மால்ட்டா அரசுத்தலைவர் George William Vella மால்ட்டா அரசுத்தலைவர் George William Vella 

மால்ட்டா அரசுத்தலைவர் Vella அவர்களின் வரவேற்புரை

உக்ரைன் போர், உலகளாவிய அரசியல் அமைப்பிற்கும், நம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. திருத்தந்தையே, தங்களோடு நானும் இணைந்து, இப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன் – மால்ட்டா அரசுத்தலைவர் Vella

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தையே, இத்திருத்தூதுப் பயணத்திற்காக நீண்டகாலமாக மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தோம். மால்ட்டாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க உறவுகள் நாளுக்கு நாள் வலிமை பெற்று வரும் இவ்வேளையில் இத்திருத்தூதுப் பயணம் நடைபெறுவது ஆறுதலளிக்கிறது. உலகளாவிய சமுதாயத்தின் நலவாழ்வு, பொருளாதாரம் போன்றவற்றை அதிகமாகப் பாதித்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று, மனித ஒருமைப்பாட்டுணர்வுப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, புதியதொரு உலகளாவியத் தோழமையை ஏற்கவேண்டிய இக்காலக்கட்டத்தில், உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், உலகளாவிய அரசியல் அமைப்பிற்கும், நம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்போரால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை ஆற்றிவரும் அதேநேரத்தில்,   திருத்தந்தையே, தங்களோடு நானும் இணைந்து, இப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். எமக்கு அருகிலுள்ள மத்தியதரைக் கடல் பகுதியும், சிரியா மற்றும், ஏமன் நாடுகளிலும் கடும் பிரச்சனைகள் நிலவுகின்றன. எமது பகுதியிலும், உலகெங்கிலும் ஆயுதக்களைவு இடம்பெறுவதையும், ஆயுதப்பரவல் தடைசெய்யப்படுவதையும் தங்களோடு சேர்ந்து நாங்களும் காண விரும்புகிறோம்.

திருத்தந்தையே, நம் பூமிக்கோளம் நோயுற்றுள்ளது. அது, கோபமும் சோர்வும் அடைந்துள்ளது. எனினும், சுற்றுச்சூழல் அழிவு, காலநிலை மாற்றம் ஆகியவை வெளிப்படுத்தும் அடையாளங்களை மறந்து, பூமிக்கோளத்தின் வளங்களை முறையின்றி நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையைப் புறக்கணிக்கும் சோதனை வலுவாக உள்ளது. திருத்தந்தையே, புலம்பெயர்ந்தோர் பிரச்சனையும் நம் மனதை வாட்டுகின்றது. இச்சூழலில், ஒருவர் ஒருவர் மீது நம்பிக்கை ஏற்படுவது பற்றியும், தலைமுறைகளுக்கு இடையே பரிமாற்றங்கள் மற்றும் உரையாடல் இடம்பெறுவது பற்றியும், கல்வி, போதனை மற்றும், அமைதிக்கு இடையேயுள்ள தொடர்பு பற்றியும், ஒன்றிணைந்து நடப்பது பற்றியும்...மனித வாழ்வின் துவக்கம் முதல் இறுதிவரை அதன் புனிதத்துவம் பற்றியும் நாம் உரையாடத் தொடங்கலாம். இவ்வாறு பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசி, இறுதியில் மால்ட்டீஸ் மொழியில் அவருக்கு நன்றியும், நல்வாழ்த்தும் கூறினார், மருத்துவரான மால்ட்டா அரசுத்தலைவர் George William Vella அவர்கள்.

மால்ட்டா அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு நன்றி சொல்கிறார்
மால்ட்டா அரசுத்தலைவர் திருத்தந்தைக்கு நன்றி சொல்கிறார்

இவ்வுரைக்குப் பின்னர் திருத்தந்தையும் மால்ட்டா நாட்டுக்குத் தன் முதல் உரையைத் துவக்கினார். இந்நிகழ்வில் கர்தினால் பியெத்ரோ பரோலின், கர்தினால் மாரியோ கிரெக் போன்றோர் உள்ளிட்ட திருப்பீட மற்றும், தலத்திருஅவையின் உயர் அதிகாரிகளும், இருபால் துறவியரும் பங்குபெற்றனர். அம்மாளிகையின் வெளிப்புறத்தில் ஏராளமான மக்கள் அமர்ந்திருந்து, திருத்தந்தையின் உரையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2022, 16:49