அன்னை மரியா திருவுருவம் அன்னை மரியா திருவுருவம்  

அன்னை ஓர் அதிசயம் – "புனித கன்னிமரியா இல்லம்", துருக்கி

அன்னை மரியா அவரது விண்ணேற்புவரை இவ்வில்லத்தில் வாழ்ந்தார் என்ற நம்பிக்கையில் கத்தோலிக்கத் திருப்பயணிகள் இவ்வில்லத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான

புனித கன்னிமரியின் இல்லம் என்பது, துருக்கி நாட்டில் எபேசு நகருக்கு அருகிலுள்ள Koressos மலையில் அமைந்துள்ள திருத்தலமாகும். இந்த மலைக்கு துருக்கி நாட்டு மொழியில் "Nightingale" என்று அர்த்தம். 1774ம் ஆண்டு முதல் 1824ம் ஆண்டுவரை வாழ்ந்த முத்திப்பேறுபெற்ற அருள்சகோதரி Catherine Emmerich கண்ட காட்சிகளில் வெளிப்படுத்தப்பட்டபடி 19ம் நூற்றாண்டில் புனித கன்னிமரியின் இல்லம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது காட்சிகள் அடங்கிய புத்தகம், அவரது இறப்புக்குப் பின்னர் Clemens Brentano  என்பவரால் வெளியிடப்பட்டது. புனித கன்னிமரியின் இல்லம் பற்றிய வெளிப்பாடுகளுக்கு ஆதரவாகவோ எதிராகவோ கத்தோலிக்கத் திருஅவை இதுவரை கருத்துக்களை வெளியிடவில்லை. ஆயினும் இவ்வில்லம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் திருப்பயணிகள் அங்கு சென்றவண்ணம் உள்ளனர். இவ்வில்லம் கத்தோலிக்கருக்கும் முஸ்லீம்களுக்கும் புனிதத் திருத்தலமாக இருந்து வருகிறது. இயேசுவின் இறப்புக்குப் பின்னர், அன்னை மரியாவை இயேசுவின் திருத்தூதர் புனித யோவான் இந்த இல்லத்துக்கு அழைத்து வந்தார், அன்னை மரியா அவரது விண்ணேற்புவரை இவ்வில்லத்தில் வாழ்ந்தார் என்ற நம்பிக்கையில் கத்தோலிக்கத் திருப்பயணிகள் இவ்வில்லத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

துருக்கி நாட்டிலுள்ள இத்திருத்தலத்துக்கு  1967ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி திருத்தந்தை 6ம் பவுல், 1979ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருத்தந்தை 2ம் ஜான் பால், 2006ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆகியோர் திருப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இத்திருத்தலம் தன்னிலே பெரியது அல்ல. இது ஒரு சிறிய ஆலயமாக உள்ளது. இதன் சுவர்கள், இயேசுவின் திருத்தூதர்கள் காலத்து கற்களையும், கட்டுமான அமைப்பையும் கொண்டுள்ளன. இந்த அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆயினும், தற்போது ஒரு சிறிய தோட்டமும், பக்திமுயற்சிகளுக்கான அமைப்பும் புதிதாக உள்ளன. இங்குச் செல்லும் திருப்பயணிகள் முதலில் ஒரு பெரிய அறையையும், அதன் மத்தியில் ஒரு பீடத்தையும், ஒரு பெரிய அன்னை மரியா திருவுருவத்தையும் காண முடியும். அதன் வலது பக்கம் இருக்கின்ற சிறிய அறையில்தான் அன்னை மரியா உறங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கு வெளியே ஒரு நீரூற்று உள்ளது. இதிலுள்ள தண்ணீருக்குக் குணமளிக்கும் வரம் இருப்பதாகப் பலர் சொல்லியுள்ளனர். பலர் அற்புதமாகக் குணமடைந்தும் உள்ளனர். இத்திருத்தலத்திலுள்ள சுவரில் திருப்பயணிகள் தங்கள் விண்ணப்பங்களை எழுதி வைக்கின்றனர்.  இத்திருத்தலத்துக்கு அருகில் பலவகை மலர்களைக் காணலாம். பலவகைப் பழ மரங்களும் உள்ளன.

முத்திப்பேறுபெற்ற அருள்சகோதரி Anne Catherine Emmerich, அகுஸ்தீன் துறவு சபையைச் சேர்ந்தவர். இவர் ஜெர்மனியின் Dülmenல் படுத்த படுக்கையாக இருந்த ஒரு நோயாளிச் சகோதரி. ஆன்மீக அனுபவ ஞானங்களைப் பெற்றிருந்த இச்சகோதரி, இயேசுவின் இறுதிக்கால வாழ்வு, இயேசுவின் தாயான மரியின் வாழ்வு பற்றிய விபரங்களைக் காட்சிகளில் கண்டுள்ளார். பல பெரிய மனிதர்கள் இவரைச் சந்தித்துள்ளனர். இப்படி இவரைச் சந்தித்தவர்களில் ஒருவரான எழுத்தாளர் Clemens Brentano என்பவர், Catherine Emmerichயை முதன்முறைச் சந்தித்த பின்னர் Dülmenல் ஐந்தாண்டுகள் தங்கி ஒவ்வொரு நாளும் அவரைச் சந்தித்து, அவர் சொல்லச் சொல்ல அவரது காட்சிகளை எழுதி வைத்தார். அருள்சகோதரி Emmerich இறந்த பின்னர், Brentano அக்காட்சிகளை புத்தகமாக வெளியிட்டார். பின்னர் அக்காட்சிகளை வைத்து அவரது குறிப்புக்களாக அவரது இறப்புக்குப் பின்னர் இரண்டாவது புத்தகம் வெளியிடப்பட்டது. அக்காட்சிகளில் ஒன்றின்படி, இது, புனித யோவான் எபேசில் அன்னைமரியாவுக்காகக் கட்டிய வீடு ஆகும். இவ்வீட்டில்தான் அன்னைமரியா தனது வாழ்வின் இறுதிவரை வாழ்ந்தார். இவ்வீடு இருக்குமிடம், அதன் சுற்றுப்புற பகுதி குறித்து அருள்சகோதரி Emmerich விலாவாரியாக காட்சியில் கண்டு அதனை விளக்கியுள்ளார்.

அன்னை மரியா எபேசில் வாழவில்லை. ஆயினும் எபேசுக்கு அருகில், எருசலேமிலிருந்து வரும் சாலையின் இடதுபுறத்திலுள்ள ஒரு குன்றில் வாழ்ந்தார். இக்குன்றின் சரிவு எபேசை நோக்கியபடி உள்ளது. மரியா வாழ்ந்த அந்த வீடு செவ்வக வடிவ கற்களால் கட்டப்பட்டுள்ளது. சன்னல்கள் உயரத்தில் உள்ளன. இவ்வாறு அருள்சகோதரி Emmerich காட்சியில் வர்ணித்துள்ளார். இக்காட்சிகள் கொண்ட புத்தகம் 1852ம் ஆண்டில் ஜெர்மனியின் மியுனிச்சில் வெளியானது. இப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளபடி, பிரான்ஸ் நாட்டு அருள்பணியாளர் Julien Gouyet, 1881ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி இந்த வீட்டைக் கண்டுபிடித்தார். எனினும் இவரின் இக்கண்டுபிடிப்பை பலர் அவ்வளவாக எடுத்துக்கொள்ளவில்லை. இதற்குப் பத்து ஆண்டுகள் கழித்து அருள்சகோதரி Marie de Mandat-Grancey என்பவரின் தூண்டுதலால், Smyrnaவைச் சேர்ந்த இரு லாசரிஸ்ட் மறைபோதகக் குருக்களான Poulin, Jung ஆகிய இருவரும் 1891ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி அந்தக் காட்சிப் புத்தக விளக்கத்தை வைத்து இந்த இல்லத்தை மீண்டும் கண்டுபிடித்தனர். அந்த மலைப்பகுதியில் வாழ்ந்த எபேசு கிறிஸ்தவர்களின் தலைமுறைகள், கூரையின்றி நான்கு சுவர்களாலான இந்த இல்லத்தை வணங்கி வந்தனர் என இம்மறைபோதகர்கள் கண்டுபிடித்தனர்.  இந்த இல்லம், Panaya Kapulu அதாவது "கன்னிமரியாவுக்கு வாயில்" என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி மரியின் விண்ணேற்பு விழாவன்று இங்கு திருப்பயணிகள் திருப்பயணம் மேற்கொள்கின்றனர்.  

அருள்சகோதரி Marie de Mandat-Grancey, இந்தப் புனித கன்னிமரியா இல்லத்தின் நிறுவனர் என அழைக்கப்படுகிறார். அருள்சகோதரி Marie de Mandat-Grancey, 1891ம் ஆண்டுமுதல் 1915ம் ஆண்டுவரை, அதாவது அவர் இறக்கும்வரை இந்த இல்லத்தையும், அதன் சுற்றுப்புற மலைப்பகுதியையும் பராமரித்து வந்துள்ளார். 1896ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் லியோ, 1961ம் ஆண்டில் திருத்தந்தை 23ம் அருளப்பர் ஆகியோர் எடுத்த முயற்சிகளால் எபேசுக்கு அருகிலுள்ள இந்த மரியின் இல்லத்துக்கு எல்லா நேரங்களிலும் பரிபூரணபலன் ஆசீர் கிடைத்துள்ளது. இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் அன்னைமரியா வாழ்ந்த இந்த இடத்துக்கு நாமும் நினைவால் சென்று அருளாசீர்களைப் பெறுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2024, 12:58