திருத்தூதர் பவுல் தங்கியிருந்த அடிநிலக் கெபியில் திருத்தந்தை
மேரி தெரேசா: வத்திக்கான்
ஏப்ரல் 03, இஞ்ஞாயிறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது மற்றும், நிறைவு நாளும் ஆகும். இரண்டு நாள்கள் கொண்ட மால்ட்டா திருத்தூதுப் பயணத்தில், இரண்டாவது நாளாகிய இஞ்ஞாயிறு காலை 7.45 மணிக்கு, வலேட்டா நகரின் திருப்பீடத் தூதரகத்தில், அந்நாட்டில் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்தித்து உரையாடினார், இயேசு சபையைச் சேர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ். இச்சந்திப்பை முடித்து, அத்தூதரகத்திலிருந்து 1.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ராபாட் நகருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தூதர் பவுலடியார் அடிநிலக் கெபி
கி.பி. 60ம் ஆண்டில், திருத்தூதர் பவுலடியார், கைதியாக உரோமைக்கு வந்த கப்பல் பயணத்தில், கடலில் உருவாகிய பேய்ப்புயலில் கப்பல் சிக்கி சேதமடைந்தது. அவ்வேளையில் பவுலடியார் கடலில் நீந்திவந்து கரை ஒதுங்கிய இடம் மால்ட்டா தீவின் ராபாட் (Rabat) நகர கடற்கரை. அச்சமயத்தில் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது விரியன் பாம்பு ஒன்று அவரது கையைப் பற்றிக்கொண்டது. அவர் அதை உதறிவிட்ட பிறகு, வெகுநேரம் ஆகியும் அவர் நலமாக இருந்ததைப் பார்த்த மக்கள் வியப்புற்று, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லத் தொடங்கினர். பவுலடியாரும் அங்கு மூன்று மாதங்கள் தங்கி, மால்ட்டா மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார், புதுமைகள் பல ஆற்றினார், மற்றும், கிறிஸ்தவத்தின் விதைகளை விதைத்தார். மேலும், அச்சமயத்தில் அப்பகுதியின் ஆளுநராக இருந்தவரின் தந்தையான புனித புப்பிலியு என்பவர் உட்பட, பல்வேறு மக்களுக்கு புனித பவுல் குணமளித்தார் என்று திருத்தூதர் பணிகள் நூலில் (தி.ப.28) வாசிக்கிறோம். அச்சமயத்தில் அவர் தங்கியிருந்த இடம்தான், இப்போதுள்ள புனித பவுல் அடிநிலக் கெபியாகும். இக்கெபி, ராபாட் நகரில் அமைக்கப்பட்டுள்ள அழகிய புனித பவுல் பசிலிக்காவிற்குக்கீழ் அமைந்துள்ளது. இவ்விடம் தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்தவர்களின் வழிபாட்டு இடமாக உள்ளது. 1990ம் ஆண்டு மே 27ம் தேதி திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், 2010ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், இந்த புனித பவுல் அடிநிலக் கெபிக்குச் சென்று செபித்துள்ளனர்.
ராபாட் புனித பவுல் பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி
ஏப்ரல் 03, இஞ்ஞாயிறு காலை 8.30 மணியளவில், அதாவது இந்திய இலங்கை நேரம் பகல் 12 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ராபாட் நகரில் அமைந்துள்ள திருத்தூதர் பவுல் அடிநிலக் கெபிக்குச் சென்று செபித்து, வேண்டுதல் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார். வெள்ளி மற்றும், பித்தளை கனிமங்களாலான 120 செ.மீ. உயரமுள்ள விளக்குத் தண்டையும், மூன்று கிளைகளையும் கொண்டிருக்கும் இவ்விளக்கின் அடிப்பாகத்தில் “PAX” அதாவது அமைதி என்றும், அதன் மேல்பாகத்தில் திருத்தந்தையின் தலைமைப்பணி விருதுவாக்கு இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளன. மால்ட்டா மக்கள் அதிகமாகத் திருப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் ஒன்றான இக்கெபியில் திருத்தந்தை இறைவேண்டல் செய்தார். புனித பவுல் அடிநிலக் கெபியில் செபித்தபின்னர், தங்கப் புத்தகத்திலும் திருத்தந்தை கையெழுத்திட்டார். புறவினத்தாரின் திருத்தூதரும், இம்மக்களின் நம்பிக்கையின் தந்தையுமாகவும் நினைவுகூரப்படும் இப்புனிதருக்காக, ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன். ஆறுதலின் உணர்வு மற்றும், நற்செய்தி அறிவிப்பில் பேரார்வம் ஆகியவற்றை மால்ட்டா மக்களுக்கு எப்போதும் வழங்குமாறு அப்புனிதரிடம் மன்றாடுகிறேன் என்று திருத்தந்தை அப்புத்தகத்தில் எழுதினார். பின்னர், புனித பவுல் பசிலிக்காவுக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமயத் தலைவர்கள் 14 பேரையும், நோயாளிகள் சிலரையும் சந்தித்து ஆசிர்வதித்தார். அதற்குப் பின்னர், அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஃபிளோரியானா நகரின் கிரனாய் வளாகத்திற்குச் சென்றார் திருத்தந்தை. அங்கு அமர்ந்திருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் மத்தியில் திறந்த காரில் வலம்வந்து, இஞ்ஞாயிறு திருப்பலியை ஆரம்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். யோவான் நற்செய்தி, பிரிவு 8ல் பதிவுசெய்யப்பட்டுள்ள விபசாரத்தில் பிடிபட்ட பெண் பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி திருத்தந்தை மறையுரையாற்றினார். இத்திருப்பலியின் இறுதியில் மால்ட்டா பேராயர் Scicluna அவர்கள், மால்ட்டா மக்கள் சார்பாக, திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறு மாலையில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தபின் உரோம் நகருக்குப் புறப்படுவது திருத்தந்தையின் இஞ்ஞாயிறு பயணத்திட்டத்தில் உள்ளது. இத்துடன் திருத்தந்தையின் மால்ட்டா நாட்டு, மற்றும், 36வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வருகிறது. இயேசுவோடு இருக்கும் போது, புதிய மற்றும், வித்தியாசமான ஒரு வாழ்வு எப்போதும் இயலக்கூடியதே என்றுகூறி, இந்நாள்களில் மால்ட்டா மக்களை நம்பிக்கையில் ஆழப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்