கல்வி குறித்த புதிய ஓர் ஒப்பந்தம் உலகிற்குத் தேவைப்படுகிறது
மேரி தெரேசா: வத்திக்கான்
கல்வியில் புதியதோர் அவசரகாலச் சூழல் எதிர்கொள்ளப்பட்டுவரும் இன்றைய உலகில், கல்வி வழியாக நற்செய்தி பணியாற்றிவரும் கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள்சகோதரர்கள், தங்களின் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுமாறு ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்தவப் பள்ளிகளின் அருள்சகோதரர் சபையின் (FCS) 46வது பொதுப் பேரவையில் பங்குபெற்றுவரும் நூறு பிரதிநிதிகளுக்கு, மே 21, இச்சனிக்கிழமையன்று உரையாற்றிய திருத்தந்தை, கல்வி குறித்த புதிய ஓர் ஒப்பந்தம் உலகிற்குத் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தெ லா சாலே அருள்சகோதரர்கள் என்று பொதுப்படையாக அறியப்படும் இச்சபையின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை, “வாழ்க்கையில் மாற்றம் கொணர்வதற்கு புதிய பாதையைக் கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பில் இப்பொதுப் பேரவை நடைபெறுவதைக் குறிப்பிட்டு, தெ லா சாலே அருள்சகோதரர்களுக்கு, இப்புதிய பாதைகள் என்பது, எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியின் பாதைகள் என்று கூறினார்.
17ம் நூற்றாண்டில் புனித Jean-Baptiste de La Salle என்பவரால் தொடங்கப்பட்ட இச்சபை, கத்தோலிக்கத் திருஅவையில், கல்விக்கென அர்ப்பணித்துள்ள மிகப் பெரிய சபையாகும். இச்சபையினர் உலகில் ஏறத்தாழ நூறு நாடுகளில் பல பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை நடத்தி வருகின்றனர்.
கல்விப் பணி ஒரு கொடை
கல்விப் பணி, குறிப்பாக அப்பணியை ஆற்றுகின்றவர்களுக்கு அது மிகப்பெரிய கொடை என்பதால், பெரிய பொறுப்புநிறைந்த இப்பணிக்கு நாம் நன்றியோடு இருக்கவேண்டும், இப்பணி மிகவும் சவால்நிறைந்தது, அதேநேரம், மிகுந்த பலன்களையும் அளிக்கின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்
மனிதர், திருஅவையின் வழி
பெற்றோர், குறிப்பாக சிறார், மற்றும் இளையோரோடு, கல்வியாளர்கள், அனைத்து இடர்களுக்கு மத்தியில் தொடர்ந்து உறவு வைத்திருப்பது, மனித சமுதாயத்திற்கு என்றென்றும் இருக்கின்ற உயிருள்ள ஊற்றாக உள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை, மனிதர், திருஅவையின் வழி என்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் விருதுவாக்கு நினைவுக்கு வருகின்றது என்று எடுத்துரைத்தார்.
இந்த விருதுவாக்கை இச்சபையினர் தங்களின் கல்விப் பணியில் நடைமுறைப்படுத்துகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இக்காலத்தில் கல்விப் பணியில் எதிர்கொள்ளப்படும் அவசரகால நிலையையும் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்