அன்னை மரியா-எலிசபெத் சந்திப்பு அன்னை மரியா-எலிசபெத் சந்திப்பு  

திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு : சந்திப்புகள் தரும் புதுவாழ்வு!

நமது சந்திப்புகள் பிறருக்கு உற்சாகத்தையும் உன்னதமான வாழ்வையும் வழங்கட்டும். வாழ்வைக் கொடுப்போம் வாழ்வைப் பெறுவோம்.
திருவருகைக் காலம் 4-ஆம் ஞாயிறு : சந்திப்புகள் தரும் புதுவாழ்வு!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்      I. மீக் 5:2-5a      II. எபி 10:5-10     III. லூக் 1:39-45)

திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிற்றுக்கிழமையை இன்று நாம் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்களின் மையக்கருத்தாக அமைவது ‘சந்திப்பு’ என்ற உன்னதமான சிந்தனை. இதனை ‘சந்திப்புகள் தரும் புதுவாழ்வு!’ என்ற தலைப்பில் சற்று ஆழமாகச் சிந்திப்போம். நமது நாட்டில் உள்ள இரயில் நிலையங்களின் பெயர்கள் அனைத்தும் ‘Junction’ என்ற ஆங்கில வார்த்தையில் எழுதப்பட்டிருக்கும். தமிழக இரயில் நிலையங்களில் அதனை ‘சந்திப்பு’ என்று மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், இரயில் நிலையம் அல்லது தொடர்வண்டி நிலையம், அல்லது railway station என்றுதான் எழுதியிருக்க வேண்டும். ஆங்கிலேயர் காலம் தொட்டு இன்றுவரை ‘junction’ அதாவது ‘சந்திப்பு’ என்ற வார்த்தையே அலுவல் ரீதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதாவது ‘திருச்சி சந்திப்பு’ ‘திண்டுக்கல் சந்திப்பு’, ‘தாம்பரம் சந்திப்பு’, ‘எழும்பூர் சந்திப்பு’ என்றே அழைக்கிறோம். ஏனென்று இதனைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது அதன் உண்மை தெரியவருகிறது. நம் நாட்டின் ஒவ்வொரு இரயில் நிலையத்திற்கும் பல மாநிலங்களிலிருந்தும், நகர்களிலிருந்தும் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற தொடர்வண்டிகள் வந்து போகின்றன. அப்படியென்றால், அங்கே தொடர்வண்டிகள் மட்டும் சந்திக்கவில்லை. மாறாக,  பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருவர் ஒருவரைச் சந்திக்கின்றனர். ஊருக்குச் செல்பவர்களைக் கூட்டிச்செல்லவும், பயணித்துத் திரும்பியவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் பலரும் அங்கே வருகின்றனர். அதுமட்டுமன்றி, தொடர்வண்டிகளில் நாம் ஒன்றாகப் பயணிக்கும்போது ஒருவர் ஒருவரோடு அறிமுகமாகிக்கொண்டு உரையாடுகிறோம். அப்போது நம்மிடம் இருக்கின்ற உணவினையும், உணர்வுகளையும், இன்ப துன்ப நிகழ்வுகளையும் நாம் மற்றவர்களோடுப் பகிர்ந்துகொள்கின்றோம், அதுவும் நீண்ட நெடிய பயணம் என்றால் நாம் அவர்களோடு மிகவும் ஒன்றித்துப்போய் விடுகிறோம். இத்தகைய சந்திப்புகள் நமக்குள் புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன.  

“நான் மட்டும் அன்று அவரைச் சந்தித்திருக்காவிட்டால் என் வாழ்வில் இந்த உயர்வான நிலையை என்னால் அடைந்திருக்க முடியாது.” “அவருடனான சந்திப்புதான் என் ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றிப்போட்டது.” “அன்று முதல்முறையாக எங்களுக்குள் ஏற்பட்ட சந்திப்புதான் எங்களுக்குள் திருமண பந்தத்தை ஏற்படுத்தியது” “அந்தக் குருவானவரை நான் அன்று சந்தித்ததால்தான் இத்தகையதொரு இறையழைத்தலைப் பெற்றேன்” என்றெல்லாம்  நாம் சொல்லக்கேட்டிருக்கிறோம், பல நேரங்களில் நாமே சொல்லியிருக்கிறோம். ஆக, நாம் மேற்கொள்ளும் சந்திப்புகள் நம் வாழ்வை மாற்றுகின்றன. பழைய ஏற்பாட்டுக் காலம் தொடங்கி புதிய ஏற்பாட்டுக் காலம் வரை மீட்பின் வரலாற்றில் இறை-மனிதச் சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பழைய ஏற்பாட்டில் மீட்பின் தொடக்கமாக அமைவது கடவுள்- முதல்பெற்றோர் சந்திப்பு. அதனைத் தொடர்ந்து கடவுள்-நோவா சந்திப்பு, நமது முதுபெரும் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோப்பு இவர்களுடனான கடவுளின் சந்திப்பு என அந்தப் பட்டியல் நீள்கிறது. அதன்பின்னர், இஸ்ரயேல் மக்கள் வேற்றுநாடுகளுக்கு அடிமைகளாக நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குத் தனது மீட்புச் செய்தியை கொடுப்பதற்காக பெரிய இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் சிறிய இறைவாக்கினர்களான ஆமோஸ், செப்பனியா, யோவேல், யோனா, மீக்கா ஆகியோருடன் கடவுள் மேற்கொண்ட சந்திப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

புதிய ஏற்பாட்டைப் பொறுத்தளவில், இறைவன் தனது மீட்புத் திட்டத்திற்கான முதல் சந்திப்பை வானதூதர் கபிரியேல் வழியாக செக்கரியாவுடன் ஏற்படுத்துகின்றார். அதனைத் தொடர்ந்து அன்னை மரியாவுடன் சிறப்பானதொரு சந்திப்பை அதே வானதூதர் கபிரியேல் வழியாக நிகழ்த்துகிறார் கடவுள். பின்னர் மரியாவின் கணவர் யோசேப்புடன் நிகழ்கிறது. இங்கே முக்கியமானதொரு சந்திப்பைக் குறிப்பிட வேண்டும். அதுதான் மூன்று அரசர்கள் சந்திப்பு. வெவ்வேறு நாடுகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், மொழிகள் இனங்களைச் சேர்ந்த அவர்கள் இயேசுவை காணப் புறப்பட்ட தங்களின் நீண்ட நெடிய பயணத்தின் ஒருபுள்ளியில் சந்திக்கிறார்கள். பின்னர் தங்கள் பயணத்தின் நோக்கமான பாலன் இயேசுவைக் கண்டடைகிறார்கள். இயேசு தனது பணிவாழ்வைத் தொடங்கும்போது, முதன்முதலாகத் திருமுழுக்கு யோவானை சந்திக்கிறார். பின்னர் பேதுரு உள்ளிட்ட தனது சீடர்களைச் சந்தித்து அவர்களுக்குப் புதுவாழ்வு அளிக்கின்றார். குறிப்பாக, இயேசுவின் சந்திப்பினால் மகதலா மரியா, மத்தேயு, சக்கேயு ஆகியோர் புதுவாழ்வு பெறுகின்றனர். ஆக, இந்த இறை-மனிதச் சந்திப்புகள் எல்லாமே ‘சந்திப்பு-பகிர்வு-மகிழ்வு’ என்ற மூன்று முக்கியச் சிந்தனைகளை உள்ளடங்கியுள்ளன. மிக முக்கியமாக, இந்த முப்பெரும் பண்புகளும் முதலில் இறைவனிடமிருந்தே அதாவது, மூவொரு கடவுளின் பிணைப்பிலிருந்தே தொடங்குகின்றன என்பதை நம் நினைவில் நிறுத்துவோம்.   

இன்றைய நற்செய்தியின் அடிநாதமாக அமைவது 'மரியா-எலிசபெத்து' சந்திப்பு. பொதுவாக, சந்திப்புகள் இரண்டு வகையில் அமைகின்றன. ஒன்று இயல்பாக அமையும் சந்திப்பு, இரண்டாவது நமது முயற்சியால் நாம் ஏற்படுத்தும் சந்திப்பு. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் சந்திப்புகள் இயல்பாக நடந்தவைகள் அல்ல. மாறாக, அவைகள் இறைவன் எடுத்த முயற்சியால் விளைந்தவை. இங்கு எலிபெத்தை சந்திக்க மரியா முயற்சி எடுக்கிறார். இயல்பாக நிகழும் சந்திப்புகளைவிட நமது முயற்சியால் விளையும் சந்திப்புகள் அதிக வலிகள் நிறைந்தவையாக இருக்கும். ஆனால், அப்படிப்பட்ட சந்திப்புகள்தான் நமக்குப் புதுவாழ்வையும் மகிழ்வையும் கொடுக்கக் கூடியவைகளாக அமைகின்றன. இங்கே, நம் அன்னை மரியா நிகழ்த்தும் சந்திப்பு அப்படித்தான் இருக்கிறது. ஏனென்றால், மரியாவின் வீட்டிற்கும் எலிசபெத்தின் வீட்டிற்குமான தூரம் 130 கி.மீ, அதாவது 81 மைல். இந்தத் தூரத்தை அடைவதற்கு மரியா கழுதையின்மேல் பயணம் செய்திருக்க வேண்டும். இதைக் கடந்து செல்வதற்குக் குறைந்தது மூன்று நாட்களாவது ஆகியிருக்க வேண்டும். அதுவும் தன்னந்தனியாளாக இறைவனின் துணையை மட்டுமே நம்பி மரியா பயணித்திருக்கிறார். இதனை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது, இது ஒன்றும் நகைப்புக்குரிய செயலாகத் தோன்றவில்லை. அன்றைய காலகட்டத்தில் சாலைகளும்கூட இப்போது இருப்பதுபோல் இருந்திருக்க வாய்ப்பில்லை. கரடு முரடானவைகளாகவும் கோணலானவைகளாகவும் அந்தச் சாலைகள் இருந்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, அது ஒரு மலைப்பிரதேசப் பயணம் அப்படியென்றால், இந்தச் சந்திப்பை நிகழ்த்த அன்னை மரியா எத்தனை சிரமங்களையும் துயரங்களையும் அனுபவித்திருப்பார்? அதுவும் கருத்தாங்கிய சில நாட்களிலேயே இந்தப் பயணம் நிகழ்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

நமது குடும்பங்களில் திருமணமான சிலநாள்களில் ஒரு பெண் கருத்தாங்கும்போது, “நீ மிகவும் கவனமாக இருக்கவேண்டும், எந்தக் கடினமான வேலையும் செய்யக்கூடாது, எங்கும் பயணம் செய்யக்கூடாது” என்றெல்லாம் கண்டிப்புக் காட்டுவார்கள். ஏனென்றால், கர்ப்பப்பையில் உருவான கரு கலைந்துவிடும் என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். ஓர் இளம்பெண்ணாக, இந்நிலை அறிந்திருந்தும் கூட, மரியா ஏன் இந்தச் சந்திப்பை நிகழ்த்துகிறார் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். முதலாவதாக, தன் உறவினரான எலிசபெத் வயது முதிர்ந்த நிலையில் கருத்தாங்கி இருக்கிறார், அவருக்கு நிச்சயம் தனது உதவி தேவை என்று மரியா எண்ணியிருந்திருக்கலாம். ஆனாலும், அதனைவிட முக்கியமானதாக தனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி, வியப்பு, குறிப்பாக, தனக்கு என்ன நிகழுமோ என்ற எதிர்காலம் குறித்த அவரின் பதட்டம், அச்சம் ஆகியவற்றைக் குறித்து எலிசபெத்துடன் பகிர்ந்துகொள்ள, மரியா எண்ணம் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதே மரியா ஏற்படுத்திய வலிகள் நிறைத்த இந்தச் சந்திப்பின் மையமாக அமைகிறது.   

இரண்டாவதாக, அன்னை மரியாவின் இந்தப் பயணமும் சந்திப்பும் நமக்கோர் அழைப்பையும் விடுக்கிறது. சில நேரங்களில் நாம் உடளவில் (physical presence) காட்டும் உடனிருப்புதான் பிறருக்கான உண்மையான பரிசாகவும் அமையும். தன் உறவினரான எலிசபெத்திற்குத் தனது அன்பையும் ஆதரவையும் கொடுப்பதற்காக, மரியா தன்னோடு இயேசுவையும் தன்னோடு (கருவில்) சுமந்து சென்றார் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அன்னை மரியாவின் இந்தப் பிறரன்புப் பணிகளில்தான் அவரின் அறச்செயல்களும் வெளிப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வோம். இறுதியாக,  அன்னை மரியாவின் இந்தச் சந்திப்பு, இவ்வுலகில் உள்ள நாம் அனைவரும் தனித் தீவுகள் அல்ல, மாறாக, சங்கிலித் தொடர்போன்று ஒருவர் மற்றவருடன் இணக்கமாக இணைந்திருக்கும் நிலையில் வாழ்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, நாம் பிறரின் நலன்களுக்காக வலிகள் நிறைந்த சந்திப்புகளை நிகழ்த்தும்போது, கொடுப்பது மட்டுமல்ல அவர்களிடமிருந்து வாழ்க்கை அனுபவங்களை நாம் பெற்றுக்கொள்ளவும் செய்கிறோம். இளம்பெண்ணான மரியா, தனதுத் துடிப்பான செயல்கள் வழியே எலிசபெத்துக்கு நற்பணிகள் ஆற்றியபோது அதற்கு ஈடாக, வயது முதிர்ந்த பெண்ணான எலிசபெத்திடமிருந்து அனுபவங்களையும், ஆலோசனைகளையும், ஆன்மிக வழிகாட்டல்களையும், உடனிருப்பையும், உறுதியான கொடைகளாகப் பெற்றுக்கொள்கிறார்.

சாதனைப் பெண் அருணிமா சின்கா
சாதனைப் பெண் அருணிமா சின்கா

நமது இந்திய தேசத்தில் ஓர் இளம் பெண் மேற்கொண்ட வலிநிறைத்த சந்திப்பு எப்படி அவளைச் சாதனைப் பெண்ணாக மாற்றியது என்பது குறித்த நிகழ்வொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். அருணிமா சின்ஹாவை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்தியாவின் இன்றைய இளந்தலைமுறையினரின் உள்ளங்களில் "சாதிக்க ஊனம் ஒரு தடை இல்லை" என்பதை நிரூபிதவள். கொடிய வலிகளும், வேதனைகளும், துயரங்களும் நிறைந்ததுதான் இவளது வாழ்க்கைப் பயணம். உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகரில் 1988-ஆம் ஆண்டு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் அருணிமா. தந்தை இராணுவத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். தாய், நலத்துறைப் பணியாளர். அருணிமாவுக்கு ஓர் அக்கா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி. அவரது ஆறாவது வயதில் தந்தை மர்மமாக இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகள்  கழித்து அண்ணன் கொல்லப்பட்டார். இப்படி அருணிமாவின் பால்யவயது துயரத்தில் கழிந்தது. தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி வீராங்கனையான இவர். 2011-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி டெல்லி செல்வதற்காக லக்னோவின் சார்பக் இரயில் நிலையத்தில் பத்மாவத் விரைவு வண்டியில் ஏறினார். அந்தப் பயணத்தின்போது இரயிலில் இருந்து கொள்ளையர்களால் தள்ளி விடப்பட்டதில் தனது இடது காலை இழந்தார். சிலரின் உதவியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு, ஊடக நண்பர்கள் உதவியுடன் 1984-ஆம் ஆண்டு எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணியான பச்சேந்திரி பாலை, ஜாம்ஷெட்பூரில் நேரில் சந்தித்தார். 'நான் எவரெஸ்ட்டில் ஏறி சாதிக்க விரும்புகிறேன்’ என தடுமாற்றமுடன் வந்த வார்த்தைகள், பச்சேந்திரியைச் சிலிர்க்கச் செய்தன. 'நீ ஏற்கெனவே மனதளவில் எவரெஸ்டில் ஏறிவிட்டாய். நிஜத்திலும் ஏறி உலகுக்கு நிரூபிக்க வேண்டும் அவ்வளவுதான்’! என்று வாழ்த்தினார் அவர். இந்தச் சந்திப்புதான் அருணிமாவின் வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

பச்சேந்திரி பாலின் பயிற்சியும் பலரின் உதவிகளும் அவள் இலக்கை அடைய உதவின. தனது பயிற்சியின்போதும், எவெரெஸ்ட் சிகரத்தை நோக்கிய தனது பயணத்தின்போதும், அருணிமா கடுமையான சவால்களையும் வலிகளையும் சந்தித்தார். இவைகளே இவரின் வெற்றிக்கான வழிகளாகவும் அமைந்தன. ஆம், 2013-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி. காலை 10:55 மணிக்கு அருணிமா, உலகின் உச்சியான 29,029 அடிகள் உயரம் கொண்ட எவரெஸ்ட்டில் கால் பதித்தார். எவரெஸ்ட் உச்சியை அடைந்த முதல் மாற்றுத்திறனாளிப் பெண்ணாகவும், இந்தியப் பெண்ணாகவும் உலக சாதனை படைத்ததார் அருணிமா. இதனைத் தொடர்ந்து ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மிகப்பெரிய மலைகளில் ஏறி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இதற்காக 2015-ஆல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  மேலும் இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டமும் இவர் பெற்றுள்ளார்.  

இந்நாளில், முதலில் கடவுள் நமக்குள் ஏற்படுத்திய சந்திப்புகளை நினைவுகூர்வோம். இரண்டாவதாக, நாம் பெற்ற புதுவாழ்வுக்குக் காரணமாக அமைந்த சந்திப்புகளையும் இவற்றை நிகழ்த்தியவர்களையும் எண்ணிப் பார்த்து இறைவனுக்கு நன்றி கூறுவோம். அன்னை மரியாவின் வழியில் பிறரன்புப் பணிகளுக்கான சந்திப்புகளை நாமும் நாள்தோறும் நிகழ்த்துவோம். நமது சந்திப்புகள் பிறருக்கு உற்சாகத்தையும் உன்னதமான வாழ்வையும் வழங்கட்டும். வாழ்வைக் கொடுப்போம் வாழ்வைப் பெறுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 December 2024, 13:14