உக்ரைனின் அமைதிக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு உக்ரைனின் அமைதிக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு  

உக்ரைனின் அமைதிக்காக உண்ணாநோன்பிருந்து செபிக்க திருத்தந்தை அழைப்பு

மார்ச் மாதம் 2ம் தேதி, திருநீற்றுப் புதனன்று அனைவரும் உண்ணாநோன்பிருந்து அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 23, இப்புதனன்று, தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு உரை வழங்கிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டின் அமைதிக்காக இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் மார்ச் மாதம் 2ம் தேதி, அதாவது, திருநீற்றுப் புதனன்று, தங்களைத் தீவிரமாக அர்ப்பணித்து உண்ணாநோன்பிருந்து அமைதிக்காக இறைவேண்டல் செய்வதற்கு அனைவரையும் ஊக்குவிப்பதாகக்  கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் அரசியாகத் திகழும் அன்னை மரியா, அறிவீனத்தால் நிகழ்ந்துவரும் போரிலிருந்து உலகத்தைக் காப்பாற்றட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை காரணமாகத் தன் இதயத்தில் மிகுந்த வருத்தம் ஏற்பட்டுள்ளது என்றும், தன்னைப் போலவே, உலகெங்கிலும் உள்ள பலர் வேதனையையும் கவலையையும் உணர்கிறார்கள் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் போர்களாலும் பாகுபாடான செயல்முறைகளாலும் அமைதிக்கான அனைவரின் வாழ்வும் அச்சுறுத்தப்படுகிறது என்றும், தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அதனால், அரசியல் பொறுப்புணர்வு கொண்டுள்ள அனைவரும் கடவுளுக்கு முன்பாகத் தங்களின்  மனசாட்சியைத் தீவிரமாகப் பரிசோதிக்க வேண்டும் என்று தான் வேண்டுகோள் விடுக்க விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நம் கடவுள் போரின் கடவுள் அல்ல, மாறாக அமைதியின் கடவுள் என்றும், நாம் எதிரிகளாக இல்லாமல், சகோதரர் சகோதரிகளாக இருக்க வேண்டும் என்று விரும்பும் சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தந்தையாக இருக்கிறார் என்றும் எடுத்துரைத்தார். 

மக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தி நாடுகளுக்கிடையே அமைதி வாழ்வை சீர்குலைக்கும் மற்றும், அனைத்துலகச் சட்டத்தை இழிவுபடுத்தும் எந்தவொரு செயலையும் தவிர்க்குமாறு, சம்பந்தப்பட்ட அனைத்துத்  தரப்பினரையும் தான் கேட்டுக்கொள்வதாகவும், அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2022, 14:03