மூவேளை செப உரை - 060122 மூவேளை செப உரை - 060122 

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு திருத்தந்தை வாழ்த்து

கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் விசுவாசிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்   

ஜனவரி 6, இவ்வியாழனன்று விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய பின்பு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி 7, ஜூலியன் நாள்காட்டிபடி இவ்வெள்ளியன்று கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் கிழக்கு கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளைச் சேர்ந்த விசுவாசிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்தார்.

அமைதி, மற்றும் நன்மைதனம் நிறைந்த எனது அன்பான வாழ்த்துக்களை அனுப்புகிறேன் என்று தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “கன்னி மரியாவிடமிருந்து பிறந்த கிறிஸ்து, உங்கள் குடும்பங்கள் மற்றும் குழுமங்களில் ஒளிரட்டும்! சகோதரர் சகோதரிகளே, வாழ்த்துக்கள்!” என்றும் கூறியுள்ளார்.

இளம் கிறிஸ்தவ குழந்தைகள் கூட திருமுழுக்கின் வழியாக மறைபரப்பாளர்கள்தான் என்பதை நினைவுபடுத்துவதற்காக, ஜனவரி 6ம் தேதி மறைபரப்பு குழந்தைகள் தினமாக நினைவுகூரப்படுகிறது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

நற்செய்தியை அறியாதவர்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படட்டும் என்ற நோக்குடன் இறைவேண்டல், மற்றும் தங்களின் சிறு சேமிப்புகளை வழங்குவதற்காக உலகத்தின் பல பகுதிகளிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறிய திருத்தந்தை, அக்குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், தினசரி வாழ்க்கையில் மறைபரப்புப் பணி என்பது, நமது கிறிஸ்தவ சாட்சியங்களிலிருந்துதான் தொடங்குகிறது என்பதை விசுவாசிகள் நினைவு கூரவும் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2022, 16:23