நட்புணர்வை வளர்த்தல், போரின் கடுந்துயர்களுக்கு மாற்றுமருந்து
மேரி தெரேசா: வத்திக்கான்
பற்றுறுதி, மற்றும், நலமான போட்டி ஆகிய உணர்வுகளோடு விளையாடும்போது, வாழ்வு முன்வைக்கும் சவால்களைத் துணிவோடும், நேர்மையோடும் எதிர்கொள்ள அது உதவும் என்று, இளம் விளையாட்டு வீரர்களிடம், ஏப்ரல் 09, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் பெருநகரை மையமாகக் கொண்டு இயங்கும், Circolo Canottieri Tevere Remo என்ற விளையாட்டு மற்றும், கலாச்சார கழகம் ஆரம்பிக்கப்பட்டத்தின் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த அக்கழகப் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, விளையாட்டின் விழுமியங்கள் போரைத் தடுக்க உதவும் என்று கூறினார்.
இந்த 150ம் ஆண்டு நிறைவு, சமுதாயம், உரோம் மற்றும், லாட்சியோ மாநிலத்தில் இக்கழகத்தினரின் இருப்பு குறித்து சிந்திப்பதற்கு நல்லதொரு வாய்ப்பை வழங்குகிறது என்றுரைத்த திருத்தந்தை, இக்கழகத்தைச் சேர்ந்த அனைத்து வயதினருக்கும், குறிப்பாக இளையோருக்கு, மனித வாழ்வு முன்வைக்கும் தடைகளிலே நின்றுவிடாமல், கடவுளிலும், தங்களிலும் நம்பிக்கை வைத்து மனஉறுதியோடு இன்னல்களை எதிர்கொள்வதற்கும், பிறருக்கு உதவுவதற்கும் கற்றுக்கொடுக்கப்படவேண்டியது முக்கியம் என்று கூறினார்.
விளையாட்டு வழியாக, நலமான போட்டி, நட்பு மற்றும், ஒருமைப்பாடு ஆகிய விழுமியங்களை ஊக்குவிப்பதற்கும், ஒருங்கிணைந்த மனித ஆளுமையை வளர்ப்பதற்கும் இக்கழகத்தினர் அழைப்புப் பெற்றுள்ளனர் என்று கூறியத் திருத்தந்தை, பல ஆண்டுகளாக உருவாக்கும் பயிற்சிக் களமாக அமைந்திருக்கும் இக்கழகத்தின் கடமைகளையும் எடுத்துரைத்தார்.
உண்மை, நீதி, படைப்பின் அழகு மற்றும், நன்மைத்தனத்தை சுவைத்து, அதனை மதித்தல், சுதந்திரம், அமைதியைத் தேடுதல் போன்ற விளையாட்டின் பல்வேறு நன்னடத்தைகளில் சிறாருக்கும், இளையோருக்கும் பயிற்சி அளிக்குமாறு இக்கழகத்தினரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பல நேரங்களில் விளையாட்டு உலகம், இலாபம் மற்றும், தீமையைத் தூண்டிவிடுகின்ற போட்டி உணர்வுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது, இந்நிலை வன்முறைகளுக்குக் காரணமாகின்றது எனவும் குறிப்பிட்டார்.
Circolo Canottieri Tevere Remo கழகத்தின் செயல்பாடுகள் போன்று, விளையாட்டுகள், நன்னெறி விதிமுறைகளுக்குச் சான்று பகர்ந்தால், மற்றும், அவை சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், அவை, பலனுள்ள நட்புணர்வை உருவாக்கவும், ஒருவர் ஒருவருக்கு ஆதரிவளித்து உதவுகின்ற உடன்பிறந்த உணர்வு கொண்ட அமைதியான ஓர் உலகை கட்டியெழுப்பவும் உதவும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கழகத்தினரின் பணிகளை ஊக்குவித்து அவர்களுக்கு தன் ஆசிரையும் அளித்தார்.
1872ம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று, Guglielmo Grant, Guglielmo Serny ஆகிய இருவரும் Società Ginnastica dei Canottieri del Tevere என்ற கழகத்தை உருவாக்கினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்