பிரேசில்: நிலச்சரிவால் உயிரிழந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
பிரேசில் நாட்டில், பெருவெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால் பலர் உயிரிழந்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் ஆன்மா நிறையமைதி அடையத் தான் இறைவேண்டல் செய்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பிரேசிலின் Petrópolis ஆயர் Gregório Paixão Neto அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இவ்வியற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு திருத்தந்தையின் இறைவேண்டல்களும், ஒருமைப்பாட்டுணர்வும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா நிறையமைதி அடைவதற்கு, கடவுளின் இரக்கத்தை மன்றாடுவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்குத் தனது அருகாமையைத் தெரிவிப்பதாகவும் திருத்தந்தை கூறியதாக, அத்தந்திச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15, இச்செவ்வாயன்று Petrópolis நகரத்தில் வீசிய கடும் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும், வெள்ளத்தால் 117 பேர் இறந்துள்ளனர், 116 பேருக்கு மேல் காணாமல்போயுள்ளனர், மற்றும், வீடுகளும், வாகனங்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இன்னும், மனித உடல்கள் நீரோடு அடித்துச் செல்லப்பட்டதை நேரில் காண முடிந்தது என்று அதிகாரப்பூர்வ செய்திகள் கூறுகின்றன.
மலைப்பாங்கான Petrópolis நகரத்திற்கு, கோடை காலத்தில் மக்கள் அதிகம் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும், ரியோ தெ ஜெனிரோ உயர்மறைமாவட்டமும், காரித்தாஸ் அமைப்பின் வழியாக நிவாரண உதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்