காசாவில் துயரம் காசாவில் துயரம்   (ANSA)

காசாவில் நல வசதிகளைப் பாதுகாக்க அழைப்பு!

காசாவில் உள்ள நல வசதிகள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களைப் பாதுகாக்க அனைத்துலகச் சமூகத்தின் தலையீட்டின் அவசரத் தேவையை CMEP வலியுறுத்துகிறது :

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மத்திய கிழக்கின் அமைதிக்கான திருஅவைகள் (CMEP),  காசாவின் நல அமைப்பு மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எருசலேமின் தலத்திருஅவையுடன் இணைந்துள்ளதாகக் கூறியுள்ளது ICN செய்தி நிறுவனம்.

அண்மையில் இஸ்ரேலிய இராணுவம் நிகழ்த்திய தாக்குதல்கள், காசா நகரில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை உட்பட, மருத்துவ வசதிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள வேளை, இத்தகையதொரு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.

எருசலேமின் மறைமாவட்டப் பணியின்கீழ் வரும் அல் அஹ்லி மருத்துவமனை, கடந்த ஆண்டு டிசம்பர் 29, ஞாயிறன்று, இஸ்ரேலிய ஏவுகணையால் தாக்கப்பட்டது அதன் குறைந்த வசதிகள் மற்றும் பணியாளர்களுடன் செயல்பட்டு வந்த அதன் மோசமான நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது என்று அத்திருஅவைகள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது அச்செய்திக் குறிப்பு.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள CMEP திருஅவைகள் அமைப்பின் மூத்த இயக்குனர் Kyle Cristofalo அவர்கள், காசாவில் உள்ள நல வசதிகள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களைப் பாதுகாக்க அனைத்துலகச் சமூகத்தின் தலையீட்டின் அவசரத் தேவையை வலியுறுத்தியுள்ளதாகவும் அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.

மேலும் வடக்கு காசாவில் இறுதியாக செயல்படும் மருத்துவமனைகளில் ஒன்றான அல் அஹ்லி மற்றும் கமால் அத்வான் போன்றவற்றின் நலப்பணிகளுக்கு எதிராக நடந்து வரும் இந்தத் தாக்குதல்களை எருசலேம் தலத்திருஅவை,  மனித உரிமை குழுக்கள், உலக நல அமைப்பு ஆகியவை கண்டித்துள்ளன என்றும் அச்செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 January 2025, 15:16