Jean Vanier என்ற சாட்சியை உலகிற்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
Jean Vanier அவர்கள், தன் வாழ்வின் வழியே வழங்கிய சாட்சியத்திற்கு நான் நன்றி கூறுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் மாலை, உரோம் நகருக்குத் திரும்பி வந்த விமானப் பயணத்தில் கூறினார்.
கிறிஸ்தவ மெய்யியலாளராக, எழுத்தாளராக, அனைத்திற்கும் மேலாக, மனித நேயப் பணியாளராக வாழ்ந்த Jean Vanier அவர்கள், மே 7, இச்செவ்வாயன்று தன் 90வது வயதில் இறையடி சேர்ந்ததை அறிந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது வாழ்வு பலருக்கு ஒரு வழிகாட்டுதலை அளித்துள்ளது என்று கூறினார்.
உரோம் நகருக்குத் திரும்பும் விமானப் பயணத்தில், செய்தியாளர்களுடன் தன் கலந்துரையாடலைத் துவக்குவதற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Jean Vanier அவர்களைக் குறித்துப் பேசினார்.
Jean Vanier அவர்களை, தான், ஒருவாரத்திற்கு முன், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டதையும், அவ்வேளையில், தான் கூறிய அனைத்தையும் கேட்க முடிந்ததே தவிர, அவரால் அதிகம் பேச இயலவில்லை என்பதையும், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
Jean Vanier அவர்கள், சமுதாயத்தில் மிகவும் ஒதுக்கப்பட்டோருக்காக பணிகள் ஆற்றிய அதே வேளையில், கருக்கலைப்பு வழியே, பிறப்பதற்கு முன்னரே மரணத்திற்கு உள்ளாக்கப்படும் குழந்தைகளுக்காகவும் போராடிவந்தார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, சமுதாயத்தால் மறக்கப்பட்டவர்களுக்காக, தன் பணிகள் வழியாகவும், எழுத்து வடிவிலும், பணிகள் ஆற்றிய Jean Vanier என்ற சிறந்த சாட்சியை இவ்வுலகிற்கு வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று திருத்தந்தை செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்