போர்ச்சுக்கலின் பாத்திமாவில் திருத்தந்தை பிரான்சிஸ் போர்ச்சுக்கலின் பாத்திமாவில் திருத்தந்தை பிரான்சிஸ்  

அமல அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணம்

மார்ச் 25ல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அமல அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கிறார்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அமல அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வொன்றை நடத்தவிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 25, இம்மாதம் வெள்ளிக்கிழமையன்று, மாலை 5 மணியளவில் புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறவிருக்கும் பாவ மன்னிப்பு வழிபாட்டில், உக்ரைன்  மற்றும் இரஷ்யாவை, அமல அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்தவிருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது. 

மேலும், திருத்தந்தையின் சிறப்புத் தூதராக அனுப்பப்படும் கர்தினால் Konrad Krajewski அவர்கள் இந்நிகழ்வை அதேநேரத்தில், போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் நிகழ்த்துவார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் Matteo Bruni அவர்கள் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்  மற்றும் இரஷ்யாவை, அமல அன்னையின் இதயத்திற்கு அர்ப்பணிக்கும் இந்நிகழ்வானது மார்ச் 25, வெள்ளிக்கிழமையன்று ஆண்டவருடைய பிறப்பு அறிவிப்புப் பெருவிழாவன்று நடைபெறுவது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவிக்கிறது.

1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் உலகம் முழுவதையும், 1952ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி இரஷ்ய மக்கள் அனைவரையும் புனித அமல அன்னையின் மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணித்தார்.

1964ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத் தந்தையர் முன்னிலையில், திருத்தந்தை புனித ஆறாம் பால் அவர்கள், அமல அன்னையின் மாசற்ற இதயத்திற்கு இரஷ்ய மக்கள் அர்ப்பணிக்கப்பட்டதை மீண்டும் புதுப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2022, 13:50