நேர்காணல் – நவீன தமிழ் இலக்கியங்களில் கிறிஸ்தவத்தின் பங்கு
மெரினா ராஜ் - வத்திக்கான்
நவீன காலகட்டத்தில் தமிழில் அச்சுத்தொழில்நுட்பம், உரைநடை ஆகியவை உருவானபிறகு எழுதப்படும் இலக்கியம் நவீன இலக்கியம் எனப்படுகிறது. Modern Literature என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக புழக்கத்திற்கு வந்தது இச்சொல். நவீன இலக்கியங்கள் பல குறிப்பிடத்தக்க தனி இயல்புகளையும் இலக்கணங்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளன. வருகின்ற யூபிலி ஆண்டு 2025 ஐ முன்னிட்டு ஜனவரி மாதம் தகவல் தொடர்பாளர்களுக்காந யூபிலியாக திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கின்றது. எனவே அதன் முன்னேற்பாடாக தமிழ் இலக்கியங்கள், பத்திரிக்கைகள் வழியாக மக்களுக்கு இதழியல் பணியினை ஆற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் மற்றும் அவர்களது சிறப்புமிக்கப் பணியினைப் பற்றிய தகவல்களை இனிவரும் நமது நேர்காணலில் காணலாம்.
சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு சிறுகதை நாவல் வடிவில் வழங்கிவருபவர் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் நவீன தமிழ் இலக்கியங்களில் கிறிஸ்தவத்தின் பங்கு பற்றிய கருத்துக்களை இன்றைய நம் நேர்காணலில் நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்த பெருமாள் முருகன் அவர்கள், தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகவும், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ஓராண்டு முதல்வர் பொறுப்பையும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வராக மூன்றாண்டுகளும் பணியாற்றி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றவர். பெருமாள், பெருமாயி என்னும் தனது பெற்றோரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துப் ”பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ள பெருமாள் முருகன் அவர்கள், காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரை வீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியும், கல்வி பற்றிய பல கட்டுரைகளையும் எழுதி சிறப்பு பெற்றுள்ளார். இவரது பதினொரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நிழல்முற்றம் நாவல் போலிய மொழியிலும் மாதொருபாகன் நாவல் இடாய்ச்சு மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. பூனாச்சி நாவல் சீனம், இத்தாலி மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன், பூனாச்சி ஆகிய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது அனைத்து நாவல்களும் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடைய பெருமாள் முருகன் அவர்கள், அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டுப் புக்கர் விருதுக்கான (International Booker Prize) நெடும்பட்டியலில் இவரது பூக்குழி (Pyre) நாவல் இடம்பெற்றது. இப்பட்டியலில் தமிழ் நாவல் ஒன்று இடம் பெறுவது இதுவே முதல்முறை. 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி இலக்கிய பரிசை இவரது ஆளண்டாப்பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Fire bird பெற்றது. அண்மையில் இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் நடைபெற்ற தமிழ் இலக்கிய நிகழ்ச்சியான இந்திய திரைப்பட விழாவில் எழுத்தாளரைச் சந்தித்தல் என்ற அமர்வில் பங்கேற்று தன்னுடைய இரண்டு நாவல்கள் தமிழ் மொழியில் இருந்து இத்தாலி மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டிருப்பது பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். நவீனத் தமிழிலக்கியத்திற்கு கிறிஸ்தவர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி தனது கருத்துக்களை இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்