திருத்தந்தை இளையோரிடம்: துணிவோடு முன்னோக்கிச் செல்லுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
2023ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 36வது உலக இளையோர் நாளுக்குத் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டுவரும் தன்னார்வலர் இளையோரை ஊக்கப்படுத்தி, மார்ச் 07, இத்திங்கள் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒன்று முதல் ஆறாம் தேதி வரை, போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இளையோர், தங்களின் படைப்பாற்றல் அனைத்தையும் பயன்படுத்தி, கிறிஸ்தவ நம்பிக்கை உயிர்த்துடிப்புடன் இருப்பதை உறுதிசெய்யுமாறு அக்காணொளிச் செய்தியில் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
லிஸ்பன் நகரில் உலகளாவிய இளையோரைச் சந்திப்பதற்கு ஆவலாக உள்ளேன் என்றுரைத்துள்ள திருத்தந்தை, உலக அளவில் கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியிலிருந்து வெளிவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இக்காலக்கட்டத்தில், போர் ஒன்ற புதியதொரு பிரச்சனையையும் நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
நம்பிக்கை, படைப்பாற்றல்
தற்போது உலகில் நிலவும் மிகப்பெரும் சவால்களுக்கு மத்தியில், 2023ம் ஆண்டு உலக இளையோர் நாள் நிகழ்வுகள் அனைவருக்கும், கடவுள் வழங்கும் மகிழ்ச்சி, உயிர்த்துடிப்பு மற்றும் பசுமையான நினைவுகளை ஆழப்பதிப்பதாக அமையுமாறு, இந்த தன்னார்வல இளையோர் தங்களின் படைப்பாற்றல்களைப் பயன்படுத்தி தயாரிப்புப்பணிகளை ஆற்றுமாறு திருத்தந்தை கூறியுள்ளார்.
புதிய அனுபவங்களைக் கனவுகாண்கின்ற கவிஞர்கள் போன்று, இந்த தன்னார்வல இளையோர் படைப்பாற்றல்மிக்கவர்களாய் விளங்குமாறும், அதன் வழியாக, 2023ம் ஆண்டு நிகழ்வுகளை, இதற்கு முந்தைய உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களினின்று மாறுபட்டதாய் அமைக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒன்றிணைந்தால் பிரச்சனைகளை அகற்றலாம்
நம்பிக்கையிலிருந்து பிறக்கும் எதிர்நோக்கிற்குச் சான்றுகளாய்த் திகழ்வதன் வழியாக, இளையோர், தற்போது உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் களையவும், அவற்றினின்று வெளிவரவும் இயலும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்தால் தற்போதைய பிரச்சனைகளை அகற்றலாம் என்று கூறியுள்ளார்.
உலக இளையோர் நாள்
கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளின் காரணமாக, 2022ம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், தற்போது, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 6ம் தேதி முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1985ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக இளையோர் நாள் கொண்டாட்டங்கள், முதல் முறையாக 1986ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்