இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர் இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 62-3, நம் செயல்களுக்கேற்ற கைமாறு!

உழைப்புச் சுரண்டல், கொள்ளையடித்தல், மிதமிஞ்சிய செல்வபற்று ஆகிய மூன்று காரியங்களிலும் கவனம் செலுத்தாது, கடவுளுக்குரியவற்றில் நம் மனங்களைச் செலுத்துவோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 62-3, நம் செயல்களுக்கேற்ற கைமாறு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘கடவுள் அருளும் வாழ்வே நிலையானது!’ என்ற தலைப்பில் 62-வது திருப்பாடலில் 8, 9 ஆகிய இரண்டு இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 10 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அமைந்த மனதுடன் அவ்வார்த்தைகளை வாசிப்போம். "பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்; கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்; செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர். ‛ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். ‛என் தலைவரே! உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!’ ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்குத் தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர்" (வச. 10-12). ஒரு கதையுடன் நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம்.

ஓர் ஊரில் வித்தகன் என்று பெயர்கொண்ட ஏமாற்றுக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு பிழைப்பே மற்றவர்களை பொய்,கபடு,தந்திரம் கொண்டு ஏமாற்றி வாழ்வதுதான். எல்லாரையும் நம்பும்படி பொய்பேசி  தன்னுடைய வலையில் வீழ்த்திவிடுவான். மக்கள் எல்லாரும் அவன் சொல்வது உண்மை என்று நம்பி ஏமாந்து பொன்னையும் பொருளையும் அவனிடம் இழந்து விடுவார்கள். ஏமாந்து போனவர்கள் எடுத்துச் சொன்னாலும் கூட மற்றவர்கள் அதை நம்புவதில்லை. மக்களை நம்பும்படி செய்வதற்கு அவன் ஒரு தந்திரம் செய்வான். அதற்காக எப்போதும் ஒருவனை தன்னுடனேயே வைத்திருப்பான். அவன் பெயர் அடியவன். வித்தகன் செய்யும் அத்தனை தீய காரியங்களுக்கும் இவனே உறுதுணையாக இருப்பான். அவ்வப்போது வித்தகன் தரும் சன்மானத்தை வாங்கிக் கொள்வான். வித்தகனின் வஞ்சனையால் அவனிடம் பொன்னும், பொருளும், விவசாய நிலமும் பெருகின. அவனால் பலர் தங்களது வாழ்வை இழந்து நின்றார்கள். அதற்கு வித்தகனுடன் அடியவன் இணைந்து நின்றதால் இந்த பாவத்தில்  சரிபாதி பங்கு  அடியவனுக்கு உண்டு. அவனது உதவி இல்லாமல் வித்தகனின் பொய்,கபடு,தந்திரம் எதுவும் வெற்றி பெறமுடியாது. அடியவனுக்கு அந்த ஊரில் ஒரு காணி விவசாய நிலம் இருந்தது. வழக்கம் போல வித்தகனுக்கு அடியவனின் அந்த நிலத்தின் மீது ஒரு கண் இருந்தது. மறைமுகமாக அந்த நிலத்தை வித்தகனிடம் கேட்டுப் பார்த்தான்; அடியவன் அதற்கு உடன்படவில்லை.

எனவே அடியவனின் நிலத்துக்குப் போகும் வழியை அடைத்தாற்போல வித்தகன்  வேலி அமைத்துவிட்டான். அடியவன் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் வித்தகன் வழிவிட மறுத்துவிட்டான். இறுதியில் அடியவன் தன்னுடைய நிலத்தை வேறு வழியில்லாமல் வித்தகனுக்கு விற்க வேண்டியதாயிற்று. அப்போதுதான் அடியவனுக்கு ஓர் உண்மை விளங்கியது. ‘வஞ்சனை செய்பவர்களுக்கு  நண்பர்கள், சொந்த பந்தங்கள் என்றெல்லாம் எந்த அன்போ பாசமோ கிடையாது. அதிகம் சொல்லப்போனால் மனைவி மக்கள் கூட முக்கியமில்லை. அவர்களது சுயநலத்தில் வெற்றிபெறுவதான் அவர்களுக்கு முக்கியம். அதற்காக யாருக்கும் துணிந்து வஞ்சனை செய்வார்கள். அப்படி இருக்கையில் இந்த அடியவன் எம்மாத்திரம்’ என்பதை அறிந்துணர்ந்தான். ஆகவே, வஞ்சனை செய்பவனுக்கு இணக்கமாக இருந்ததற்கு தனக்குத் தக்க தண்டனை கிடைத்துவிட்டதாக உணர்ந்தான். இதற்கு பிராயச்சித்தமாக ஊர்மக்களிடம் வித்தகனின் ஏமாற்று வேலைகளை எல்லாம் எடுத்துக் கூறி எல்லாரையும் காப்பாற்றுவதே தனது தலையாய கடமை என்று செயல்படத் தொடங்கினான். ஒருவனுடைய மனதில் வஞ்சனை ஏற்பட்டுவிட்டால் அவன் மற்றவர்களின் உழைப்பையும் நிலபுலன்களையும் கொள்ளையடிப்பது ஒன்றையே குறியாகக் கொண்டிருப்பான்.

நாம் தியானிக்கும் இறைவார்தைகளில், "பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்; கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்; செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர். ‛ஆற்றல் கடவுளுக்கே உரியது!’ என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன்" என்கின்றார் தாவீது. அவரின் இந்த வார்த்தைகளில் நம்மைச் சுற்றி நிலவும் பல்வேறு நிகழ்வுகளை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. இன்றைய உலகில் ஆளும் வர்க்கமும் சரி, பெரும் முதலாளி  வர்க்கமும் சரி மக்களின் உழைப்பை கசக்கிப் பிழிவதில் இன்பம் காண்கின்றன. அதிலும் குறிப்பாக, இப்போது software companies என்று நாம் அழைக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நம் தேசத்தின் இளையோரின் உழைப்பை பெருமளவில் கசக்கிக்கிப் பிழிகின்றன. முதல்தர நிறுவனங்களாக இடம்பெற்று பெருமளவில் பொருள் ஈட்ட வேண்டும் என்ற தரம்தாழ்ந்த சிந்தனைகளை தன்னகத்தே கொண்டிருப்பதுதான் இந்தச் சுரண்டலுக்கு அடிப்படைக் காரணம். இதனால் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, மனித மாண்புகள் சிதைக்கப்படுகின்றன. 'உழைப்புச் சுரண்டல் தான்' இன்றைய உலகின் உச்சம்! அதிலும் பெண்களின் உழைப்பைச் சுரண்டும் கூட்டம் நம்மிடையே அதிகம் இருப்பதைப் பார்க்கின்றோம். "வயல் வேலைகளில் இருந்து ஒயிட் காலர் ஜாப்கள் வரை, பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டல் வெவ்வேறு பரிணாமங்களை எடுத்துள்ளதே தவிர, அதற்குத் தீர்வு என்பது தூரத்திலேயே கிடக்கிறது. தங்கள் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டல் குறித்து குரல் எழுப்ப அதிகாரவர்க்கத்திலேயே சில பெண்கள்தான் முன்வருகின்றனர். அந்தளவுக்குப் பெண்களுக்கு பாரபட்சமான, கடுமையான சூழல்தான் இங்கு நிலவுகிறது. இந்நிலையில், சாமான்யப் பெண்களைப் பொறுத்தவரை, பணியிடங்களில் தங்களுக்கு நேரும் சுரண்டல்கள் பற்றிக் குரல் எழுப்பினால் தங்கள் வேலை, எதிர்காலம், குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப்படுமே என்ற அச்சத்தினால், தங்கள் குரல்களை தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கின்றனர்" என்கின்றது தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்று. இவற்றுடன் குழந்தைகளின் உழைப்பைச் சுரண்டிப் பிழைக்கும் கொடிய நிலையும் இப்போது நம்மிடையே நிலவுகிறது. இன்று உலகளவில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் 6 கோடியே 30 இலட்சம் பெண் குழந்தைகள் என்றும், 9 கோடியே 70 இலட்சம் ஆண் குழந்தைகள் என்றும் புள்ளிவிபரம் ஒன்று புலப்படுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் "பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்" என்று தனக்கு கடவுள் அறிவுறுத்துவதாகக் கூறுகின்றார் தாவீது.

அடுத்து முக்கியமாக, "கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்" என்று தலைவராகிய கடவுள் தன்னை வலியுறுத்துவதாகவும் உரைக்கின்றார் தாவீது. இங்கே கொள்ளை அடிப்பது என்பது மற்றவர்களின் உழைப்பை சுரண்டுவது என்பதைவிட, அவர்களின் நிலபுலன்களையும், சேர்த்துவைத்துள்ள பொருள்கள், காசு பணம் ஆகியவற்றைக் கவர்ந்துகொள்வதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, அண்மையில் நிகழ்ந்த நமது நாட்டின் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிஜேபி-யின் தேர்தல் பத்திரங்கள் வழி நடந்த பெரும் ஊழல் குறித்து பேசப்பட்டது. இந்த ஊழலின் வழியாக பெரும் கொள்ளை நடந்திருக்கின்றது என்று எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி அனைத்து சமூக நலன்விரும்பிகளும் குரலெழுப்பினர். தேர்தல் பத்திரங்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு அரசியல் கட்சிகள் பெருமளவு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றன. அதிலும் மத்தியில் ஆளும் பாஜக கட்சிதான் அதிக அளவிலான நன்கொடையை பெற்றது. இதற்கிடையே, தேர்தல் பத்திரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளது என்றும், தேர்தல் பத்திர முறை என்பது சட்ட விரோதமானது என்பதால் அதை இரத்து செய்வதாகவும் அதிரடியாக அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற கட்சிகளுக்குப் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜக, கடந்த 6 ஆண்டுகளில் ஏறத்தாழ 6 ஆயிரம் கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெற்றுள்ளது. அப்படி, பாஜக 2018-ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையின் விவரங்களும் வெளியிடப்பட்டது. அதன்படி 2018-ஆம் ஆண்டில்  210 கோடி ரூபாயும், 2019-ஆம் ஆண்டில் 1,450 கோடி ரூபாயும், 2020-ஆம் ஆண்டில்  2,555 கோடியும் பெற்றுள்ளது. அதேபோல், 2021-ஆம் ஆண்டு 22.38 கோடி ரூபாயும், 2022-ஆம் ஆண்டு 1,033 கோடி ரூபாயும் 2023-ஆம் ஆண்டு 1,294 கோடி ரூபாயும் என மொத்தம் 6,564 கோடி ரூபாயை (2018-2023) தேர்தல் பத்திரம் மூலம் பெற்றுள்ளது என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.   

இந்த உழைப்புச் சுரண்டல், கொள்ளை அடித்தல், மிதமிஞ்சிய செல்வப்பற்று ஆகிய மூன்றும் இஸ்ரயேல் மக்கள் மத்தியிலும் இடம்பெற்றிருந்தது. அதனால்தான், “வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்; ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;  வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’ (காண்க. ஆமோ 8:4-6) என்று அறச்சினம் கொள்ளும் இறைவாக்கினர் ஆமோஸ், “சீயோன் குன்றின்மீது இன்பத்தில் திளைத்திருப்போரே! சமாரியா மலைமேல் கவலையற்றிருப்போரே! மக்களினங்களுள் சிறந்த இனத்தின் உயர்குடி மக்களே! இஸ்ரயேலின் மக்கள் தேடி வருமளவுக்குப் பெருமை வாய்ந்தவர்களே! உங்களுக்கு ஐயோ கேடு! (ஆமோ 6:1) என்று அவர்களுக்கு வரவிருக்கும் தண்டனைக் குறித்தும் தெரிவிக்கின்றார்.

ஆக, உழைப்புச் சுரண்டல், கொள்ளையடித்தல், மிதமிஞ்சிய செல்வப்பற்று ஆகிய மூன்று காரியங்களிலும் கவனம் செலுத்த வேண்டாம் என்று தலைவராகிய கடவுள் தனக்கு ஒருமுறை கூறினாலும் தான் அதை இரண்டுமுறை கேட்டதாகக் கூறுகின்றார் தாவீது. இங்கே இரண்டு முறை என்பது அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இறுதியாக, ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்குத் தக்க கைமாறை கடவுள் அளிப்பதால் மேற்கண்ட முக்காரியங்களிலும் மிகவும் கவனமாக இருக்குமாறு நம்மை அறிவுறுத்தி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. ஆகவே, நாமும் உழைப்புச் சுரண்டல், கொள்ளையடித்தல், மிதமிஞ்சிய செல்வப்பற்று ஆகிய மூன்று காரியங்களிலும் கவனம் செலுத்தாது, கடவுளுக்குரிய செயல்களில் நம் மனங்களைச் செலுத்துவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2024, 12:58