தூய பவுல் அடிநிலக் கெபியில் திருத்தந்தை தூய பவுல் அடிநிலக் கெபியில் திருத்தந்தை 

தூய பவுல் அடிநிலக் கெபியில் திருத்தந்தையின் இறைவேண்டல்

வாதிடவோ, தீர்ப்பிடவோ, ஆராயவோ, கணிக்கவோ வேண்டிய நேரமில்லை அது, மாறாக, உதவிக்கரத்தை நீட்ட வேண்டிய நேரம், அதைத்தான் மால்ட்டா மக்கள் செய்தார்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரக்கத்தின் இறைவா, உம்மைப்பற்றி அறிந்திராத மால்ட்டா மக்களுக்கு நற்செய்தியை, உமது வியத்தகு வழிகாட்டுதலில், தூய பவுல் அறிவிக்க வேண்டும் என நீவிர் ஆவல் கொண்டீர். உம் வார்த்தைகளை அவருக்கு அறிவித்த தூய பவுல், அம்மக்களின் குறைகளைக் குணப்படுத்தினார்.

விபத்துக்குள்ளாகிய கப்பலிலிருந்து பாதுகாக்கப்பட்ட தூய பவுலும் அவரின் உடன் பயணிகளும், உண்மைக் கடவுளை அறியாதிருந்த, அம்மக்களால் மிகுந்த மனித நேயத்துடன் நடத்தப்பட்டனர். கப்பலிலிருந்து கரைக்கு வந்த அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களை நடத்தினர் மால்ட்டா மக்கள். அவர்களின் பெயர்களோ, தகுதியோ, சமூகத்தில் அவர்கள் கொண்டிருந்த இடமோ, அம்மக்களுக்கு தேவையற்றதாக இருந்தது. இவர்கள் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளார்கள் என்பதே அம்மக்களுக்கு முக்கியமானதாக இருந்தது.

அங்கு வாதிடவோ, தீர்ப்பிடவோ, ஆராயவோ, கணிக்கவோ நேரமில்லை. அது உதவிக்கரத்தை நீட்ட வேண்டிய நேரம், அதைத்தான் மால்ட்டா மக்கள் செய்தார்கள்.

அவர்கள் தீ மூட்டி, அனைவரையும் அருகே வரவழைத்து குளிரிலிருந்து காப்பாற்றினார்கள். திறந்த மனதுடன் அவர்களை வரவேற்றார்கள்.

அத்தீவின் தலைவர் புப்பிலியுவுடன் இணைந்து, முதலில் சமூகத்திலும், இரக்கத்திலும் அவர்களுக்கு புகலிடம் வழங்கினார்கள்.

நல்தந்தையே, இரக்கமுடைய இதயம் எனும் அருளை எமக்கு வழங்கியருளும். அவ்விதயம் எம் சகோதரர் சகோதரிகளுக்குரிய அன்பால் துடிக்கட்டும். கடலின் அலைகள் நடுவேயும், தங்களுக்குத் தெரியாத கரைகளைத் தேடியும் போராடும் மக்களின் தேவைகளை தொலைவிலிருந்தே கண்டுகொள்ள எமக்கு உதவும்.

எம் இரக்கம் என்பது, வெறும் வார்த்தைகளையும் தாண்டி வரவேற்பு தீபத்தை ஏற்றுவதாகவும், புயலின் நினைவுகளை அகற்றுவதாகவும், இதயங்களை வெதுவெதுப்பாக்கி அனைவரையும் ஒன்றுசேர்த்துக் கொணர உதவும், பாறையின் மீது கட்டப்பட்ட வீட்டின் குளிர்காயும் நெருப்பிடமாகவும் செயல்படுவதாக.

நீர் அனைத்து மக்களையும் பாகுபாடின்றி அன்புகூர்கின்றீர். அதுமட்டுமல்ல, நீர் விரும்பியதுபோல் அவர்கள் அனைவரும் உம் மகனாம் இயேசு கிறிஸ்துவில் ஒன்றாய் இருப்பார்களாக. வானுலகிலிருந்து உம்மால் அனுப்பப்பட்ட தூய ஆவியார் எனும் நெருப்பின் வல்லமை அனைத்துப் பகைமையையும் எரித்தொழிக்கட்டும். அன்பு மற்றும் அமைதியின் உம் இறையரசை நோக்கிய பாதையை ஒளிர்விக்கட்டும்.

இறைவா, முடிவற்றது உமது இரக்கம்.

உமது நன்மைத்தனத்தின் செல்வங்கள் எல்லையற்றவை.

உமக்கு அர்ப்பணிக்கப்பட்ட மக்களின் விசுவாசத்தை அருள்கூர்ந்து அதிகரித்தருளும்.

அதன் வழியாக அவர்கள், தங்களைப் படைத்த அன்பையும், தங்களை மீட்ட இரத்தத்தினையும், தங்களுக்கு மறுபிறப்பளித்த தூய ஆவியாரையும் நமதாண்டவராம் கிறிஸ்து வழியாக உணர்ந்து புரிந்துகொள்வார்களாக. ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2022, 15:34