செபமாலை செபிக்கும் திருத்தந்தை செபமாலை செபிக்கும் திருத்தந்தை  

உலகின் அமைதிக்காக செபமாலை செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு

உலகின் அனைத்து அன்னை மரியா திருத்தலங்களும் செபமாலை பக்திமுயற்சி நிகழ்வில் இணைந்து, அமைதியின் அரசியிடம், அமைதி எனும் கொடையை அருளுமாறு மன்றாட திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மே 29, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின், அங்கு கூடியிருந்த திருப்பயணிகளிடம், அமைதிக்காக செபமாலை பக்திமுயற்சியை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தின் கடைசி நாளாகிய மே 31, இச்செவ்வாயன்று, உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலில் மாலை 6 மணிக்கு, தான் தலைமையேற்று நிறைவேற்றவிருக்கும் வழிபாட்டில், அமைதிக்காகத் செபிக்கவிருக்கும் செபமாலை பக்தி முயற்சியில் அனைவரும் இணையுமாறு திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.

இச்செபமாலை பக்திமுயற்சியில் உலகின் அனைத்து அன்னை மரியா திருத்தலங்களும் இணைந்து, அமைதியின் அரசியிடம், அமைதி எனும் கொடையை அருளுமாறு மன்றாடுமாறு விண்ணப்பித்த திருத்தந்தை, இதில் அனைத்துக் குடும்பங்கள், குழுமங்கள், விசுவாசிகள் என எல்லாரும் இணையுமாறும் கேட்டுக்கொண்டார்.

உலக சமூகத்தொடர்பு நாள்

மேலும், கத்தோலிக்கத் திருஅவை மே 29, இஞ்ஞாயிறன்று உலக சமூகத்தொடர்பு நாளைச் சிறப்பித்ததைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் ஒருவருக்கு, மிகுந்த கவனத்தோடு செவிமடுக்குமாறு வலியுறுத்திக் கூறினார்.

இவ்வாண்டு சனவரி மாத இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்தின் காதோடு செவிமடுத்தல் என்ற தலைப்பில், உலக சமூகத்தொடர்பு நாள் செய்தியை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாரும், இதயங்களோடு செவிமடுக்க கற்றுக்கொள்வார்கள் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்த திருத்தந்தை, செவிமடுக்க கற்றுக்கொள்வது, உரையாடல் மற்றும், நல்ல சமூகத்தொடர்புக்கு இன்றியமையாததாகும் என்றும் கூறியுள்ளார்.   

அருளாளர் Luigi Lenzini

இத்தாலியில் மே 28, இச்சனிக்கிழமை மாலையில், மறைசாட்சி அருள்பணி Luigi Lenzini அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்டது, மற்றும், இத்தாலியில் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட தேசிய பராமரிப்பு நாள் ஆகிய இரண்டையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளியின் நோயைவிட அந்த மனிதர் முக்கியம் என்பதை எடுத்துரைத்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 May 2022, 15:26