோலிக்க தலைவர்களும் பேங்காக் புத்த ஆலயத்தில் வழிபாடு ஒன்றை நடத்தினர்.
சயன புத்தாவின் ஆலயம் என பரவலாக அறியப்படும் பேங்காக்கின் Wat Phra Chetuphon புத்த ஆலயத்தில் கூடிய இரு மதங்களின் தலைவர்கள், மதங்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்கு கர்தினால் அயுசோ அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுகளுள் இதுவும் ஒன்று என தெரிவித்தனர்.
Wat Phra Chetuphon புத்த ஆலயத்தின் தலைமைக்குரு Somdet Phra Maha Thirachan அவர்கள், கர்தினால் அயுசோவின் ஆன்ம இளைப்பாற்றிக்காக வழிபாடுகளை தலைமையேற்று நடத்த, பத்து புத்த மதத்துறவிகள் செபங்களை சப்தமாக செபித்துக் கொண்டிருந்தனர்.
மதங்களிடையே நல்லுறவை கட்டியெழுப்பும் பாதையில் கர்தினால் அயுசோவின் முயற்சிகளை பாராட்டும் விதமாக தாய்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Joseph Chusak Sirisut அவர்கள், கோதுமை மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது பலன்தராது எனற விவிலிய வார்த்தைகளை மேற்கோள் காட்டி அதனடிப்படையில் கத்தோலிக்க வழிபாட்டை நடத்தினார்.
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் 150 பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற ஏழாவது கிறிஸ்தவ புத்த கருத்தரங்கில் கர்தினால் ஆயுசோ அவர்களும் வந்திருந்து கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்