2022ம் ஆண்டின் Zayed விருது 2022ம் ஆண்டின் Zayed விருது  

Zayed விருது, உடன்பிறந்தநிலைப் பயணத்தை தொடர்ந்து நடத்த..

ஜோர்டன் அரசர் 2ம் அப்துல்லா அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும் பல்சமய உரையாடலை ஊக்குவிக்கவும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கவும் சிறப்பான பணிகளை ஆற்றிவருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இவ்வுலகில் மனித உடன்பிறந்தநிலையை வளர்க்கும் பாதையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு, உலகினர் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜோர்டன் நாட்டு அரசர் Abdullah II ibn Al Hussein, அந்நாட்டு அரசி Rania Al Abdullah, FOKAL எனப்படும் ஹெய்ட்டி நாட்டு மனிதாபிமான அமைப்பு ஆகிய மூவருக்கும், பிப்ரவரி 28, இத்திங்கள் மாலையில் அபு தாபியில், 2022ம் ஆண்டின் Zayed விருது வழங்கப்பட்ட மெய்நிகர் நிகழ்வுக்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உடன்பிறந்தநிலையைக் கொண்டாடுதல்

Zayed விருது வழங்கப்படும் நிகழ்வுகள், உடன்பிறந்த உணர்வு நோக்கிய பொதுவான பயணத்தில், மேலும் ஓர் அடி எடுத்துவைப்பதாக உள்ளன என்று கூறியுள்ள திருத்தந்தை, மனித உடன்பிறந்தநிலையின் உயர்மட்ட குழுவால் வழங்கப்படும் இவ்விருது, மனித சமுதாயத்தை முன்னோக்கி நடத்திச்செல்லவும், அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்குவிக்கவும் தங்களை அர்ப்பணித்துவரும் தனியாள்கள் மற்றும், நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகப்பெரும் இன்னல்களுக்கு மத்தியில், அமைதி, தன்னடக்கம், மற்றும், வன்முறைப் புறக்கணிப்பு ஆகிய பாதையில், விடாமனஉறுதி மற்றும், துணிச்சலுடன், ஜோர்டன் மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதாக இவ்விருது உள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

ஹெய்ட்டி நாட்டில், பொதுநலன் மற்றும், உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு FOKAL அமைப்பு ஆற்றிவரும் நற்பணிகளைக் குறிப்பிட்டு, அந்த அமைப்பை உருவாக்கிய Michèle Pierre-Louis அவர்களுக்கு, தன் நன்றியையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதி, மனித உடன்பிறந்தநிலையின் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. 2019ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, அபு தாபியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், எகிப்தின் முஸ்லிம் உயர்குரு இமாம் அல்-அசார் அவர்களும், மனித உடன்பிறந்தநிலைபற்றிய ஏட்டில் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2022, 15:38