36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்: மால்ட்டாவில் திருத்தந்தை
மேரி தெரேசா: வத்திக்கான்
ஏப்ரல் 02, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 9.50 மணிக்கு மால்ட்டா நாட்டின் தலைநகர் வல்லேட்டாவின் பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்திலிருந்து, மின்தூக்கி வழியாக தரையிறங்கினார். விமானத்திலிருந்து இவ்வாறு இவர் இறங்கியது இதுவே முதல்முறையாகும். திருத்தந்தைக்கு முழங்காலில் வலி இருப்பதே இதற்கு காரணம். அந்நேரத்தில் காற்றும் பலமாக வீசிக்கொண்டிருந்தது. விமான நிலையத்தில், மால்ட்டா அரசுத்தலைவர் George William Vella, அவரது துணைவியார், திருப்பீடத் தூதர் பேராயர் Alessandro D'Errico, திருப்பீடத்திற்கு மால்ட்டா நாட்டு சிறப்பு அரசுத்தூதர் Frank Zammit ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றனர். இரு சிறார் மரபு ஆடைகளில் திருத்தந்தைக்கு மலர்களைக் கொடுத்து வரவேற்று ஆசிர்பெற்றனர். எல்லா இடங்களிலும் வெண்மை மற்றும் சிவப்பு நிறங்களைக் கொண்ட மால்ட்டா நாட்டுக் கொடிகளும், வெண்மை மற்றும், மஞ்சள் நிறங்களைக்கொண்ட வத்திக்கான் நாட்டுக் கொடிகளும் பறந்துகொண்டிருந்தன. விமான நிலையத்தில் அரசு மரியாதையைப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, முக்கிய பிரமுகர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். பின்னர் அங்குள்ள முக்கிய விருந்தினர் அறையில், மால்ட்டா அரசுத்தலைவர், மற்றும், அவரது துணைவியாருடன் சிறிதுநேரம் உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, வல்லேட்டா நகரின் Grand Master மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்ற கார், நகரத்தின் எல்லையைத் தொட்டவுடன், அவர் அதிலிருந்து இறங்கி குண்டுதுளைக்காத திறந்த காரில் ஏறினார். சாலையின் இரு பக்கங்களிலும் வத்திக்கான் கொடிகளுடன் எண்ணற்ற மக்கள் ஆரவாரத்தோடு நின்றுகொண்டிருந்தனர். மால்ட்டாவின் 4 இலட்சத்து 75 ஆயிரம் மக்களில், ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்பதால், தங்களின் தனிநிகர் தலைவரைப் பார்ப்பதற்கு எவ்வளவு ஆவலோடு அவர்கள் இருந்திருப்பார்கள் என்று சொல்லத்தேவையில்லை. திறந்த காரில் இருந்துகொண்டு அம்மக்களை ஆசிர்வதித்துக்கொண்டே Grand Master அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை. இம்மாளிகை, 1571ம் ஆண்டில் புனித யோவான் வீரப்பெருந்தகையினரின் தலைமையிடாக கட்டப்பட்டது. இம்மாளிகையில் வரவேற்பைப் பெற்ற திருத்தந்தை, அங்கு முக்கிய அறை ஒன்றில், அரசுத்தலைவர் George William Vella, அவரது துணைவியார் ஆகியோருடன் சிறிதுநேரம் உரையாடினார். பின்னர் இத்தம்பதியரின் மூன்று மகன்கள் மற்றும், அவர்களது குடும்பத்தினர், திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர். திருத்தந்தை பிரான்சிஸ். புனித பவுலடியாரின் உருவப்படம் அமைந்த அழகான படம் ஒன்றையும் அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், “சிறந்த மனிதநேயத்தைக் கொண்டிருக்கும்” மத்தியதரைக் கடலின் இதயமான மால்ட்டாவில் திருப்பயணியாக வரவேற்பைப் பெற்றுள்ளேன். இந்நாட்டை ஆள்பவர்களுக்கு ஞானம் மற்றும், இரக்கத்தையும், இம்மக்களுக்கும், உலகம் அனைத்திற்கும் ஒற்றுமை மற்றும் அமைதியையும் கடவுளிடம் இறைஞ்சுகிறேன் என்ற வார்த்தைகளை அம்மாளிகையில் விருந்தினர் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குப்பின்னர், அம்மாளிகையின் மற்றோர் அறையில், மால்ட்டா நாட்டு பிரதமர் Robert Abela, அவரது துணைவியார், மகள் ஆகியோருடனும் உரையாடினார் திருத்தந்தை. இச்சந்திப்புக்களுக்குப் பின்னர், அம்மாளிகையின் “Grand Council Chamber” என்ற அறையில், மால்ட்டா நாட்டு அரசு, மற்றும், பன்னாட்டு தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் முதலில் அரசுத்தலைவர் George William Vella அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். இவ்வுரைக்குப் பின்னர் திருத்தந்தையும் மால்ட்டா நாட்டுக்குத் தன் முதல் உரையை ஆற்றினார். போரின் காற்றுகளுக்கு மத்தியில், வருங்கால அமைதியை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பிற்குப் பின்னர், Grand Master மாளிகையிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்ட்டா திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிரிதுநேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சனிக்கிழமை மாலை நான்கு மணியளவில், மகிழ்ச்சி எனப் பொருள்படும் Gozo தீவுக்குச் சென்றார் திருத்தந்தை. மால்ட்டாவின் “சகோதரித் தீவாகிய” கோசோவில், அந்நாட்டின் முக்கிய Ta' Pinu அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் திருவழிபாடு ஒன்றில் கலந்துகொண்டு மறையுரையாற்றுவது, இச்சனிக்கிழமை மாலையில் நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். இத்துடன் திருத்தந்தையின் மால்ட்டா நாட்டு முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெறும். ஏப்ரல் 3, இஞ்ஞாயிறன்று அந்நாட்டில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, இரவு 7.40 மணிக்கு உரோம் நகருக்கு வந்துசேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "அவர்கள் எங்களிடம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்து கொண்டனர்" (தி.ப.28:2) என்ற மையக்கருத்துடன் நடைபெறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணமும் இத்துடன் நிறைவுக்கு வரும். மேலும், ஏப்ரல் 02, இச்சனிக்கிழமையன்று ஆட்டிசம் விழிப்புணர்வு உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதையும், தன் டுவிட்டர் செய்தி வழியாக நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டுவிட்டர் செய்தி
“இன்று ஆட்டிசம் விழிப்புணர்வு உலக நாள். ஆட்டிசம் என்ற குறையோடு வாழ்பவர்களுக்காக மட்டுமல்ல, அவர்களோடும் இருப்போம்!” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அம்மக்களோடு தனக்குள்ள தோழமையுணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்