இறையாற்றலால் எதிரிகளை வெல்வோம்! இறையாற்றலால் எதிரிகளை வெல்வோம்! 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 64-1, இறையாற்றலால் எதிரிகளை வெல்வோம்!

நமது எதிரிகளைக் கண்டு மனம் தளராது இறைவனிடம் முழுதுமாகச் சரணடைந்து அவர்தரும் ஆன்மிக வலிமையால் அவர்களை வெல்வோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 64-1, இறையாற்றலால் எதிரிகளை வெல்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘அறுசுவை விருந்தளிக்கும் ஆண்டவர்!’ என்ற தலைப்பில் 63-வது திருப்பாடலில் 5 முதல் 11 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவு செய்தோம். இவ்வாரம் 64-வது திருப்பாடல் குறித்த சிந்தனைகளைத் தொடங்குவோம். 'பாதுகாப்புக்காக வேண்டல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 10 இறைவார்த்தைகளைக் கொண்டுள்ள சிறியதொரு திருப்பாடல்தான். இந்த முழு திருப்பாடலும் தாவீதின் எதிரிகள், அவரைத் துன்புறுத்தியவர்கள் மற்றும் அவருக்கு எதிராக அவதூறு செய்தவர்களைக் குறித்துக்காட்டுகிறது. மேலும் அவருடைய எல்லா நாள்களிலும் அவர்கள் அவருக்குப் பெரும் தொல்லைகளைக் கொடுத்தார்கள். இதன் காரணமாக அவர் இந்தத் திருப்பாடலை எழுதியிருக்கலாம் என்றும் நம்மால் யூகிக்க முடிகிறது. இத்திருப்பாடலில், தாவீது தனக்கு எதிராக இரகசியமாக சதி செய்பவர்கள் மற்றும் தனது முதுகுக்குப் பின்னால் அவரைப் பற்றி தவறாகப் பேசுபவர்கள் மீது தனது துயரத்தை வெளிப்படுத்துகிறார். எதிரிகள் அவரை வாள்கள் மற்றும் அம்புகள் போன்ற கூர்மையான வார்த்தைகளால் தாக்குகின்றனர். இந்த அநீதிகளை தாவீது எதிர்கொண்டாலும், அவர்களை அவர் பழிவாங்கத் தேடவில்லை, ஆனால் விடுதலை மற்றும் நீதிக்காக கடவுளிடம் இறைவேண்டல் செய்கிறார். இறுதியில் தவறு செய்தவர்களை வெளிப்படுத்தி கடவுள் அவர்களைத் தண்டிப்பார் என்று அவர்  உறுதியாக நம்புகிறார். தாவீது கடவுளுடைய நீதியில் நம்பிக்கை வைத்து, காலப்போக்கில் கடவுள் காரியங்களைச் சரிசெய்வார் என்பதில் உறுதியாக இருக்கிறார். எதிரிகளின் சொந்த திட்டங்களை கடவுள் அவர்களுக்கு எதிராக திருப்பி, நீதியை நிலைநாட்டுவார் என்பதை அறியும் அவர், கடவுளிடம் தனது பாதுகாப்பிற்காக இறைவேண்டல் செய்கிறார். ஆக, கடவுள் நீதியுள்ளவர், அவரை நம்பியவர்களை அவர் காப்பார் என்பதுதான் இத்திருப்பாடலின் அடிப்படை செய்தியாக அமைகிறது. ஒட்டுமொத்த இந்தத் திருப்பாடலையும் நாம் இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். முதல் பகுதியில் தனது எதிரிகளின் குணாதிசயங்களைக் குறித்துக்காட்டுகின்றார் தாவீது. இரண்டாவது பகுதியில் தனக்கு எதிராக தீங்கிழைத்த தனது எதிரிகளுக்குத் தக்கதண்டனை கிடைக்கும் என்று உறுதியாக நம்பி கடவுளிடம் சரணடைகின்றார்.    

இந்தப் பின்னணியில் இப்போது இத்திருப்பாடலில் 1 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். அவ்வார்த்தைகளை அமைதி நிறைந்த மனதுடன் வாசிப்போம். “கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்; என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும். பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும். அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்; நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்; மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்; அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்; தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்; ‛நம்மை யார் பார்க்க முடியும்’ என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்; நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்; ‛எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்; மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை” (வச. 1-6).

முதலாவதாக, எதிரியினால் விளையும் அச்சம், பொல்லாரின் சூழ்ச்சி, தீயோரின் திட்டம் இவை மூன்றினின்றும் தன் உயிரைக் காத்திடுமாறு இறைவேண்டல் செய்கின்றார் தாவீது. ஒவ்வொரு சராசரி மனிதரும் இம்மூன்றையும் தனது வாழ்வில் அனுபவித்தே ஆகவேண்டும் என்றபோதிலும், இறைபக்தி கொண்டவர்கள், தங்கள் கடமைகளை நேரிய உள்ளமுடன் செய்பவர்கள், மனசாட்சிக்குப் பயந்து வாழ்பவர்கள், மற்றவர்களுக்குத் தீங்கு நினையாதவர்கள், பிறருக்கு நற்காரியங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனைவரும் இம்மூன்றையும் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டும் என்பது உறுதி. ‘எதிரியா அப்படியெல்லாம் எனக்கு யாரும் கிடையாது’ என்று நாம் பலவேளைகளில் நினைக்கக்கூடத் தோன்றும். சிலவேளைகளில், நமக்கு சில மன வலிகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள், பின்னடைவுகள், தோல்விகள் ஏற்படும்போது நிச்சயம் நம் கண்களுக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ எதிரிகள்  நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்றுதான் பொருள். ஓவ்வொரு மனிதரும் தனது வாழ்வில் எப்போதும் பெற விரும்புவது நிம்மதியும் அமைதியும் மட்டுமே. நமது எதிரி எப்போது எதை செய்வானோ என்று எந்நேரமும் அச்சப்பட்டுக்கொண்டே இருந்தால், வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் அவனை எதிர்த்துப் போராடி வீழ்த்திவிடலாம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். முகத்திற்கு முன்னால் நின்று சண்டை போடுபவனை விட, பின்னால் நின்று முதுகில் குத்துபவனுக்குத் தான் பலம் அதிகமாக இருக்கும். இதையெல்லாம் அதிகம் அனுபவித்தவர் நம் தாவீது அரசர். அதனால்தான், “கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்; என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும். பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும்” என்று இறைவேண்டல் செய்கிறார். அப்படியென்றால், எதிரிகளை வெல்வதற்கான சிறந்ததொரு ஆயுதம் கடவுளின் உடனிருப்பும் அவரிடம் நாம் எழுப்பும் இறைவேண்டல் மட்டுமே.

அடுத்து, “தனது எதிரிகள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்; நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்; மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்; அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்; தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்” என்றெல்லாம் தனது எதிரிகளின் கொடுஞ்செயல்கள் பற்றி உரைக்கின்றார் தாவீது. பலவேளைகளில் நாம் வெளிப்படுத்தும் சொற்கள் கூரிய வாளைப்போன்று பேராபத்து நிறைந்தவைகளாக இருக்கின்றன. நம் நாவிலிருந்து ஏவப்படும் அம்புபோன்ற சொற்கள் பலரின் இதயங்களைக் குத்திக் கிழித்துக் காயப்படுத்திவிடுகின்றன. இதைச் செய்துவிட்டு ஒரு திமிர்கொண்ட மனதுடன், "அவனைக் கேட்டேனே ஒரு கேள்வி... அப்படியே நொந்து நூலாயிட்டான். அப்படியே விழுந்தவன்தான்... அப்புறம் எந்திரிக்கவே இல்ல...." என்று நாம் உதிர்க்கும் நஞ்சு நிறைந்த சொற்கள் இன்னும் அதிமாக வலிகளை ஏற்படுத்தக் கூடியவை. மறுபுறம் இந்த வார்த்தைகளால் காயம்பட்டவர்கள், “அவன் இப்படி என்னைய அவமானமா  பேசினத்துக்குப் பதிலாக நாலு அடி அடிச்சுருக்காலாம்" என்று கூறும்வேளை, அவர்கள் அனுபவிக்கும் வலிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இப்படி நாம் வெளிப்படுத்தும் வார்த்தைகள் ஆயுதத் தாக்குதல்களைவிட ஆபத்தானவை! அதனால்தான், ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’ (குறள் - 129) என்ற குறளில் 'நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைவித்த துன்பம் ஆறவே ஆறாது' என்று உரைக்கின்றார் வள்ளுவர் பெருந்தகை.

நமது திருத்தூதர் யாக்கோபும் கூட நா குறித்த சிறந்த படிப்பினையொன்றை நமக்கு வழங்குகின்றார். "பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது. காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர். ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது" (காண்க யாக் 3:5-8) என்று அவர் கூறும் வார்த்தைகளில் நமது நா எந்தளவுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை அவர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

மேலும் தனது எதிரிகள் ‛நம்மை யார் பார்க்க முடியும்’ என்ற மமதையில் தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள் என்பதை எடுத்துக்காட்டும் தாவீது, அவர்கள் மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள் என்றும், நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள் என்றும் எடுத்துக்காட்டுகின்றார். பொதுவாக, மறைவாகக் கண்ணிவைத்து மனிதர்களைச் சாய்ப்பதில் அலகை எப்போதும் கைதேர்ந்ததாகவே இருக்கும். எதைக் கொடுத்தால் மனிதர் ஏமாறுவர், எதைக் காட்டினால் அவர்கள் மதிமயங்கிப்போவர் என்பதையெல்லாம் அது நன்கு அறிந்திருக்கும். இதனை இயேசு மேற்கொண்ட பாலைவன சோதனையில் பார்க்கின்றோம். இங்கே தாவீது தனது எதிரிகள் அலகையின் வஞ்சக எண்ணத்தைக் கொண்டவர்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வோம். அதுமட்டுமன்றி, அலகை எப்படி தான் தோற்றுப்போனாலும் தனது வஞ்சகம் மற்றும் சூது நிறைந்த எண்ணங்களை மாற்றிக்கொள்ளாதோ அவ்வாறுதான் தீயவர்களும் இருப்பார்கள் என்பதையும் நமது மனங்களில் நிறுத்துவோம். "ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும் காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல் போத்தறார் புல்லறிவி னார்" (நாலடியார் 351) என்று நாலடியாரில் ஓர் அருமையான பாடல் வருகின்றது. நிறைந்த அறிவினை உடையவர் வயதில் இளையவராக இருந்தாலும் தன்னை நன்னெறியில் காத்துக்கொண்டு அடக்கத்துடன் நடந்துகொள்வர். ஆனால் புல்லிய அறிவினை உடையவர் வயதில் மூத்தவராக இருப்பினும் தீய தொழிலையே விரும்பிச் செய்துகொண்டு கழுகு உயிரினங்களைக் கொன்று தின்னத் திரிவது போலத் திரிவதிலிருந்து நீங்கமாட்டார் என்பது இப்பாடலுக்கான பொருளாக அமைகிறது. பலவேளைகளில் நமது எதிரிகளும் இப்படித்தான் நடந்துகொள்வர். ஆகவே, தாவீதைப் போன்று, நமது எதிரிகளைக் கண்டு மனம்  தளராது இறைவனிடம் முழுதுமாகச் சரணடைந்து அவர்தரும் ஆன்மிக வலிமையால் அவர்களை வெல்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2025, 12:19