புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் ஆறுதல் செய்தி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடாவில் சூறாவளியால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் அழிவுகளை அறிந்து தான் மிகவும் வருந்துவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்கா ஐக்கிய நாட்டின் மிக்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட்டிற்கு மேற்கே ஏறத்தாழ 4,200 பேர் வாழும் நகரமான கெய்லார்டில் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக் குறித்து அதன் ஆயர் ஜெஃப்ரி ஜே. வால்ஷுக்கு அனுப்பியுள்ள தந்தி செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, இந்த இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இதயப்பூர்வமான நெருக்கத்தைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் பெயரில் தான் கையெழுத்திட்டு இத்தந்தி செய்தியை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கனடா கத்தோலிக்க ஆயர்பேரவையின் தலைவர் Raymond Poisson அவர்களுக்கு அனுப்பியுள்ள தனி தந்தி செய்தியில், தென்கிழக்கு கனடாவைத் தாக்கிய அண்மைய புயல்கள் உயிர் இழப்பு மற்றும் பரவலான அழிவை ஏற்படுத்தியது குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இறந்தவர்கள் நிறையமைதி அடைய செபிப்பதாகவும், காயமடைந்தவர்கள், பயத்திலிருப்பவர்கள் அனைவருக்கும் தனது செப நெருக்கத்தைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள தனது சகோதர ஆயர்களுக்கும், தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கும் குடிமக்களின் அதிகாரிகளுக்கும் வலிமை மற்றும் ஆறுதல் நிறைந்த தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்து இத்தந்தி செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 20, கடந்த வெள்ளியன்று, வடக்கு மிக்சிகனில் ஏற்பட்ட சூறாவளியால் இரண்டு பேர் மரணித்ததுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் இப்புயலால் பல பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்