இறைவேண்டல் செய்யும் தாவீது இறைவேண்டல் செய்யும் தாவீது  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 63-1, உயிரினும் மேலான கடவுளின் பேரன்பு!

நாமும் நமது உண்மையான அன்பை கடவுளிடம் வெளிப்படுத்தி உயிரினும் மேலான அவரது பேரன்பை சுவைத்து மகிழ்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 63-1, உயிரினும் மேலான கடவுளின் பேரன்பு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நம் செயல்களுக்கேற்ற கைமாறு!’ என்ற தலைப்பில் 62-வது திருப்பாடலில் 10 முதல் 12 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 63-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'கடவுளுக்காக ஏங்குதல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 11 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. 'யூதாவின் பாலைநிலத்தில் இருந்தபோது, தாவீது பாடிய புகழ்ப்பா' என்று இத்திருப்பாடல் துணைத்தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்னணியை சற்று அலசுவோம். பெரும்பாலான விவிலிய அறிஞர்கள்  தாவீது இஸ்ரயேல் மக்களின் அரசராக அரியணை ஏறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் காட்டில் இருந்தபோது இத்திருப்பாடலை பாடியிருக்கலாம் அல்லது தனது மகன் அப்சலோம் ஏற்படுத்திய கிளர்ச்சியின்போது அவர் அவனிடமிருந்து காட்டிற்குத் தப்பிச் செல்வதற்கு முன்பாக எழுதியிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

இத்திருப்பாடலை பக்திமணம் கமழும் வகையில் எழுதியுள்ளார் தாவீது. புனித பவுலடியார் சிறையில் இருந்தபோது இனிமையான திருமடல்கள் பலவற்றை எழுதியதுபோல, காட்டில் இருந்தபோது தாவீது எழுதிய பல திருப்பாடல்களும் இனிமை நிறைந்தவையாக உள்ளன என்றும் நாம் அருமையாக ஒப்பிடலாம். தனது மகன் அப்சலோமால் காட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட தாவீது, அங்கே தனிமையில் வாடியபோது தனது ஆன்ம பசியைப் போக்கிக்கொள்ளவும், தன்னைக் காக்கும் கடவுளின் என்றுமுள்ள பேரன்பைப் போற்றிப் பாடவும் இந்தத் திருப்பாடலை எழுதுகின்றார். கடவுளை நோக்கிய அவரது ஆசை (வ. 1, 2), கடவுள் மீதான அவரது மரியாதை (வச. 3, 4), கடவுளில் அவரது நிறைவு (வச. 5). கடவுள்மீது அவர் கொண்டிருந்த உள்ளார்ந்த ஒன்றிப்பு (வச. 6), மகிழ்ச்சியுடன் கடவுளை முழுதும் சார்ந்திருத்தல் (வச. 7-8), அவரின் எதிரிகள்மீது கடவுள் அவருக்கு அளித்த வெற்றி (வச.9-11) ஆகிய ஆறு கூறுகளை இத்திருப்பாடலில் காண்கின்றோம்.

இந்தத் திருப்பாடலை ஒவ்வொருநாளும் பொதுவில் பாட வேண்டும் என்று தொடக்ககால கிறிஸ்தவர்களிடம் கிறிசோசோம் ஆணை ஒன்றைப் பிறப்பித்ததாக சார்லஸ் ஸ்பர்ஜன் என்பவர் குறிப்பொன்றை எழுதியுள்ளார். இதிலிருந்தே இத்திருப்பாடல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இப்போது இத்திருப்பாடலின் முதல் 4 இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். அமைதி நிறைந்த மனதுடன் அந்த இறைவார்த்தைகளை வாசிப்போம். “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்” (வச. 1-4).

முதலில் சிறியதொரு கதையுடன் நமது சிந்தனைகளை ஆழப்படுத்துவோம். ஓர் ஊரில் வாழ்ந்த சிலர், கடவுளைத் தேடிப் புறப்பட்டனர். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தனர். வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், அவ்வேளையில், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச்சென்றிருப்பதை அறிந்தார். உடனே குதிரையில் ஏறி அமர்ந்த அவர், அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார். சில மணிநேரத்தில் அவர்களைப் பிடித்தார். குதிரையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று அவர்களை வாழ்த்தினார். பின்னர் மீண்டும், குதிரையில் ஏறி அமர்ந்த அவர். அவர்கள் செல்லும் வழியிலேயே குதிரையை ஓட்டத் தொடங்கினார். அவர் ஊர் திரும்பாமல், தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் வியப்படைந்தார்கள். அவர்களில் ஒருவர், "பெரியவரே! ஊர் திரும்பாமல் ஏன் எங்களுக்கு முன்னால் செல்கிறீர்?" என்று கேட்டார்.

"என் குதிரையைத் தேடிவந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் குதிரையைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன். குதிரையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். குதிரை கிடைக்காமல் ஊர் திரும்பமாட்டேன்" என்றார். இதைக் கேட்ட அவர்கள், "குதிரை மீது அமர்ந்தபடியே குதிரையைத் தேடுகிறாரே, இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்" என்று எண்ணிச் சிரித்தார்கள். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர். "குதிரையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள். உம் கண்ணெதிரிலேயே குதிரை இருக்கிறது. அப்படியிருக்க, குதிரையைத் தேடிப்போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது?" என்றனர், உடனே அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் கடவுளைத் தேடிச்செல்வதாகச் சொல்லிக்கொண்டு. உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளை தேடி அலைகிறீர்கள். அதற்காக நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா?" என்று பதில் கேள்வி கேட்டார், அப்போதுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது. தங்கள் தவற்றை உணர்ந்த அவர்கள் அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினர்.

தாவீது அரசர் இப்படி மதியற்றதனத்தில் செயல்படவில்லை. அவர் எப்போதும் கடவுள் தன்னில் இருப்பதை ஆழமாக உணர்ந்தார். முதலில் அவரை உள்ளத்தளவிலும் உடலளவிலும் வழிபட்டார். இதன் பின்னணியில் இப்போது “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது” என்ற இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இங்கே நாடுதல், தாகம்கொள்ளல், ஏங்குதல் என்று மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார் தாவீது அரசர். இந்த மூன்று வார்த்தைகளும் ஆன்மிக வாழ்வின் ஆதாரமாகவும் அடிநாதமாகவும் அமைகின்றன. இறைவனை நோக்கிய நாட்டம் மனிதருக்கு மிகவும் அவசியமானது என்பதை இங்கே எடுத்துக்காட்டுகின்றார் தாவீது. இன்றைய உலகில் மனிதர் இறைவனுக்கு உரியவற்றை நாடாது இவ்வுலகிற்கு உரியவற்றை நாடுகின்றனர். இறைவனுக்கு உரியவற்றை நாடுவது என்பது அவரை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருப்பது, மற்றும் எல்லாவற்றிலும் அவரை மட்டுமே நம்பி இருப்பது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இங்கே நாடுதல் என்பது தேடுதல், ஈர்ப்பு என்றும்  பொருளாகிறது. அப்படியென்றால், ஒரு காரியத்தில் ஈர்ப்பு ஏற்படும்போது அதனை நாம் தேடிசெல்வதுபோல் கடவுள்மீது நமக்கோர் ஈர்ப்பு ஏற்படும்போதுதான் அவர்மீதான நாடுதலும் தேடுதலும் பிறக்கும். அதனால்தான், “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்” என்கின்றார் தாவீது.

அடுத்து தாகம் குறித்து சிந்திப்போம். தாகம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. எடுத்துகாட்டாக, ஒரு காட்டில் நீண்டதொரு பயணத்தை நாம் மேற்கொள்வதாக வைத்துகொள்வோம். கையில் தண்ணீர் ஏதும் எடுத்துச் செல்லவில்லை. அப்போது மிகுந்த பயணக் களைப்பில் இருகின்றோம். கண்ணிற்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் தென்படவில்ல. அந்நிலையில் நமது உணர்வுகள் எப்படிருக்கும்? எங்காவது சிறிது தண்ணீர் கிடைத்தால்கூட போதும் அதனை அப்படியே அள்ளிப் பருக வேண்டும் என்றதொரு ஏக்கம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டதொரு ஏக்கம் இறைவனைத் தேடுவதில் இருக்க வேண்டும். அவ்வாறே நாம் விரும்பிய தண்ணீர் கிடைத்து நமது தாகம் தீரும்போது என்னவொரு நிறைவு கிட்டுமோ, அதே நிறைவு நாம் இறைவனைத் தேடிக்கண்டுகொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இதன் காரணமாகத்தான், “என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது” என்றுரைகின்றார் தாவீது.

அடுத்து "நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது"  என்கின்றார். தரிசு நிலம் என்பது பயிரிடப்படாமலும், உரிய நீர் மற்றும் நில மேலாண்மை இன்றி வளர்ச்சியற்றுக் கிடக்கும் இடங்களைக் குறிக்கும். கால்நடைகளை அதிகமாக மேய விடல், நச்சுத்தன்மை கொண்ட கழிவு நீரையும், தொழிற்சாலை கழிவுகளையும், தொழிற்சாலையை சுற்றியுள்ள நல்ல விளைநிலங்களில் விடுவதால் நல்ல நிலங்கள் தரிசு நிலங்களாகி அவை விளைச்சலுக்கு தகுதியற்றவையாகின்றன என்பதை அறிவியல் ரீதியாகப் பார்க்கின்றோம். உலக இன்பங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கும்போது நல்ல நிலங்களாக இருக்கும் மனிதரின் மனங்களும் இப்படித்தான் தரிசு நிலங்களாக மாறிப்போகின்றன. தங்களை உணர்ந்த ஒரு காலகட்டத்தில் அவை கடவுளின் இரக்கமிகு செயல்களுக்காக ஏங்கித்தவிக்கின்றன. தரிசு நிலங்களை எவ்வாறு நல்ல நிலங்களாக மாற்றுவது என்பதற்கு, கால்நடைகளுக்கென தனி மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல், மண்ணரிப்பைத் தடுக்கும் வழிமுறைகளை கையாளுதல், உவர் நிலமாக மாறாமல் இருக்கத் தேவைக்கு அதிகமாக நீர் பாய்ச்சுவதை தடுத்தல், மண் வள பரிசோதனை அடிக்கடி செய்யக் கற்றுக்கொடுத்தல், சுரங்கங்களின் கழிவுகளை அகற்றி தரிசு நிலங்களை விளைநிலங்களாக எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்தல் போன்றவற்றை சூழலியல் வல்லுநர்கள் கையாள வேண்டும் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு வழிகளில் பாழ்ப்பட்டு தரிசு நிலங்களாக மாறியுள்ள நமது மனங்களையும் கடவுளை நோக்கித் திருப்பும்போதும், அவற்றில் ஆன்மிகக் காரியங்களை விதைக்கும்போதும் அவைகள் பலனளிக்கும் நல்ல நிலங்களாக மாறும் என்பது திண்ணம் அன்றோ?

இதன் காரணமாகத்தான், "நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது" என்று கூறும் தாவீது அரசர், அவரது ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து அவரது தூயகம் வந்து அவரை நோக்குவதாகவும், அவரது பேரன்பு உயிரினும் மேலானது' என்றும் கூறுகின்றார். பொதுவாக, உண்மையாக நேசிக்கும் காதலர் மற்றும் கணவன் மனைவியரிடத்தில்தான் இதுபோன்ற உண்மையான அன்புத் ததும்பும். மாறாக, பொய்யும், போலியும், புரட்டும் நிறைந்த காதலில் இத்தகைய வார்த்தைகள் வெளிப்பட வாய்ப்பே இல்லை. தாவீது இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றால், அவர் கடவுளை எந்தளவுக்குப் பிரமாணிக்கத்துடன் அன்புகூர்கிறார் என்பதை நம்மால் அறிந்துணர்ந்துகொள்ள முடிகின்றது. ஆகவே, நாமும் நமது உண்மையான அன்பை கடவுளிடம் வெளிப்படுத்தி உயிரினும் மேலான அவரது பேரன்பை சுவைத்து மகிழ்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2024, 12:06