இயேசு பிறந்த இடமான பெத்லகேம் இயேசு பிறந்த இடமான பெத்லகேம்   (AFP or licensors)

பெத்லகேமில் எளிமையான முறையில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா

பெத்லகேமை விட்டு வெளியேறும் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் எதிர்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு வெளியேறுகின்றனர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

போரினாலும் வேலையின்மையினாலும் பெத்லகேம் மக்கள் மற்றும் கைவினைஞர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் பழக்க வழக்கங்கள் மற்றும் பண்டைய மரபுகள் கைவிடப்படாது கிறிஸ்து பிறப்பு பெருவிழா எளிமையான முறையில் கொண்டாடப்பட இருக்கின்றது என்றும், முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா தலைமையில் நடைபெற உள்ள திருப்பலியானது சாரணர் இயக்கத்தினரால் நெறிப்படுத்தப்பட இருக்கின்றது என்றும் தெரிவித்தார் எருசலேமின் புனித பகுதிகளுக்கானப் பொறுப்பாளர் அருள்பணி Ibrahim Faltas.

போர் தொடங்கியதில் இருந்து ஏறக்குறைய 90 கிறிஸ்தவக் குடும்பங்கள் பெத்லகேமை விட்டு வெளியேறிவிட்டன என்றும், மக்கள் இடம்பெயர்வதற்கும் உரிமை உண்டு, ஆனால் அதேவேளையில் அவர்கள் தங்குவதற்கும் உரிமை உண்டு என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தார் எருசலேமின் புனித பகுதிகளுக்கானப் பொறுப்பாளர் அருள்பணி Ibrahim Faltas.

பெத்லகேமை விட்டு வெளியேறும் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் எதிர்கால வாழ்வைக் கருத்தில் கொண்டு வெளியேறுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய அருள்பணி பல்தாஸ் அவர்கள், போர் தொடங்கி இரண்டாவது ஆண்டு கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் வேளையில் இம்முறையும் வண்ண விளக்குகள் அலங்காரங்கள் ஏதுமின்றி கிறிஸ்துபிறப்பு விழா கொண்டாட இருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார். 

உள்ளூர், பாலஸ்தீனிய அரசு அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில், புனித கேத்தரின் பங்கு ஆலயத்தில் டிசம்பர் 24 நடைபெற உள்ள நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி, ஜனவரி 6 அன்று கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்கர்களால் சிறப்பிக்கப்படும் திருப்பலி, ஜனவரி 18 அன்று அர்மேனியர்கள் சிறப்பிக்கும் திருப்பலி என மூன்று திருப்பலிகள் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார் அருள்பணி Faltas.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பயணிகள் மற்றும் பார்வையாளர்களால் நிறைந்திருந்த பெத்லகேம் இப்போது திருப்பயணிகள் இன்றியும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலும் காணப்படுகின்றது என்று எடுத்துரைத்த அருள்பணி Faltas அவர்கள், பெத்லகேம் கைவினைஞர்கள் பலர் வேலையின்றி பொருளாதார அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2024, 11:55