புலம்பெயர்ந்தோர் & குடிபெயர்ந்தோர் தினத்திற்கான திருத்தந்தையின்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இவ்வாண்டு செப்டம்பர் 25ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின் 108வது உலகத் தினத்திற்கான செய்தி ஒன்றை மே 12, இவ்வியாழனன்று வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்த்தோருடன் நம் எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.
அண்மைய காலத்தின் இன்னல்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டவற்றின் ஒளியில், அனைவரும் அமைதியுடனும் மனிதமாண்புடனும் வாழக்கூடிய உலகத்திற்கான கடவுளின் திட்டத்திற்கு இன்னும் முழுமையாக இணங்கிப்போகும் நல்லதொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்புதுப்பித்துக்கொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று விளக்கியுள்ளார்.
கடவுளின் திட்டம் என்பது, அடிப்படையில் யாரும் ஒதுக்கப்படக் கூடாது என்பதை உள்ளடக்கியுள்ளது என்றும், சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவர்களில் பலர் புலம்பெயர்ந்தோராகவும், குடிபெயர்ந்தோராகவும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடவுளுடைய இறையாட்சி என்பது அவர்களுடன் இணைந்து கட்டப்பட வேண்டும், ஏனென்றால் அவர்கள் இல்லாமல் அது கடவுள் விரும்பும் இறையாட்சியாக இருக்க முடியாது என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுடைய இறையாட்சியில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைச் சேர்ப்பதுதான் அவரது இறையாட்சின் முழு குடியுரிமைக்காண அவசியமான நிபந்தனையாகும் என்றும் கூறினார்.
நாம் நமது பொதுவான மனித நேயத்தில் வளரவேண்டும் என்றும், எப்போதும் இல்லாத ஒற்றுமை உணர்வை உருவாக்க வேண்டும் என்றும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், நம்மிடமுள்ள வெளிப்படைத்தன்மை என்பது ஒருவர் ஒருவருக்கிடையே பல்வேறு பயனுள்ள பரிமாற்றத்தினை உருவாக்குவதுடன் புதிய எல்லைகளுக்கு நம் மனங்களைத் திறக்கிறது என்றும் கூறினார்.
எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நமது விண்ணகத் தந்தையுடன் ஒத்துழைக்க விரும்பினால், புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோராக இருக்கும் நமது சகோதர சகோதரிகளுடன் இணைந்து அதனைச் செய்வோம் என்றும் தெரிவித்து தனது செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்