கிரனாய் வளாகத்தில் திருத்தந்தையின் திருப்பலி மறையுரை

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு வந்தவர்கள், கடவுளின் பாதுகாவலர்கள் என தங்களைக் காட்டிக்கொண்டு, தங்கள் சகோதரர் சகோதரிகளை ஏறி மிதிக்கிறார்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மால்ட்டா நாட்டு ஃபிளோரியானாவின் கிரனாய் வளாகத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் அவர் ஆற்றிய மறையுரையின் சுருக்கம்...

பொழுது விடிந்ததும் இயேசு கோவிலுக்கு வருகிறார், மக்களும் அவரை நாடி வருகின்றனர் (யோவா.8:2). விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் பற்றிய நிகழ்வுக்கு முன் இந்த வார்த்தைகள் ஒரு முன்னுரைபோல் வருகின்றன. ஒரு புனித வளாகத்தில் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்க மக்கள் குழுமியிருக்க, விபசாரத்தில் பிடிபட்ட பெண் கொண்டுவரப்படுகிறார். இங்கு காலியான இருக்கைகளும் இருந்தன. பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவின் போதனை தங்களுக்குத் தேவையில்லை, ஏனெனில், அவர்கள் அதைவிட அதிகமாக அறிந்து வைத்துள்ளனர் என எண்ணியதால், அங்கு அவர்களின் இடம் காலியாக இருந்தது. இவ்வாறு, பல்வேறு தரப்பினரும் ஒவ்வொரு காரணத்தைக் காட்டி இயேசுவின் போதனைகளைப் புறக்கணிக்கவும் செய்தனர்.

திறந்த மனதுடன் அல்லாமல், இயேசுவை சிக்க வைக்கும் நோக்கத்துடன் அங்கு வரும்  மறைநூல் அறிஞரும் பரிசேயரும், வெளிப்பார்வைக்கு கடவுளின் கட்டளைகளை நுண்ணியமாய்க் கடைப்பிடிப்பவர்களாகத் தெரிந்தாலும்,  அவர்களின் உள்ளத்தில் இயேசுவை ஒழிக்கவேண்டும் என்ற வஞ்சக எண்ணம் குடிகொண்டிருந்தது. பிடித்து வந்தவர்களோ, அப்பெண்ணை நோக்கி கல்லை வீச வேண்டும் என கேட்க, இயேசுவோ கருணைப் பார்வையை வீசுகிறார். பலவேளைகளில் நம் சமயப் பற்றுறுதிகள், நம் வெளிவேடத்தை மறைக்கவும், மற்றவர்களை நோக்கி சுட்டுவிரல் நீட்டவும் பயன்படுகின்றன. இது, நாம் இயேசுவை சரியாகப் புரிந்துகொள்ளாமையால் நிகழ்கிறது. நம் உதடு அவர் பெயரை உச்சரிக்கும்போது, நம் செயல்களோ அவரை மறுதலிப்பவைகளாக உள்ளன. நமக்கு அடுத்திருப்பவரையும் நம்மையும் நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதைப் பொறுத்ததே நம் கிறிஸ்தவ வாழ்வு. இன்றைய நற்செய்தி வாசகம் காட்டும் நிகழ்வில், விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணுடன் வருபவர்கள், கடவுளின் பாதுகாவலர்கள் என தங்களைக் காட்டிக்கொண்டு, தங்கள் சகோதரர் சகோதரிகளை ஏறி மிதிக்கிறார்கள். விசுவாசத்தை உயர்த்திப்பிடிக்கிறோம் என எண்ணிக்கொண்டு, மற்றவர்களை குற்றம்சாட்ட தங்கள் விரல்களை சுட்டுகிறார்கள். இறைவனின் இதயமாக இருக்கும் இரக்கம் அவர்களிடம் இல்லை. நாம் இயேசுவின் உண்மைச் சீடர்களா என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால், நாம் மற்றவர்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைக் கூட்டிவந்தவர்கள், தாங்கள் இன்னும் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை, தங்களுக்கு எல்லாம் தெரியும் என எண்ணியிருந்தனர். அவர்கள் உள்ளத்தில் எளிமை இல்லை. அவர்களின் இதயம் கடவுளை நோக்கித் திறக்கப்படவில்லை. ஆனால் கடுமையான தண்டனையை நோக்கி காத்திருந்த பெண்ணோ கடவுளால், தான் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டதை உணர்ந்தார். வருங்காலம் குறித்த நம்பிக்கை அவரில் பிறக்கின்றது. பிறரன்பால் தூண்டப்படாத தீர்ப்புகள் நலம் பயப்பதைவிட, கீழ்நிலைக்கே இட்டுச்செல்கின்றன. இறைவனோ மீட்புக்கும் விடுதலைக்கும் உள்ள பாதையை இங்கு காட்டுகிறார். மன்னிப்பு, அப்பெண்ணின் வாழ்வை மாற்றியது. அதிலிருந்து அப்பெண் மற்றவர்களையும், மன்னிக்கும் மனநிலைக்கு வருகிறார். இதைத்தான் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் இயேசு எதிர்பார்க்கிறார். அதாவது, ஒப்புரவின் கருவிகளாக நாம் இருக்கவேண்டும் என்பதை, கருணையின் வழியில் புதிய வாழ்வைத் துவக்குவதற்கு வாய்ப்பை இது வழங்குகிறது.  அவரது மன்னிப்பை அனுபவிக்கும்போது அவரை உண்மையாக நாம் அறிந்துகொள்கிறோம். நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே வந்தேன் என்று கூறிய இயேசு, அப்பெண்ணுக்கு கருணை காட்டுகிறார். அவரைப் போல் நாமும், பாவிகளைத் தீர்ப்பிடாமல், அவர்களை அன்போடு தேடிச்சென்று மீட்பளிப்போம். அவர்களுக்குச் செவிமடுப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2022, 15:46