கடவுள் மட்டுமே கொடுக்கக்கூடிய அமைதியை நாம் இறைஞ்சுவோம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மார்ச் 1, இப்புதனன்று திருத்தந்தைக்குப் பதிலாக கர்தினால் பியோத்ரோ பரோலின் அவர்கள் உரோமையிலுள்ள சாந்தா சபீனா பெருங்கோவிலில் நிறைவேற்றிய சாம்பல் புதன் திருப்பலியில் கடவுள் மட்டுமே கொடுக்கக்கூடிய அமைதியை நாம் இறைஞ்சுகிறோம் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கால் வலி காரணமாக சாம்பல் புதன் திருப்பலியை நிறைவேற்ற முடியாத நிலையில், அவரின் மறையுரையை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாசித்தார்.
இறைவேண்டல், தவம் மற்றும் தொண்டு ஆகியவை நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் மருந்துகள் என்றும், அவை வரலாற்றை மாற்றும் என்றும், கடவுள் நம் வாழ்விலும் உலகிலும் தலையிடுவதற்கான முக்கிய வழிகளாக அவைகள் அமைந்துள்ளன என்றும், தனது மறையுரையில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைனுக்கான இறைவேண்டல் மற்றும் உண்ணா நோன்பினைக் கடைப்பிடிக்கும் இந்நாளில், ஆண்களும் பெண்களும் தாங்களாகவே கட்டமைக்க முடியாத அமைதியைக் கடவுளிடம் வேண்டுவோம் என்றும், கடவுள் நம் வேண்டுதல்களைக் கேட்டு, வன்முறையிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கும் துன்புறும் மக்களுக்கு உண்மையான அமைதியைக் கொடுக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
இன்றைய நற்செய்தியில் நாம் கேட்டதுபோல, மற்றவர்கள் பார்த்து நம்மைப் பாராட்டவேண்டும் என்பதற்காக, நமது ஆன்மிக மற்றும் அறச்செயல்களை செய்யக்கூடாது என்று தனது மறையுரையின் தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு விதமான வெகுமதிகளைக் எடுத்துக்காட்டிப் பேசியுள்ளார்.
முதலாவதாக, மனிதரிடமிருந்து நாம் பெரும் வெகுமதிகள் எவ்விதத்திலும் நிறைவினைத் தராது என்றும், இரண்டாவதாக, இறைத்தந்தையிடமிருந்து நாம் பெறவிருக்கும் வெகுமதிகளே நிலையானதும் நிறைவினைத் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளதால், இதனை அடைவதே நமது வாழ்வின் உண்மையான நோக்கமாக இருக்கவேண்டும் என்றும், திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று நமது நெற்றியில் பூசப்படும் சாம்பலானது, இறைத் தந்தையிடமிருந்து நாம் பெறும் வெகுமதியைவிட மற்றவர்களிடமிருந்து பெறப்பட்ட வெகுமதியை முன்னிலைப்படுத்தும் பிழையிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்றும், கடவுளின் உதவியைப் பெறும் அடையாளமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தவக்காலம் என்பது, நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்வதற்கும், உள்நோக்கிய நமது தேடலைத் தொடங்குவதற்கும், இயேசுவின் உயிர்ப்பை நோக்கிய பயணத்தில் இறைத்தந்தையின் வெகுமதியைப் பெறுவதற்குமான சிறந்ததொரு வழியாக அமைகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்