திருத்தந்தை: கனிவான வரவேற்பு, உலகைக் காப்பாற்ற உதவும்

கி.பி.60ம் ஆண்டில் திருத்தூதர் பவுலடியாரும், அவரோடு பயணம் மேற்கொண்டவர்களும், கப்பல் விபத்தை எதிர்கொண்டபோது, சிறந்த மனிதநேயத்தோடு அவர்களை வரவேற்ற மால்ட்டா மக்கள், அதே மரபைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மால்ட்டாவில், ஏப்ரல் 03, இஞ்ஞாயிறு மாலை 4.45 மணிக்கு, திருத்தந்தை புனித 23ம் யோவான் அமைதி மையத்திற்குச் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த மையம், 1971ம் ஆண்டில் பிரான்சிஸ்கன் அருள்பணி Dionysius Mintoff என்பவரால் உருவாக்கப்பட்டது. இம்மையம் எவ்விதப் பாகுபாடின்றி, புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும், கல்வி மற்றும், பல்வேறு உதவிகளை ஆற்றி வருகிறது. இந்நிகழ்வில் முதலில், தற்போது 91 வயதை எட்டியுள்ள அருள்பணி Mintoff அவர்கள், போர் மற்றும், வறட்சி காரணமாக புலம்பெயரும் மக்களுக்கு உதவுகின்ற தங்களது பணிகளுக்கு, திருத்தந்தை இம்மையத்திற்கு வந்தது ஊக்கமளிக்கின்றது என்று கூறினார். பின்னர், Daniel Jude Oukeguale, Siriman Coulibaly ஆகிய இரு புலம்பெயர்ந்தோர் தங்களின் சொந்தக் கதைகளையும், எதிர்கொள்ளும் சவால்களையும் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த டானியேல் என்பவர், மத்தியதரைக் கடல் வழியாக தான் மேற்கொண்ட படகுப் பயணத்தில் ஏற்பட்ட விபத்தைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்றை திருத்தந்தையிடம் கொடுத்தார். அதில் தன் நண்பர்களில் சிலர் இறந்ததையும் டானியேல் குறிப்பிட்டார். இவ்விருவரின் பகிர்வுகளுக்கு நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது கனிவான வரவேற்பு, உலகைக் காப்பாற்ற உதவ முடியும் என்று கூறினார்.

23ம் யோவான் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை
23ம் யோவான் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை

2021ம் ஆண்டு டிசம்பரில் லெஸ்போஸ் தீவுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபோது, அவர்களிடம், உங்களின் முகங்களைப் பார்க்கின்றேன், உங்களின் கண்களை உற்று நோக்குகின்றேன், உங்களின் துயரங்களை மறக்காமல் உங்களுக்காகச் செபிக்கின்றேன், எனது உடனிருப்பைத் தெரிவிக்கிறேன் என்று கூறினேன். அவற்றையே மீண்டும் உங்களிடம் கூறுகிறேன். கனிவு மற்றும், மனிதாபிமானம் ஆகிய பண்புகளைக் கொண்டிராமல் இருந்தால், அந்நிலை, புலம்பெயர்ந்தோரை மட்டுமல்லாமல், நம் அனைவரையும் ஒரு கலாச்சார கப்பல் சிதைவு அச்சுறுத்துவதை எதிர்கொள்வோம். திருத்தூதர் பவுலடியாரும், அவரோடு பயணம் மேற்கொண்டவர்களும், கப்பல் விபத்தை எதிர்கொண்டபோது, மால்ட்டா மக்கள் சிறந்த மனிதநேயத்தோடு அவர்களை வரவேற்றனர். இதே மரபைப் பின்பற்றி, இக்காலத்தில் தங்கள் நாட்டுக் கரைகளை வந்தடையும் பல்வேறு கலாச்சார மக்களை, மால்ட்டா மக்கள் வரவேற்கின்றனர். போருக்கு அஞ்சி உக்ரைன் நாட்டிலிருந்து கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களுக்கு உதவிவரும் இவ்வேளையில், ஆசியா, ஆப்ரிக்கா மற்றும், தென் அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பைத் தேடி வருகின்ற நம் சகோதரர் சகோதரிகளையும் நினைக்குமாறு அழைப்புவிடுக்கிறேன். கடல்பயணத்தில் இறக்கும் புலம்பெயர்ந்தோர் அனைவரையும், குறிப்பாக, அண்மை நாள்களில் லிபியக் கடற்கரையில் உயிரிழந்த 90 புலம்பெயர்ந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காகச் செபிக்கின்றேன். புலம்பெயர்ந்தோர் மையங்கள், கனிவன்பை, ஒரு மருந்தாகப் பயன்படுத்தும் அனுபவத்தைப் பெறுகின்றன. புலம்பெயர்ந்தோர் கூறுவதை தோழமையுணர்வோடு செவிமடுப்பதற்கு, இம்மையங்களுக்கு அதிகப் பொறுமை அவசியம். அனைவரின் மனித மாண்பை ஊக்குவிக்கும் பணியை தொடர்ந்து ஆற்றுங்கள்.

23ம் யோவான் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை
23ம் யோவான் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை

இவ்வாறு புலம்பெயர்ந்தோர் மையங்களில் பணியாற்றுவோரை ஊக்குவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் மத்தியில் உடன்பிறப்பு உணர்வுப் பற்றி எரியச்செய்வோம். இம்மையங்கள், அமைதியின் சோதனைக் கூடங்களாக மாறுவனவாக என்று வாழ்த்தினார். இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோருடன் சேர்ந்து, அன்னை மரியா திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஒன்றை ஏற்றிச் செபித்தார். இதுவே மால்ட்டா திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தை கலந்துகொண்ட இறுதி நிகழ்வாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2022, 15:59