Ta’ Pinu அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை Ta’ Pinu அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தை 

Ta’ Pinu அன்னை மரியா திருத்தலத்தில் திருத்தந்தையின் மறையுரை

இயேசுவின் இறுதி மரண நேரம் என்பது, ஒரு புதிய வாழ்வுக்கான வழியை நமக்குத் திறக்கிறது. இந்தப் புதிய வாழ்வு என்பது திருஅவை ஆகும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஏப்ரல் 3, ஞாயிறன்று, மால்ட்டாவின் வலேட்டா தீவிலுள்ள Ta’ Pinu அன்னை மரியா தேசிய திருத்தலத்தில் நடந்த இறைவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.  

அன்பான சகோதரர் சகோதரிகளே, அன்னை மரியாவும் யோவானும் சிலுவை அடியில் நின்றார்கள். இயேசுவை ஈன்றெடுத்த அன்னை மரியாவும் அவரது மரணத்தால் மிகவும் துயருற்றார். இயேசுவுக்காய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த அவரது சீடர்களும் வருந்தினர். எல்லாமே இழக்கப்பட்டுவிட்டதாகவும், முடிந்துபோய்விட்டதாகவும் தோன்றியது. சிலுவையில் தொங்கிய இயேசுவின் மரண நேரம் என்பது, வரலாற்றின் முடிவைக் குறிக்கவில்லை. மாறாக, அது புதிய வாழ்வுக்கான ஒரு தொடக்கத்தைக் குறித்துக் காட்டுகிறது. சிலுவையில், தன் இருகரங்களையும் விரித்து, தனது மரணத்தின் வழியாக மகிழ்ச்சி நிறைந்த என்றுமுள்ள வாழ்வுக்கு நம்மை அழைக்கும் இயேசுவின் இரக்கம்நிறை அன்பை நாம் தியானிக்கின்றோம். இயேசுவின் இறுதி மரண நேரம் என்பது, ஒரு புதிய வாழ்வுக்கான வழியை நமக்குத் திறக்கிறது. இந்தப் புதிய வாழ்வு என்பது, திருஅவை ஆகும். சிலுவையடியில் நின்ற அன்னை மரியா, யோவான் ஆகிய இருவர் வழியாக, இயேசு மக்களை ஒன்று திரட்டி இரக்கம் நிறைந்த புதிய வரலாற்றுப் பாதையைத் தொடங்குகிறார்.

கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றுதல்

அன்னை மரியாவின் பாதுகாப்பைப் பெறும் இந்தத் திருத்தலத்திலிருந்து இயேசுவின் சிலுவையடியில் தொடங்கிய புதிய வாழ்வைக் குறித்து சிந்திப்போம். இங்கே, நாம் காணும் இந்த அற்புதமான கட்டடம், முன்பு ஒரு சிறிய ஆலயமாக சிதைந்த நிலையில் இருந்தது. அதனை இடிப்பதற்கு ஆணையிடப்பட்டது. அப்போது, அது முடிவாகத் தோன்றியிருக்கலாம். அன்று சிறிய ஆலயமாக இருந்தது, இப்போது தேசிய திருத்தலமாகவும், திருப்பயணிகளுக்கான ஒரு புனித இடமாகவும், புதிய வாழ்வுக்கான ஆதாரமாகவும் மாறியுள்ளது. இதனை மையமாகக் கொண்டு நமது தனிப்பட்ட வாழ்வுக்கான இயேசுவின் அந்த இறுதி நேரம் குறித்து சிந்திப்போம்.

மீட்பை வழங்கும் இயேசுவின் அந்த இறுதி நேரம் என்பது, நமது நம்பிக்கையையும் நமது பொதுவான பணியையும் புதுப்பிப்பதற்காக, நாம் திருஅவையின் மூலத்திற்கு அதாவது தொடக்கத்திற்குத் திரும்பவேண்டும் என்று அறிவுறுத்துகின்றது. ‘மூலத்திற்குத் திரும்புவது’ என்றால் என்ன? தொடக்ககால கிறிஸ்தவ சமூகத்தின் உற்சாகத்தை மீட்டெடுப்பது, அன்புநிறை வாழ்வுக்குத் திரும்புவது மற்றும் நம்பிக்கையின் மையத்தை மீண்டும் கண்டுபிடிப்பது, இயேசுவுடனான நமது உறவு மற்றும் அவரது நற்செய்தியை உலகம் முழுவதும் பறைசாற்றுவது ஆகிய இவையே இன்றியமையாதவை என்பதை உணந்துகொள்வதே, ‘மூலத்திற்குச் திரும்புவது’ என்று பொருள்படுகிறது. இயேசுவின் அந்த இறுதி நேரத்திற்குப் பின்பு,  மகதலா மரியாவும் யோவானும் வெற்றுக் கல்லறையைக் கண்டதும் ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ என்ற நற்செய்தியை அறிவிக்க விரைந்தனர். அதாவது, சமுதாயத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதிலோ, அந்தச் சமுதாயத்தில் ஆற்றும் பணிகளுக்கான கெளரவத்தை நாடுவதிலோ, சமுதாயத்தில் உயர்வான மதிப்பை அடைவதிலோ, மற்றும், வழிபாடுகளில் முக்கியத்துவம் பெறுவதிலோ அக்கறை காட்டாமல் கிறிஸ்துவின் நற்செய்தியை பறைசாற்றுவதில் மட்டுமே இயேசுவின் சீடர்கள் தங்களின் ஒட்டுமொத்த அக்கறையையும் வெளிப்படுத்தினர். (காண்க உரோ 1:1)

வரவேற்கும் கலையை வளர்த்துக்கொள்வது

இரண்டாவதாக, மீண்டும் தொடக்கத்திற்குச் செல்வது என்பது, வரவேற்கும் கலையை வளர்த்துக்கொள்வதாகும். தனது இறப்பிற்குப் பிறகு தன் அன்னை தனியாளாய்த் தவிக்கக்கூடாது என்பதை எண்ணி அவரை யோவானிடம் ஒப்படைக்கிறார் இயேசு. அந்நேரமே, யோவான் அன்னை மரியாவைத் தம் வீட்டிற்கு வரவேற்று ஆதரவு அளிக்கிறார் (யோவா 19:26-27). திருஅவையில் சகோதர அன்பும், அடுத்திருப்போருக்கு நாம் காட்டவேண்டிய வரவேற்பும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதன்வழியாக அறிந்துகொள்வோம். அன்பான சகோதரர் சகோதரிகளே, ஒருவருக்கொருவர் காட்டும் வரவேற்பு என்பது, எதோ கடமைக்கானது அல்ல, மாறாக, கிறிஸ்துவின் பெயரில், அது ஒரு நிரந்தர சவாலாகவே அமைந்துள்ளது. முதலில், இது நமது திருஅவை உறவுகளுக்கு ஒரு சவாலாக உள்ளது என்பதை அறிவோம். ஏனென்றால், நட்பு மற்றும் உடன்பிறந்த உணர்வுநிலையில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால்தான் நமது நோக்கம் பலனளிக்கும்.

அன்னை மரியா மற்றும் யோவானைப் போலவே, நீங்களும் மால்ட்டா மற்றும் கோசோ ஆகிய இரண்டு அழகான சமூகங்களாக இருக்கிறீர்கள். அப்படியானால், சிலுவையில் இயேசு கூறிய வார்த்தைகள், நீங்கள் ஒருவரையொருவர் வரவேற்கவும், ஒருவர் ஒருவருக்கான உறவை வளர்க்கவும், ஒற்றுமையுடன் செயல்படவும் உங்களை வழிநடத்தும் துருவ நட்சத்திரமாக அமையட்டும்!  எப்போதும் ஒன்றாக முன்னோக்கி செல்லுங்கள்!

குறிப்பாக, வரவேற்பு என்பது, உண்மையிலேயே நற்செய்தி அறிவிப்பு என்பதை அளவிடுவதற்கான ஒரு சவாலாகவும் அமைகிறது. அதாவது, நற்செய்தி அறிவிப்பு என்பது திருஅவைக்கு வெளியே பல்வேறு மக்கள் வறுமை, துன்பம், வேதனை வன்முறை ஆகியவற்றால் சிலுவையில் அறையப்பட்டு துன்புற்றுக் கொண்டிருக்கும்போது, திருஅவைக்குள் வசதியான வாழ்க்கை அமைப்புகளைப் பெறுவதல்ல. மாறாக, அவர்களின் துன்ப துயரங்களில் அவர்களோடு ஒன்றாக உடன்பயணிப்பது என்பதே மிகவும் முக்கியமானது. இதுதான் உண்மையான நற்செய்தி அறிவிப்புப்பணி. இந்த நற்செய்தியை நடைமுறைப்படுத்தவே நாம் அழைக்கப்படுகிறோம்.

இறுதியாக, நீங்கள் ஒரு சிறிய தீவாக இருந்தாலும், மிகச்சிறந்த இதயம் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் திருஅவையிலும் திருஅவைக்காகவும் ஒரு கருவூலமாகவும் இருக்கிறீர்கள். அந்தக் கருவூலத்தைப் பாதுகாக்க, கடவுளின் அன்பு, நற்செய்தியை பறைசாற்ற நம்மை அழைக்கும் மகிழ்ச்சியின் உந்துசக்தி, நமக்கு அடுத்திருப்போருக்கு நாம் காட்டவேண்டிய அன்பு,  உலகினர் முன்பு  நாம் கொடுக்கக்கூடிய எளிமையான மற்றும், மனதைக் கவரும் சாட்சிய வாழ்வு ஆகிய கிறிஸ்தவத்தின் அடிப்படை கூறுகளுக்கு நீங்கள் திரும்ப வேண்டும். உங்களின் இந்தப் பாதையில் ஆண்டவர் இயேசு உங்களுடன் உடன்பயணிப்பாராக! அன்னை மரியா, உங்களின் பயணத்தில் உங்களை வழிநடத்துவாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2022, 15:29